மற்ற போர்கள் பற்றி...
1186. முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். 'தூகரத்' என்னுமிடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரிய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, 'இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன'' என்று கூறினான். நான், 'அவற்றை யார் பிடித்துச் சென்றது?' என்று கேட்டேன். அதற்கவன், 'கத்ஃபான் குலத்தார்'' என்று பதில் சொன்னான். உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, 'யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக் கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். 'நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப்போகும்) நாள்'' என்று (பாடியபடி) கூறிக் கொண்டே அவர்களின் மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் 'ரஜ்ஸ்' எனும் யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன். (அவர்களை நான் விரட்டிச் சென்ற போது) அவர்கள்விட்டுவிட்டுப் போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக் கொண்டேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்(து சேர்ந்த)னர். நான், 'இறைத்தூதர் அவர்களே! அந்தக் கூட்டத்தினர் தாகமுடன் இருந்த போதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்து விட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச் சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அக்வஃ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். எனவே, மென்மையாக நடந்து கொள்'' என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிற்குத்) திரும்பி வந்தோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.
No comments:
Post a Comment