நபி(ஸல்)அவர்கள் கலந்து கொண்ட போர்கள்.
1188. அப்துல்லாஹ் இப்னு யஸீது (ரலி) (மழைத் தொழுகை நடத்தப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் பராஃ (ரலி), ஜைத் இப்னு அர்கம் (ரலி) ஆகியோரும் சென்றனர். அப்துல்லாஹ் இப்னு யஸீது (ரலி) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். மிம்பரில் ஏறாமல் தரையில் நின்று உரை நிகழ்த்தினார்கள். பின்னர் பாவமன்னிப்புத் தேடினார்கள். பிறகு சப்தமாக ஓதி, இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பாங்கும் இகாமத்தும் சொல்லவில்லை.
புஹாரி: 1022 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி).
1189. நான் ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி (ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி (ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு'' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி :3949 அபூ இஸ்ஹாக் (ரலி).
1190. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் பதினாறு புனிதப் போர்களில் கலந்துகொண்டேன்.
புஹாரி : 4473 புரைதா (ரலி).
1191. நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன். அவர்கள் அனுப்பிக் கொண்டிருந்த படைப் பிரிவுகளில் பங்கெடுத்த ஒன்பது புனிதப் போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒரு முறை எங்களுக்கு அபூ பக்ர் (ரலி) தளபதியாக நியமிக்கப்படடிருந்தார்கள். ஒரு முறை எங்களுக்கு உஸாமா (ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
புஹாரி : 4270 ஸலமா பின் அக்வஹ் (ரலி).
No comments:
Post a Comment