ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவர்
எந்த வித சந்தேகமுமின்றி ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவாறு அல்லாஹ்வைச் சந்திப்பவர் சுவனில் நுழைவார். அவரை நரக நெருப்பு தீண்டாது.
17- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றும் ஈஸா(அலை)அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என்றும் அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன(ஆகுக! என்னும்) ஒரு வார்த்தை(யால் பிறந்தவர்)என்றும், அவனிடமிருந்து(ஊதப்பட்ட)ஓர் உயிர்,என்றும்,சொர்க்கம் (இருப்பது)உண்மை தான், என்றும்,எவர்(சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகின்றாரோ அவரை அல்லாஹ் அவரது செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் புகுத்துவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி-3435: உபாதா(ரலி)
18- (ஒரு முறை) நான் நபி(ஸல்)அவர்களுக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். எனக்கும் நபிகளாருக்கும் இடையே(ஒட்டகச்)சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டை தவிர வேறெதுவும் இருக்கவில்லை.(அந்த அளவுக்கு நெருக்கத்தில் நான் இருந்தேன்.) அப்போது நபி(ஸல்)அவர்கள் முஆதே! என்று அழைத்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்.(கூறுங்கள்)என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் முஆத் பின் ஜபலே! என அழைத்தார்கள். நான் (அப்போதும்)அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)என்று பதிலளித்தேன். நுபி(ஸல்)அவர்கள் அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிpமை என்ன என்பதை நீர் அறிவீரா! என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவருடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன். நபி(ஸல்)அவர்கள் அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன வென்றால் அவர்கள் அவனையே வணங்கிட வேண்டும் அவனுக்கு எதனையும் (எவரையும்)இணை வைக்கக்கூடாது என்று கூறினார்கள். பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் முஆது பின் ஜபலே! என்று அழைத்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன்.(கூறுங்கள்)என்று சொன்னேன். நபி(ஸல்)அவர்கள் அடியார்கள் அதை நிறை வேற்றினால் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள், என்று சொன்னேன். ஆடிபார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்னவென்றால், அவர்களை அவன் (மறுமையில)வேதனைப் படுத்தாமல் இருப்பதாகும் என்று சொன்னார்கள்.
புகாரி-6500: முஆத் பின் ஜபல்(ரலி)
19- நான் நபி(ஸல்)அவர்களுக்குப் பின்னால் உஃபைர் என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா? என்று (என்னிடம்)கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று பதில் கூறினேன். நபி(ஸல்)அவர்கள், மக்கள் மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்னவென்றால்,அவர்கள் அவனை(யே)வணங்கிட வேண்டும்,அவனுக்கு எதனையும்(எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப் படுத்தாமல் இருப்பதாகும் என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,அவர்களுக்கு (இந்த நற்செய்தியை)அறிவிக்காதீர்கள்.அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள், என்று பதிலளித்தார்கள்.
புகாரி-2856: முஆத்(ரலி)
20- ஒரே வாகனத்தின் மீது முஆது(ரலி) அவர்கள் நபி(ஸல்)அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில் நபி(ஸல்)அவர்கள் முஆதே! என்று அழைத்தார்கள். உத்தரவிற்குக் காத்திருக்கிறேன்,அல்லாஹ்வின் தூதரே!(தங்களின் உத்தரவிற்குப் பணிவதைப்)பெரும் பேறாகவும் கருதுகிறேன். என்று முஆத்(ரலி)அவர்கள் கூறினார்கள். முஆதே! என மீண்டும் நபி(ஸல்)அவர்கள் அழைத்தார்கள். உத்தரவிற்குக் காத்திருக்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! அதனைப் பெரும் பேறாகவும் கருதுகிறேன். என மீண்டும் முஆத்(ரலி)அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று முறை கூறப்பட்டது. பிறகு தம் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குறிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்லவிடமாட்டான். என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடலாமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே! என்று முஆத் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில்(இது மடடும் போதுமே என்று)அவர்கள் அசட்டையாக இருந்து விடுவார்கள். என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
(கல்வியை மறைத்த) குற்றித்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தறுவாயில் தான் இந்த ஹதீஸை முஆத்(ரலி)அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
புகாரி-128: அனஸ் பின் மாலிக்(ரலி)
No comments:
Post a Comment