குழப்பங்களின் பரிகாரம் நல்லறங்களே......
88- நாங்கள் உமர் (ரலி) இடம் அமர்ந்திருந்த போது, நபி (ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்தவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்ற பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு). நபி (ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர் (ரலி) நீர் அதற்குத் தகுதியானவர் தாம் என்றனர். ஒரு மனிதன் தமது குடும்பத்தினரிடமும் தமது சொத்துகளிலும் தமது குழந்தைகளிடமும் தமது அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம் ஃபித்னாவில் (சோதனையில்)ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன்.
அதற்கு உமர் (ரலி) நான் இதைக் கருதவில்லை என்றனர். கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால்முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன் என்று கூறினார்கள். மூமின்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என நான் கூறினேன். அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா? என உமர் (ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது என்று உமர் (ரலி) கூறினார்கள்.
ஷகீக் கூறியதாவது: அந்தக் கதவு எதுவென உமர் (ரலி) அறிவார்களா? என்று ஹூதைஃபா (ரலி)விடம் நாங்கள் கேட்டோம். ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவதுபோல் அதை உமர் (ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன் என்று ஹூதைஃபா (ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹூதைஃபா (ரலி) இடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹூதைஃபா (ரலி) அந்தக் கதவு உமர் (ரலி) தாம் என்றார்கள்.
புகாரி-525: ஹூதைஃபா(ரலி)
No comments:
Post a Comment