Monday, September 18, 2006

அந்த எழுபதினாயிரம் பேர் யார்? கவனியுங்கள்!

131- நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர். அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர் பார்த்தேன். அப்போது, 'இது (இறைத்தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்'' என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம், 'பாருங்கள்'' என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை பார்த்தேன். மீண்டும் என்னிடம், 'இங்கும் இங்கும் பாருங்கள்'' என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது, 'இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்'' என்று சொல்லப்பட்டது.

(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறாத நிலையிலேயே மக்கள் கலைந்து சென்றவிட்டனர். பின்னர் நபித்தோழர்கள் (சிலர் மட்டும் இது தொடர்பாகத்) தமக்கிடையே விவாதித்துக் கொண்டார்கள். சிலர் 'நாமோ இறைவனுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் (நம் குடும்பங்கள்) இருந்த நிலையில் பிறந்தோம். ஆயினும், பின்னர் நாம் அல்லாஹ்வின் மீது அவனுடைய தூதர் மீதும்நம்பிக்கை கொண்டோம். எனவே, (இஸ்லாத்தில் பிறந்த) நம் பிள்ளைகளே அந்த எழுபதாயிரம் பேர் ஆவர்'' என்று கூறினார்கள். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், '(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள்; ஓதிப்பார்க்கமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன் (ரலி) எழுந்து, 'அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். வேறொருவர் எழுந்து நின்று, 'அவர்களில் நானும் ஒருவனா?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ''இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக் கொண்டுவிட்டார்'' என்று கூறினார்கள்.

புகாரி: 5752 இப்னு அப்பாஸ்(ரலி).

No comments: