அல்கஸாமா(கொலை வழக்கில் சாட்சி கிட்டாதபோது குற்றஞ்சாட்டப் பட்ட தரப்பிலிருந்து 50பேர் சத்தியம் செய்தல்.)
1085. அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் (பேரீச்சம் பழம் கொள்முதல் செய்வதற்காகச் சென்ற தம் தோழர்களைத் தேடி) கைபருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பேரிச்சந் தோப்புக்குள் பிரிந்துவிட்டனர். பின்னர் அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். எனவே, (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா இப்னு மஸ்ஊத் (ரலி) முஹய்யிஸா இப்னு மஸ்ஊத் (ரலி) ஆகியோரும் நபி (ஸல்) அவர்களிம் வந்து (கொல்லப்பட்ட) தங்கள் நண்பரைக் குறித்துப் பேசினார்கள். அப்போது அப்துர் ரஹ்மானே (பேச்சைத்) தொடங்கினார். அவர் அந்த மூவரில் வயதில் சிறியவராக இருந்தார். எனவே நபி (ஸல்) அவர்கள் '(வயதில்) மூத்தவரை முதலில் பேசவிடு'' என்றார்கள். -யஹ்யா இப்னு ஸயீத் அல்அன்சாரி (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'வயதில் பெரியவர், பேசும் பொறுப்பை ஏற்கட்டும்'' என்று இடம் பெற்றுள்ளது. எனவே, (வயதில் மூத்தவர்களான) ஹுவய்யிஸாவும் முஹய்யிஸாவும் தம் (கொல்லப்பட்ட) நண்பர் குறித்துப் பேசினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'யூதர்களே ஜம்பது பேர் சத்தியம் (கஸாமத்) செய்வதன் மூலம் 'உங்களில் கொல்லப்பட்டவர்' அல்லது 'உங்கள் நண்பரின் உயிரீட்டுத் தொகையை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் கண்ணால் காணாத விஷயமாயிற்றே! (எவ்வாறு நாங்கள் சத்தியம் செய்வது?)'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியானால், (பிரதிவாதிகளான) யூதர்களில் ஐம்பது பேர் (தாங்கள் கொலை செய்யவில்லை என்று) சத்தியம் செய்து உங்களை(ச் சத்தியம் செய்வதிலிருந்து) விடுவிக்க வேண்டும்'' என்று கூறினார்கள். அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! யூதர்கள்) இறைமறுப்பாளர்களான கூட்டமாயிற்றே! (அவர்களின் சத்தியத்தை எப்படி ஏற்க முடியும்?)'' என்று கேட்டார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்களே (கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையைக்) கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்குத் தம் சார்பாக வழங்கினார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (நபி (ஸல்) அவர்கள் ஈட்டுத் தொகையாக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்றை கண்டேன். அது அவர்களின் ஒட்டகத் தொழுவத்திற்குள் நுழைந்தது. அது தன்னுடைய காலால் என்னை உதைத்துவிட்டது.
No comments:
Post a Comment