ஒருவர் தாம் செய்த விபச்சாரத்தை ஒப்புக் கொண்டால்..
1102. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் வந்து அவர்களை அழைத்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர் திரும்பத் திரும்ப அதையே நான்கு முறை சொல்லித் தமக்கெதிராகத் தாமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை அழைத்து நபி (ஸல்) அவர்கள், 'உமக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், '(எனக்குப் பைத்தியம்) இல்லை'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'உமக்குத் திருமணமாகிவிட்டதா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (திருமணமாகிவிட்டது)'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இவரைக் கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்'' என்றார்கள்.
புஹாரி: 6815 அபூஹூரைரா (ரலி).
1103. (கிராமவாசி) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: நீங்கள் அல்லாஹ்வின் சட்டப்படியே எங்களிடையே தீர்ப்பளிக்கவேண்டும்'' என்றார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து 'அவர் சொல்வது உண்மைதான்; எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். (பின்னர் அக்கிராமவாசி) 'என்னைப் பேச அனுமதியுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'பேசு!'' என்று கூறினார்கள். அவர், 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (என் மகனுக்குக் கல்லெறி தண்டனை வழங்கிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.) எனவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு அறிஞர்கள் சிலரிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனை என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தார்கள்'' என்று கூறினார். இதைக்கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்'' என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி 'உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று கேளுங்கள். அவள் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே (உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க) அவளும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். எனவே, உனைஸ் அவர்கள் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்.
புஹாரி :6860 அபூஹூரைரா (ரலி).
No comments:
Post a Comment