காணாமல் போன பொருட்கள்.
1123. ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொருளைப் பற்றி கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அதனுடைய பையையும் (அதன் சுருக்குக்) கயிற்றையும் அறிந்து (பாதுகாத்து) வைத்துக் கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்து. அதன் உரிமையாளர் வந்து (அதை அடையாளம் சொல்லக் கேட்டு)விட்டால் (அவரிடம் கொடுத்து விடு.) இல்லையென்றால் நீ விரும்பியவாறு அதைப் பயன்படுத்திக் கொள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், '(பிறரின்) தொலைந்து போன ஆடு (நம்மிடம் வந்து சேர்ந்தால்...)?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'அது உனக்குச் சொந்தமானது. அல்லது உன் சகோதரனுக்குச் சொந்தமானது. அல்லது ஓநாய்க்குச் சொந்தமானது'' என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், 'தொலைந்து போன ஒட்டகம் (நம்மிடம் வந்து சேர்ந்தால்)?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர் பையும் (குடலும்) அதன் கால் குளம்புகளும் உள்ளன. அது நீர் நிலைக்குச் சென்று நீர் அருந்திக் கொள்ளும்; மரத்தை மேய்ந்து கொள்ளும்; அதன் உரிமையாளர் அதைப் பிடித்துக் கொள்ளும் வரை. (எனவே, அதன் போக்கில் அதை விட்டுவிடு)'' என்று கூறினார்கள்.
1124. நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், 'ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு'' என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிpந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், 'ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு'' என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்கள், 'அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள்'' என்று கூறினார்கள். எனவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.
No comments:
Post a Comment