விருந்தினர்களை உபசரித்தல்.
1126. நபி (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தம் கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்'' என்று கூறினார்கள். அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! அவரின் கொடை என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், '(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.
புஹாரி :6019 அபூஸூரைஹ் அல் அதவி (ரலி).
1127. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஒர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும் (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 6135 அபூஹுரைஹ் குவைலித் இப்னு அம்ர் (ரலி)
1128. நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், 'தாங்கள் எங்களை ஒரு சமூகத்திடம் அனுப்புகிறீர்கள்; நாங்களும் (தங்கள் கட்டளையை ஏற்று) அங்கு செல்கிறோம்; (ஆனால்,) அவர்கள் எங்களுக்கு விருந்துபசாரம் செய்ய மறுக்கிறார்கள் எனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் ஒரு சமூகத்திடம் சென்று விருந்தினர்களுக்குத் தேவையான வசதிகளை உங்களுக்குச் செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தனரின் உரிமையை (நீங்களாகவே) எடுத்துக்கொள்ளுங்கள்'' என்று எங்களுக்கு பதில் தந்தார்கள்.
புஹாரி : 2461 உக்பா பின் ஆமிர் (ரலி).
No comments:
Post a Comment