போரின்றி கிடைக்கும் வெற்றிப் பொருட்கள்.
1146. பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) குதிரைகளையோ, ஒட்டகங்களையோ செலுத்திப் போரிட்டிருக்கவில்லை. எனவே, அவை அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் தங்களின் ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.
புஹாரி : 2904 உமர் (ரலி).
1147. உமர் இப்னு கத்தாப் (ரலி) என்னைக் கூப்பிட்(டு ஆளனுப்பி விட்டார்கள். (நான் அவர்களிடம் சென்று அமர்ந்து கொண்டிருந்த போது) அவர்களிடம் அவர்களின் மெய்க்காவலர் 'யர்ஃபஉ' என்பவர் வந்து, 'உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தங்களுக்கு (அவர்களைச் சந்திப்பதில்) இசைவு உண்டா? என்று கேட்டார். உமர் (ரலி), 'ஆம் (இசைவு உண்டு); அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு 'யர்ஃபஉ' சற்று நேரம் தாமதித்து வந்து, 'அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள். தங்களுக்கு இசைவு உண்டா?' என்று கேட்டார் அதற்கு உமர் (ரலி) 'ஆம் (இசைவு உண்டு)'' என்று கூற, அவ்விருவரும் உள்ளே நுழைந்தபோது அப்பாஸ் (ரலி), 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார்கள். அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து ('ஃபய்உ' நிதியாக) ஒதுக்கிக் கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர்.
அப்போது அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் ஒருவரையொருவர் குறைகூறிக் கொண்டனர். அப்போது (உஸ்மான் - ரலி - அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களின்) குழு, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்'' என்று கூறியது. உமர் (ரலி), 'பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே'' என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள்.
அதற்கு அந்தக் குழுவினர், 'அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்'' என்று பதிலளித்தனர். உடனே, உமர் (ரலி), அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அவ்விருவரும், 'ஆம், (அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்)'' என்று பதிலளித்தனர். உமர் (ரலி), 'அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இச்செல்வத்திலிருந்து சிறியதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை.''. (என்று கூறிவிட்டு), 'அல்லாஹ், எச்செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஒட்டிச் சென்றதால் கிடைத்தல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்'' என்னும் (திருக்குர்ஆன் 59:6-வது) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,
'எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை. அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் (பரவலாகப்) பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது அபூபக்ர் (ரலி), 'நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன் என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்தார்கள். அ(ந்தச் சொத்)து விஷயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்ட விதத்தில் தாமும் செயல்பட்டார்கள்'' என்று உமர் (ரலி) கூறினார்.
பிறகு அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, 'நீங்களும் அப்போது இருந்தீர்கள்; இந்நிலையில் (இப்போது வந்து) நீங்கள் கூறுவது போன்று அபூபக்ர் (ரலி) செயல்பட்டார்கள் என்று கூறுகிறீர்களே!'' என்று கேட்டார்கள். பிறகு, 'அபூபக்ர் அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு அபூபக்ர் அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான் 'அல்லாஹ்வின் தூதருடையவும் அபூபக்ர் அவர்களின் பிரதிநிதியாவேன்'' என்று கூறி, அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதில் நடந்து கொண்ட முறைப்படியும் அபூபக்ர் (ரலி) நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்து கொண்டேன்; நேரான முறையில் நடந்து கொண்டேன்; உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு, நீங்கள் இருவருமே என்னிடம் வந்து பேசினீர்கள்; உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் (உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேரவேண்டிய வாரிசுப் பங்கைக் கேட்டபடி) வந்தீர்கள். நான் உங்கள் இருவரிடமும், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(நபிமார்களான நாங்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே' என்று கூறினார்கள்' என்றேன். எனினும், 'அதை உங்கள் இருவரிடமே கொடுத்து விடுவது (தான் பொறுத்தமானது)' என்று எனக்குத் தோன்றியபோது நான், 'நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதி மொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் (ஆட்சிப்) பொறுப்பேற்றதிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன். அதன் அடிப்படையில் என்னிடம் பேசுவதாயிருந்தால் பேசுங்கள் என்று கூறினேன். அதற்கு நீங்கள் இருவரும், 'எங்களிடம் இதே அடிப்படையில் அதைக் கொடுத்து விடுங்கள்' என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்து விட்டேன்'' (என்று சொல்லிவிட்டு) '(தற்போது) இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகிறீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! மறுமை நாள் வரை, நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தர மாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்து விடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்'' என்று கூறினார்கள்.
புஹாரி :4033 மாலிக் பின் அவ்ஸ் அல் அன்சாரி (ரலி).
1148. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான் (அவர்களைப் பார்த்து), '(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லவில்லையா?' என்று கேட்டேன்.
புஹாரி :6730 ஆயிஷா (ரலி).
1149. நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் மீதியிருந்ததிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ('நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இச்செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்ய மாட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அச்சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அச்சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்'' என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூ பக்ர் (ரலி) மறுத்துவிட்டார்கள். இதனால் அபூ பக்ர் (ரலி) மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) பேசவில்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாதகாலம் ஃபாத்திமா (ரலி) உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) இறந்தபோது, அவர்களின் கணவர் அலீ (ரலி), (இறப்படைவதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள்.
ஃபாத்திமா (ரலி) வாழ்ந்தவரையில் அலீ (ரலி) மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா (ரலி) இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) கண்டார்கள். எனவே, (ஆட்சித் தலைவர்) அபூ பக்ரிடம் சமரசம் பேசவும் பைஅத் - விசுவாசப் பிரமாணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. எனவே, 'தாங்கள் (மட்டும்) எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வரவேண்டாம்'' என்று கூறி அலீ (ரலி) அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூ பக்ர்- ரலி - அவர்களுடன்) உமர் (ரலி) வருவதை அலீ (ரலி) விரும்பாததே (அலீ-ரலி அவர்கள் இவ்வாறு கூறக்) காரணமாகும். அப்போது உமர் (ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள் (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்)'' என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர் (ரலி), என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களிடம் நான் செல்லத்தான் செய்வேன்'' என்று கூறிவிட்டு, அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ (ரலி), ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு, (அபூ பக்ர் - ரலி- அவர்களை நோக்கி) 'தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் எங்களுக்குள் உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம்'' என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன.
அபூ பக்ர் (ரலி) பேசத் துவங்கியபோது, 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இச்செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல் விட்டு விடவுமில்லை'' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி), 'தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும'' என்று கூறினார்கள். பிறகு அபூ பக்ர் (ரலி) லுஹர்த் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ (ரலி) குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ (ரலி) தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ (ரலி) (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் அபூ பக்ர் (ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூ பக்ர் (ரலி) மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்தோ அல்ல மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என (நபி - ஸல் - அவர்களின் குடும்பத்தினராகிய) நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூ பக்ர் (ரலி) (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது'' என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து) 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்'' என்று கூறினர். தம் போக்கை அலீ (ரலி) திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டபோது முஸ்லிம்கள் அலீ (ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.
புஹாரி : 4240 ஆயிஷா (ரலி).
1150. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அது இறைத்தூதர் (ஸல்), அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த, (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும். ஃபாத்திமாவுக்கு அபூ பக்ர் (ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள்'' என்று பதிலளித்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூ பக்ர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டுவிட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூ பக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்துவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். அபூ பக்ர் (ரலி) ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன். ஏனெனில், அவர்களின் செயல்களில் எதனையாவது நான் விட்டுவிட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்றார்கள். (அபூ பக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தருமமாக விட்டுச் சென்ற சொத்தை உமர் அவர்கள், அலீ அவர்களுக்கும் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அதன் வருமானத்திலிருந்து தம் பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும் படி) கொடுத்துவிட்டார்கள். கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துக்களை உமர் அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்தி வைத்துக் கொண்டு, 'அவ்விரண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தருமமாக விட்டுச் சென்றவை. அவை நபி (ஸல்) அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளதாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்)களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்'' என்றார்கள். இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) (இந்த ஹதீஸை அறிவித்த போது), 'அந்த (கைபர், ஃபதக் பகுதியிலிருந்த) இரண்டு சொத்துக்களும் இன்று வரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன'' என்றார்கள்.
புஹாரி : 3092-3093 ஆயிஷா (ரலி).
1151. என் வாரிசுகள் பொற்கசையோ, வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூலியையும் தவிர, நான்விட்டுச் செல்வதெல்லாம் தருமமேயாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 2776 அபூ ஹுரைரா (ரலி).
No comments:
Post a Comment