Sunday, February 24, 2008

அன்ஸாரிகளின் உடமைகளை முஹாஜிர்கள் திருப்பியளித்தல்.

1159. முஹாஜிர்கள் (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு வந்தபோது அவர்களின் கையில் (செல்வம்) எதுவும் இருக்கவில்லை. அன்சாரிகள் நிலங்களையும் (பிற) அசையாச் சொத்துக்களையும் வைத்திருந்தார்கள். ஒவ்வோர் ஆண்டும் தங்கள் சொத்துக்களின் விளைச்சல்களை அவர்களுக்கு (குறிப்பிட்ட விகிதத்தில்) கொடுப்பதாகவும் 'எங்களுக்கு பதிலாக நீங்கள் அதில் சிரமப்பட்டு உழைக்க வேண்டும்' என்ற நிபந்தனையின் பேரிலும் அவற்றை முஹாஜிர்களுக்கு (குத்தகை நிலங்களாகப்) பங்கிட்டுக் கொடுத்தார்கள். என்னுடைய தாயார் உம்மு சுலைம் அவர்கள் (என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ தல்ஹாவின் தாயாராகவும் இருந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்கள் தங்களின் அடிமைப் பெண்ணான, உஸாமா இப்னு ஜைத் உடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள். கைபர்வாசிகளின் மீது போர் தொடுத்து முடித்து, மதீனாவுக்குத் திரும்பியபோது முஹாஜிர்கள், அன்சாரிகளின் மனீஹாக்களை (இரவலாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்புச் செய்த பேரீச்சந் தோட்டங்களை) அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவரின் பேரீச்ச மரங்களைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அவற்றுக்கு பதிலாக, உம்மு அய்மன் அவர்களுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

புஹாரி 2630 அனஸ் பின் மாலிக்(ரலி).

1160. நபி (ஸல்) அவர்கள் 'பனூ குறைழா' மற்றும் 'பனூ நளீர்' குலத்தாரை வெற்றி கொள்ளும் வரை, நபி (ஸல்) அவர்களுக்கு, (அன்சாரிகள்) சிலர் பேரீச்ச மரங்களை(ப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தனர். (பனூ குறைழா, பனூ நளீர் குலத்தினரை நபி -ஸல் அவர்கள் வெற்றி கொண்ட பின்னர் அன்சாரிகளிடமே அந்த மரங்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அந்தச் சமயத்தில் என் குடும்பத்தார் என்னை நபி (ஸல்) அவர்கள் அந்த மரங்களை (பராமரிக்கும் பொறுப்பை தம் வளர்ப்புத்தாய்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள். (நான் அந்த மரங்களை நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தபோது அங்கு) உம்மு அய்மன்(ரலி) வந்தார்கள். என்னுடைய கழுத்தின் மீது துணியைப் போட்டு, 'முடியாது! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு (அவற்றைத்) தரமாட்டார்கள். (ஏனெனில்,) அவற்றை அவர்கள் எனக்கு (உரிமையாக்கித்) தந்துவிட்டார்கள்'' என்றோ... அல்லது இது போன்று வேறொரு வார்த்தையையோ கூறினார்கள்... நபி (ஸல்)அவர்கள் (உம்மு அய்மன் அவர்களைப் பார்த்து அவற்றைக் கொடுத்து விடுங்கள். அதற்குப் பகரமாக) உங்களுக்கு இந்த அளவு தருகிறேன்'' என்று கூறினார்கள். (அப்போது) உம்மு அய்மன்(ரலி) (என்னைப் பார்த்து), 'அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த அளவு நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தரும் வரை (அவற்றை உங்களிடம் திருப்பித் தர) முடியாது'' என்று கூறினார்கள்.

புஹாரி :4120 அனஸ் (ரலி).

No comments: