ஹெர்குலிஸூக்கு இஸ்லாத்தைத் தழுவ நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.
1162. அபூ சுஃப்யான்(ரலி) தம் வாய்ப்பட எனக்கு அறிவித்தாவது: (குறைஷியரின் முக்கிய தலைவராயிருந்த) எனக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குமிடையிலான (ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த) காலகட்டத்தில் நான் (வியாபாரத்திற்காக வாணிபக் குழுவினருடன் ஷாம் நாட்டிற்குச்) சென்றிருந்தேன். நான் ஷாம் நாட்டில் இருந்துகொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ரோம பைஸாந்தியப் பேரரசர் சீசர்) ஹெராக்ளியஸிற்கு நிருபமொன்று கொண்டுவரப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து 'திஹ்யா அல் கல்பீ' அவர்கள் கொண்டு வந்து, 'புஸ்ரா'வின் அரசரிடம் கொடுக்க, அவர் அதை ஹெராக்ளியஸிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அப்போது ஹெராக்ளியஸ் (தம்மைச்சூழ அமர்ந்திருந்த பிரதிநிதிகளிடம்) 'தம்மை இறைவனின் தூதரெனக் கூறிக்கொண்டிருக்கும் இந்த மனிதரின் (முஹம்மதின்) சமுதாயத்தைச் சேர்ந்த எவரேனும் இங்கு (நம் நாட்டில்) இருக்கிறார்களா?' என்று கேட்டதற்கவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். அப்போது (ஷாமில் வியாபாரத்திற்காகத் தங்கயிருந்த) நான் குறைஷியர் சிலருடன் அழைக்கப்பட்டேன். எனவே, நாங்கள் ஹெராக்ளியஸிடம் சென்றோம். அவர் முன்னிலையில் (அரசவையில்) எங்களை அமரச் செய்தார்கள். அப்போது ஹெராக்ளியஸ், 'தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?' என்று கேட்டதற்கு நான், 'நான் (தான் நெருங்கிய உறவினன்)'' என்று சொன்னேன். எனவே, அவரின் முன்னிலையில் என்னை அமர்த்தினார். என் சகாக்களை எனக்குப் பின்னால் அமர்த்தினார். பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரை அழைத்து (அவரிடம்), 'தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் இந்த மனிதரைப் பற்றி இவரிடம் கேட்கப் போகிறேன்; இவர் என்னிடம் பொய் சொன்னால் (நமக்குத்) தெரிவிக்கும்படி இவருடைய சகாக்களிடம் சொல்'' என்றார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் பொய் சொன்னால் அதை என் சகாக்கள் தெரிவித்து விடுவார்கள் என்பது (குறித்த அச்சம்) மட்டும் இல்லாதிருந்தால் (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நான் பொய்(யான விவரங்களைச்) சொல்லியிருப்பேன்.
பிறகு, ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம், 'உங்களிடையே அந்த மனிதரின் குடும்பப் பாரம்பரியம் எப்படிப்பட்டது? என்று இவரிடம் கேள்'' என்று கூறினார். நான், 'அவர் எங்களிடையே சிறந்த குடும்பப் பாரம்பரியத்தை உடையவராவார்'' என்று பதிலளித்தேன். ஹெராக்ளியஸ் 'அவரின் முன்னோர்களில் அரசர் எவராவது இருந்திருக்கிறாரா?' என்று கேட்டார். நான் 'இல்லை'' என்று சொன்னேன். ஹெராக்ளியஸ் 'அவர் தம்மை 'நபி' என வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் கூறினார் என்று (எப்போதாவது) நீங்கள் சந்தேகித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். நான், 'இல்லை'' என்று சொன்னேன். 'அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா?' என்று கேட்டார். நான், 'இல்லை; பலவீனமானவர்கள் தாம் அவரைப் பின்பற்றுகின்றனர்'' என்றேன். அவர், 'அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனரா? அல்லது குறைந்துகொண்டே போகின்றனரா?' என்று கேட்டார். நான் 'இல்லை அவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்'' என்று சொன்னேன். அவர், 'அவரின் மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து எவரேனும் தம் பழைய மதத்திற்கே திரும்பிச் செல்வதுண்டா?' என்று கேட்டார். நான், 'இல்லை'' என்று சொன்னேன்.அவர், 'அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?' என்று கேட்டார். நான், 'உண்டு'' என்று சொன்னேன். அவர், 'அவ்வாறாயின், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எவ்வாறு இருந்தன?' என்று கேட்டார். நான், எங்களிடையேயான போர்கள் (கிணற்று) வாளிகள்தாம். (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒரு முறை) அவர் எங்களை வெற்றிகொள்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெற்றி கொள்வோம்'' என்று சொன்னேன்.அவர், 'அந்த மனிதர் வாக்கு மீறுகிறாரா?' என்று கேட்டார். நான், 'இல்லை. (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் கால கட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்குத் தெரியாது'' என்று சொன்னேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இதைத் தவிர (நபியவர்களைக் குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. (பிறகு) அவர், 'இவருக்கு முன்னால் (குறைஷியரில்) வேறு எவரேனும் இப்படி (தம்மை 'நபி' என) வாதித்ததுண்டா?' என்று கேட்டார். நான், 'இல்லை'' என்று சொன்னேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரிடம் (இவ்வாறு) கூறினார்: 'அவரிடம் கூறுங்கள்: நான் உம்மிடம் உங்களிடையே அவரின் குடும்பப் பாரம்பரியம் குறித்துக் கேட்டேன். அவர் சிறந்த பாரம் பரியத்தைச் சேர்ந்தவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் சிறந்த பாரம் பரியத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார். நான் உம்மிடம் அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கிறாரா என்று கேட்டேன். அதற்கு நீர் 'இல்லை' என்றீர். அவரின் முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருப்பாராயின், 'தம் முன்னோர்களின் ஆட்சியதிகாரத்தை (தாமும் அடைய) விரும்பும் ஒருவர் இவர்' என்று கூறியிருப்பேன். ''மக்களில் அவரைப் பின்பற்றுபவர்கள் மேட்டுக்குடியினரா? அல்லது பலவீனமானவர்களா?' என்று அவரைப் பின்பற்றுபவர்களைக் குறித்துக் கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள் தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர். நான் உம்மிடம் 'அவர் தம்மை 'நபி' என வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீர் 'இல்லை'' என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேசா(த் துணிய)த அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன். உம்மிடம் நான் 'அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோரில் எவராவது தம் (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்திகொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு 'இல்லை' என்றீர். இறை நம்பிக்கை இத்தகையதே! உள்ளத்தின் எழிலோடு அது கலந்துவிடும்போது (அதைக் குறித்து யாரும் வெறுப்படையமாட்டார்.) உம்மிடம் நான் 'அவரைப் பின்பற்றுவோர் (நாளுக்கு நாள்) அதிகரித்து வருகின்றனரா? அல்லது குறைந்து வருகின்றனரா?' என்று கேட்டேன், நீர் 'அதிகரித்தே வருகின்றனர்' என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை அத்தகையது தான். அது முழுமையடையும் வரை (அதிகரித்துக்கொண்டே செல்லும்).
மேலும், உம்மிடம் நான் 'அவருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீங்கள் போர் புரிந்தீர்கள் என்றும், உங்களுக்கும் அவருக்குமிடையே போர் கிணற்று வாளிகள் தாம்; (போரில் வெற்றியும் தோல்வியும் சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன என்றும், (ஒரு முறை) அவர் உங்களை வெற்றி கொண்டால் (மறு முறை) நீங்கள் அவரை வெற்றிகொள்கிறீர்கள் என்றும் பதிலளித்தீர். இறைத்தூதர்கள் அப்படித்தான் சோதிக்கப்படுவார்கள். ஆனால், இறுதி வெற்றி அவர்களுக்கே கிடைக்கும். 'அவர் வாக்கு மீறுகிறாரா?' என்று உம்மை நான் கேட்டதற்கு நீர், 'அவர் வாக்கு மீறுவதில்லை' என்று கூறினீர். இறைத்தூதர்கள் இத்தகையவர்களே; அவர்கள் வாக்கு மீறுவதில்லை. நான் 'இவருக்கு முன் உங்களில் எவராவது இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?' என்று உம்மிடம் கேட்டபோது நீர் 'இல்லை' என்று பதிலளித்தீர். அவருக்கு முன்னரும் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்திருந்ததாக (நீர் கூறி) இருப்பின், 'தமக்கு முன்னர் (சிலரால்) முன் வைக்கப்பட்ட ஒரு வாதத்தையே பின்பற்றிச் செல்கிற ஒருவர் இவர்' என நான் சொல்லியிருப்பேன்'' என்று கூறினார்.
பிறகு ஹெராக்ளியஸ், 'என்ன செய்யும் படி அவர் உங்களுக்குக் கட்டளையிடுகிறார்?' என்று கேட்டார். நான், 'தொழுகையை நிறைவேற்றும்படியும், தர்மம் செய்யும் படியும், உறவைக் காத்துவரும்படியும், ஒழுக்கமாக வாழும்படியும் அவர் எங்களுக்குக் கட்டளையிடுகிறார்'' என்று சொன்னேன். ஹெராக்ளியஸ், 'அவரைக் குறித்து நீர் சொன்னவை அனைத்தும் உண்மையானால், அவர் இறைத்தூதர் தாம். அவர் வரப்போகிறார் என்று நான் அறிந்துவைத்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷிகளாகிய) உங்களிலிருந்து வருவார் என்று நான் எண்ணியிருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க நான் விரும்புவேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரின் கால்களைக் கழுவியிருப்பேன். அவரின் ஆட்சி (ஒரு காலத்தில்) என் இரண்டு பாதங்களுக்குக் கீழுள்ள (இந்த) இடத்தையும் எட்டியே தீரும்'' என்று கூறினார். பிறகு ஹெராக்ளியஸ் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். (அது கொண்டு வரப்பட்டது.) அதை அவர் வாசிக்கச் செய்தார்.
அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
அளவிலா அருளும் நிகரிலா அன்பும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்... இது இறைத்தூதர் முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்பட்ட நிருபம்:)
நேர்வழியைப் பின்பற்றியவர் மீது (இறைவனின்) சாந்தி நிலவட்டும். இஸ்லாத்தை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கிறேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஏற்றால், ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குச் சேர வேண்டிய நன்மையை இரண்டு மடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (குடிமக்களான) விவசாயிகளின் பாவமும் (அவர்கள் இஸ்லாத்தை ஏற்காமல் போவதின் குற்றமும்) உங்களையே சாரும். 'வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அது யாதெனில்:) 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது. அவனுக்கு எதனையும் நான் இணை வைக்கலாகாது. அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால், 'நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வுக்கு அடிபணிகிறவர்கள்) முஸ்லிம்கள்தாம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள்.
ஹெராக்ளியஸ் அந்த நிருபத்தைப் படித்து முடித்தபோது, அவருக்கு அருகிலேயே (அவரைச் சுற்றிலுமிருந்த ரோம பைஸாந்திய ஆட்சியாளர்களின்) குரல்கள் உயர்ந்தன. கூச்சல் அதிகரித்தது. எங்களை வெளியே கொண்டு செல்லும்படி உத்தரவிடப்பட்டது. உடனே, நாங்கள் (அரசவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். நாங்கள் வெளியே வந்தபோது, நான் என் சகாக்களிடம் 'இப்னு அபீ கப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (-ரோமரின்-) மன்னரே அவருக்கு அஞ்சுகிறாரே!'' என்று சொன்னேன். (அன்று முதல்) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மார்க்கம் விரைவில் வெற்றி பெறும் என்று உறுதிகொண்டவனாகவே இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தைப் புகுத்தினான்.
No comments:
Post a Comment