Sunday, April 13, 2008

பயிற்றுவிக்கப் பட்ட நாயைக் கொண்டு வேட்டையாடுதல்.

வேட்டையாடுதல், அறுத்தல், உண்ண அனுமதிக்கப்பட்டவைகள்.

1254. நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடிக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா?)'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'அவை உங்களுக்காக (வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்'' என்று பதிலளித்தார்கள். நான், '(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், '(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே'' என்று பதிலளித்தார்கள். நான், 'நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகளின் மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'அது (தன்னுடைய முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்'' என்ற கூறினார்கள்.

புஹாரி :5477 அதீபின் ஹாத்திம் (ரலி).

1255. ''நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்'' என்று நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், 'பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டையாடிக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்!

புஹாரி : 5483 அதீபின் ஹாத்திம் (ரலி).

1256. நான் நபி (ஸல்) அவர்களிடம் ஈட்டி (மூலம் வேட்டையாடுவதைப்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிராணியை ஈட்டி அதன் முனையால் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்; பக்கவாட்டாகத் தாக்கிக் கொன்றால் அதை நீ உண்ணாதே. ஏனெனில் அது அடித்துக் கொல்லப்பட்டதாகும்'' என்றார்கள். நான் இறைத்தூதர் அவர்களே! (வேட்டைக்காக) நான் என்னுடைய நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்புகிறேன்; வேட்டையாடப்பட்ட பிராணிக்கு அருகில் என்னுடைய நாயுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன்; அந்த மற்றொரு நாய்க்காக நான் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை இவ்விரு நாய்களில் எது வேட்டையாடியது என்பதும் எனக்குத் தெரியவில்லை (அதை நான் சாப்பிடலாமா?) எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'சாப்பிடாதே! நீ அல்லாஹ்வின் பெயர் கூறியது உன்னுடைய நாயை அனுப்பும்போது தான். மற்றொரு நாய்க்கு நீ அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை'' என விடையளித்தார்கள்.

புஹாரி : 5475 அதீபின் ஹாத்திம் (ரலி).

1257. இறகு இல்லாத அம்பின் ('மிஅராள்') மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். 'பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)'' என்று பதிலளித்தார்கள். நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் 'உங்களின் நாயுடன்' அல்லது 'உங்கள் நாய்களுடன்' வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பியபோதுதான் வேறொரு நாய்க்காக அல்ல'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 2054 அதீபின் ஹாத்திம் (ரலி).

1258. நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களின் (வேட்டை) நாயை (வேட்டையாட) அனுப்பி, அது வேட்டைப் பிராணியைக் கவ்விப் பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். அது (அந்தப் பிராணியைத்) தின்றிருந்தால் நீங்கள் அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது அது அந்தப் பிராணியைத் தனக்காகவே பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப்படாத பல நாய்களுடன் உங்கள் வேட்டை நாயும் கலந்துவிட அவை (அப்பிராணியைப்) பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அப்பிராணியைக் கொன்றது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒன்று அல்லது இரண்டு நாள்கள் கழித்து அதன் மீது உங்கள் அம்பின் அடையாளத்தைத் தவிர வேறெதுவுமில்லாதிருக்க நீங்கள் அதைக் கண்டால் அதை நீங்கள் உண்ணலாம். அது தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். (ஏனெனில், அது தண்ணீரில் விழுந்ததால் இறந்திருக்கலாம்.)

புஹாரி : 5484 அதீபின் ஹாத்திம் (ரலி).

1259. நான், 'அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களின் பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா? மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நான் என்னுடைய வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட என்னுடைய நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்காவிட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்டையாடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5478 அபூதலபா அல் குஷானி (ரலி).

No comments: