Friday, April 18, 2008

உடும்புக் கறி உண்ணலாம்.

1271. உடும்பை நான் உண்ணவும் மாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவும் மாட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5536 இப்னு உமர் (ரலி).

1272. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர், அது உடும்பு இறைச்சி என்று அவர்களை அழைத்துச் சொன்னார்கள். உடனே அவர்கள் (அதை உண்ணுவதை) நிறுத்திவிட்டார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'சாப்பிடுங்கள்' அல்லது 'உண்ணுங்கள்'. ஏனெனில், அது, 'அனுமதிக்கப்பட்டதாகும்' அல்லது, 'அதனால் குற்றமில்லை'என்று கூறினார்கள். ஆயினும், அது என் (பரிச்சியமான) உணவு அல்ல'' என்றார்கள்.

புஹாரி : 7267 இப்னு உமர் (ரலி).

1273. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹுஃபைதா பின்த் ஹாரிஸ் (ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா (ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் 'நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் 'உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை'' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

புஹாரி : 5391 காலித் பின் வலீத் (ரலி).

1274. என் தாயரின் சகோதரியான உம்மு ஹூஃபைத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு (உலர்ந்த) பாலாடைக் கட்டியையும் வெண்ணெயையும் உடும்புகளையும் அன்பளிப்பாகத் தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பாலாடைக் கட்டியிலிருந்தும், வெண்ணையிலிருந்தும் (சிறிது எடுத்து) உண்டார்கள். ஆனால் அவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றியதால் உடும்புகளை உண்ணாமல் விட்டு விட்டார்கள். (எனினும்) அது (உடும்பு) அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டது. அது ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதருடைய உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டிருக்காது.

புஹாரி :2575 இப்னு அப்பாஸ் (ரலி).

No comments: