Saturday, April 26, 2008

மாற்றப்பட்ட குர்பானிச் சட்டம்.

1287. குர்பானி இறைச்சிகளை மூன்று நாள்களுக்கு (மட்டும்) உண்ணுங்கள். (இந்த ஹதீஸின்படி செயல்படும் வகையில்) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மினாவிலிருந்து புறப்படும்போது குர்பானிப் பிராணிகளின் இறைச்சி(யைத் தவிர்ப்பதற்)காக (ரொட்டியை) எண்ணெய் தொட்டு உண்டுவந்தார்கள்.

புஹாரி : 5574 இப்னு உமர் (ரலி).

1288. நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் 'மூன்று நாள்களுக்கு மேல் (குர்பானி இறைச்சியை) உண்ணாதீர்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது அதை உண்ணக் கூடாது எனக் கட்டாயப்படுத்துவதற்கல்ல. மாறாக, அவர்கள் (அவ்வாண்டு பஞ்சத்தில் பீடிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு வசதியுள்ளவர்கள்), அதிலிருந்து உணவளிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். (அவர்களின் எண்ணத்தை) அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

புஹாரி : 5570 ஆயிஷா (ரலி).

1289. நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாள்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைப் சாப்பிட மாட்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள், 'சாப்பிடுங்கள்; சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி எங்களுக்குச் சலுகை வழங்கியதும் நாங்கள் சாப்பிட்டு, சேமித்து வைக்கலானோம்.

புஹாரி : 1719 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1290. நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்'' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 5569 ஸலமா பின் அக்வஹ் (ரலி).

1291. (இனி), தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5474 அபூஹுரைரா (ரலி).

No comments: