Saturday, June 07, 2008

நாய் உள்ள வீட்டில் அருள் மலக்குகள் நுழைய மாட்டார்கள்.

1363. நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3225 அபூ தல்ஹா (ரலி).


1364. ''(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' என என்னிடம் அபூ தல்ஹா (ரலி) தெரிவித்தார்கள். புஸ்ர் இப்னு ஸயீத் (ரஹ்) அறிவித்தார்.

(ஒரு முறை ஸைத் இப்னு காலித் (ரலி) நோய் வாய்ப்பட்டார்கள். அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர்களின் வீட்டில் ஒரு திரைக்கு அருகே அமர்ந்திருந்தோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப்பட்டு) இருந்தன. எனவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ அவர்களிடம், 'இவர்கள் (ஸைத் (ரலி)), 'இவர்கள் (ஸைத் (ரலி)) நமக்கு உருவங்களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம். ஆனால், ஸைத் (ரலி) (அதை அறிவிக்கும் போது) 'துணியில் பொறிக்கப்பட்ட (உயிரினமல்லாதவற்றின் படத்)தைத் தவிர' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'கேட்கவில்லை'' என்றேன். அதற்கு அவர்கள், 'ஆம்; அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3226 புஸ்ர் பின் ஸயீத் (ரலி).

1365. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, 'மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்'' என்று கூறினார்கள். பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம்.

புஹாரி : 5954 ஆயிஷா (ரலி).

1366. நான் உருவங்கள் வரையப்பட்ட ஒரு தலையணையை விலைக்கு வாங்கினேன். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்துவிட்டு வீட்டிற்குள் வராமல் வாசலில் நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் உணர்ந்தேன். அப்போது நான் 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கேட்கிறேன்! நான் என்ன குற்றம் செய்தேன்?' என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் 'இது என்ன தலையணை?' என்று கேட்டார்கள். 'நீங்கள் இதன் மேல் அமர்வதற்காகவும் தலைக்கு வைத்துக் கொள்வதற்காகவும் உங்களுக்காக நான் இதை வாங்கினேன்!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், 'இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள்; 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும். எந்த வீட்டில் உருவங்கள் இருக்கின்றனவோ அங்கே வானவர்கள் வர மாட்டார்கள்!'' எனக் கூறினார்கள்.

புஹாரி : 2105 ஆயிஷா (ரலி).

1367. இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், 'நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)'' என (இடித்து)க் கூறப்படும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5951 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1368. 'அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியேற்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள்.

புஹாரி : 5950 இப்னு மஸ்ஊத் (ரலி).

1369. நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் ஒரு மனிதன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி (ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். 'யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான்; அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார்.

புஹாரி : 2225 ஸயீத் இப்னு அபூஹஸன் (ரலி).

1370. நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைவபவர் ஒருவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூஹுரைரா (ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்'' என்றார்கள்.

புஹாரி: 5953 அபூஜூரா (ரலி).

No comments: