Saturday, June 14, 2008

நபியின் குறிப்புப் பெயரைச் சூட்டாதே.

நல்லொழுக்கங்கள்.

1380. ஒருவர் பகீஃ எனுமிடத்தில் 'அபுல் காஸிமே!' என்று அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பியபோது 'உங்களை அழைக்கவில்லை' என்றார். நபி (ஸல்) அவர்கள் 'என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். என் குன்யத்தை ('அபுல்காஸிம்' என்னும் என்னுடைய குறிப்புப் பெயரை) சூட்டிக் கொள்ளாதீர்கள்!'' என்றார்கள்.

புஹாரி : 2121 அனஸ் (ரலி).

1381. எங்களில் - அன்சாரிகளில் - ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு 'முஹம்மத்' என்று பெயர் வைக்க அவர் விரும்பினார். அந்த அன்சாரித் தோழர் (அனஸ் இப்னு ஃபுளாலா (ரலி)) என்னிடம் கூறினார்: நான் அக்குழந்தையை என் கழுத்தில் சுமந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; நபி (ஸல்) அவர்கள், 'என் பெயரைச் சூட்டி அழையுங்கள். ஆனால், (அபுல் காசிம் என்னும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டி அழைக்காதீர்கள். ஏனெனில், நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே ஆக்கப்பட்டுள்ளேன். அந்த அன்சாரித் தோழர் 'காசிம்' என்ற நபி (ஸல்) அவர்களின் பெயரைத் தன் குழந்தைக்குச் சூட்ட விரும்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்'' என்றார்கள்.

புஹாரி :3114 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1382. எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் 'காசிம்' என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்), 'உம்மை நாங்கள் அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைத்து, மேன்மைப்படுத்திட மாட்டோம். (நபியவர்களுக்கு 'அபுல் காசிம்' எனும் பெயர் இருப்பதே காரணம்)'' என்று சொன்னோம். எனவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று, இதைத்) தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப் பெயர் சூட்டுக!'' என்று கூறினார்கள்.

புஹாரி : 6186 ஜாபிர் (ரலி).

1383. அபுல் காசிம் (ஸல்) அவர்கள், 'என் பெயரை (உங்களுக்குச்) சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3539 அபூஹூரைரா (ரலி).

No comments: