பயபக்தியாளரிடம் தன் பிள்ளைக்கு பெயர் வைத்தல்.
1386. (என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா (ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூதல்ஹா (ரலி) திரும்பி வந்தபோது 'என் மகன் என்ன ஆனான்?' என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), 'அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்'' என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா (ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) 'பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்'' என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?' எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா (ரலி), 'ஆம்'' என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக'' என்று பிரார்த்தித்தார்கள். பின்னர் உம்முசுலைம் (ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா (ரலி), 'குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டு செல்'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். என்னிடம் உம்மு சுலைம் (ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, 'இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?' என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் 'ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன'' என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு 'அப்துல்லாஹ்' எனப் பெயர் சூட்டினார்கள்.
1387. எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் 'இப்ராஹீம்' என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்துவிட்டார்கள். அக்குழந்தையே அபூ மூஸா (ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும்.
1388. நான் (என் மகன்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை (மக்காவில்) சூலுற்றிருந்தேன். சூல்காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டேன். மதீனா வந்தேன் (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன். பிறகு, நபி (ஸல்) அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களின் மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம் பழம் ஒன்றைக் கொண்டு வரும்படிக் கூறி அதை மென்று அவனுடைய வாயில் உமிழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீர் தான் அவனுடைய வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனுடைய வாயினுள் வைத்து தேய்த்து விட்டார்கள். பிறகு அவனுக்காக துஆ செய்து, இறைவனிடம் அருள்வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான்.
1389. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ (ரலி) அவர்களின் புதல்வர் 'முன்திர்' என்பவர் பிறந்தவுடன் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அக்குழந்தையைத் தம் மடியில் வைத்தார்கள். அப்போது (குழந்தையின் தந்தை) அபூ உசைத் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (திடீரென) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் நடந்த (சம்பவம்) ஒன்றினால் அவர்களின் கவனம் (வேறு பக்கம்) திரும்பியது. உடனே அபூ உசைத் (ரலி) அவர்கள் தம் புதல்வரை நபியவர்களின் மடியிலிருந்து எடுத்துவிடுமாறு கூற, அவ்வாறே (குழந்தை) தூக்கப்பட்டது. (சிறிது நேரத்தில்) தன்னிலைக்குத் திரும்பிய நபி (ஸல்) அவர்கள் 'அந்த குழந்தை எங்கே?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ உசைத் (ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! குழந்தையை (வீட்டுக்கு) அனுப்பிவிட்டோம்'' என்று கூறினார். 'அக்குழந்தையின் பெயரென்ன?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, 'இன்னது' என (தம் மகனுக்கு வைக்கப்பட்ட பெயரை) அபூ உசைத் கூறினார்கள். (அப்பெயர் பிடிக்காததால்) நபி (ஸல்) அவர்கள் 'அல்ல (இனிமேல்) அவர் பெயர் 'முன்திர்' (எச்சரிப்பவர்) ஆகும்'' என்று கூறினார்கள். எனவே, அன்று அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தாம் 'முன்திர் எனப் பெயர் சூட்டினார்கள்.
1390. நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு 'அபூ உமைர்' என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார்கள். அப்போது அவர் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகிறேன். நபி (ஸல்) அவர்கள் (எம் வீட்டிற்கு வந்தால்), 'அபூ உமைரே! உன் சின்னக்குருவி என்ன செய்கிறது?' என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.
No comments:
Post a Comment