அல்லாஹ்வின் மீதே தவக்குல் வைத்தல்.
1470. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் திரும்பியபோது நானும் அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்தபோது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப்பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தம் வாளை அந்த மரத்தில் தொங்கவிட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது இவர் என்னுடைய வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரின் கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், 'என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?' என்று கேட்டார். நான், 'அல்லாஹ்' என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்' என்று கூறினார்கள். பிறகு அவரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை (மன்னித்து விட்டு விட்டார்கள்.)
No comments:
Post a Comment