Monday, August 04, 2008

ஹவ்ளுல் கவ்ஸர் பற்றி....

1475. நான் உங்களுக்கு முன்பே ('அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6589 ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி).

1476. நான் உங்களுக்கு முன்பே 'அல்கவ்ஸர்' தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வர முடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். (அதை) அருந்துகிறவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்து கொள்வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6583 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி).

1477. (நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியேற்றுக் கொண்டிருந்த நுஅமான் இப்னு அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்கள் 'இவ்வாறுதான் ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியேற்றீர்களா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று சொன்னேன். அதற்கவர்கள் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதைவிட அதிகபட்சமாக அறிவிப்பதை கேட்டுள்ளேன்'' '(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்''என்று நான் கூறுவேன். அதற்கு 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று சொல்லப்படும். உடனே நான் 'எனக்குப் பின்னால்(தம் மார்க்கத்தை) மாற்றி விட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!'' என்று (இரண்டு முறை) கூறுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6584 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

1478. ('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6579 அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) .

1479. நான் ('அல்கவ்ஸர்') தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்க விடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்'' என்பேன். அதற்கு 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்களின் மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்று கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6593 அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி).

1480. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப் பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடம் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது. பிறகு அவர்கள் மேடை மீது ஏறி, 'நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். (என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன். நிச்சயமாக! (என்னுடைய மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொவருர் (போட்டியிட்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி :4042 உக்பா பின் ஆமிர் (ரலி).

1481. ''நான் உங்களுக்கு முன்பே ('அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!'' என்பேன். அப்போது 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது' எனக் கூறப்படும்.

புஹாரி :6575-6576 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).

1482. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் ('அல்கவ்ஸர்') எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது '(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) 'ஸன்ஆ' நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 6591 ஹாரிதா பின் வஹப் (ரலி).

1483. '' ('அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) 'ஸன்ஆ'விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்கள் என்னிடம் 'அதன் கோப்பைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று வினவினார்கள். நான் 'இல்லை' என்றேன். அதற்கு அவர்கள் '(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்'' என (நபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததாக)ச் சொன்னார்கள்.

புஹாரி : 6592 ஹாரிதா பின் வஹப் (ரலி).

1484. (மறுமை நாளில் என்னுடைய 'அல்கவ்ஸர்' எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) 'ஜர்பா' மற்றும் 'அத்ருஹ்' ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6577 இப்னு உமர்(ரலி) .

1485. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! (தன்னுடைய குளத்தில் நீரருந்த விடாமல்) அந்நிய ஒட்டகத்தை குளத்தின் உரிமையாளர்) குளத்திலிருந்து விரட்டுவதைப் போன்று நானும் (மறுமையில் சிறப்புப் பரிசாக) எனக்குக் கிடைக்கவிருக்கும் தடாகத்திலிருந்து சில மனிதர்களை (நீரருந்த விடாமல்) விரட்டுவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2367 அபூஹூரைரா (ரலி).

1486. என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள 'ஸன்ஆ' நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) 'அய்லா' நகரத்திற்கும் இடையேயான (தொலை தூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிடலங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6580 அனஸ்(ரலி).

1487. (மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும்போது என்னைவிட்டுஅவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். அப்போது நான் '(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!'' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :அனஸ்(ரலி).

No comments: