Saturday, August 23, 2008

முஸ்லீம்களில் பெருங்குற்றம் புரிந்தவர்.

1521. 'தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7289 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).

1522. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், 'நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்'' என்று குறிப்பிட்டார்கள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், 'என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'இன்னார்'' என்று கூறினார்கள். அப்போதுதான் 'இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி:4621 அனஸ் (ரலி).

1523. நபித்தோழர்கள் (சிலர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, '(நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.) இன்று நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப் போவதில்லை'' என்றார்கள். அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொரு வரும் தம்தம் ஆடையால் தம் தலைகளைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள். இந்நிலையில் ஒருவர் தம் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என தாம் அழைக்கப்படுவது குறித்துச் சிலருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?' என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஹுதாஃபா (தாம் உன் தந்தை)'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் சாந்த முகத்தில் கோபத்தின் ரேகை படர்வதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறலானார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் நான் ஒருபோதும் கண்டதில்லை. எனக்கு சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்த சுவருக்கு அப்பால் கண்டேன்'' என்றார்கள்.

புஹாரி :6362 அனஸ் (ரலி).

1524. 'நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களிடம் அது பற்றி அதிகமாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டபோது கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் 'நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்' எனக் கூறினார்கள். அப்போது ஒருவர். 'யார் என்னுடைய தந்தை?' என்று கேட்டதற்குவர்கள் 'ஹுதாபாதான் உம்முடைய தந்தை' என்றார்கள். உடனே வேறொருவர் எழுந்து 'என்னுடைய தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க 'உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம் என்பவர் தாம்' என்றார்கள். (இக் கேள்விகளின் மூலம்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மெய்யாகவே மகத்துவமும், கண்ணியமும் மிக்க இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்' என்றார்கள்''.

புஹாரி : 92 அபூ மூஸா (ரலி).

1525. (எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 3589 அபூஹூரைரா (ரலி).

No comments: