Sunday, August 31, 2008

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1545. உமர் (ரலி) (இறந்தவுடன்) கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார்கள். அப்போது மக்கள், அவரைச் சுற்றிலும் (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து பிரார்த்திக்கலாயினர். அவரின் ஜனாஸா (சடலம்) எடுக்கப்படுவதற்கு முன்பாக அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழலாயினர். அப்போது நான் அவர்களிடையே இருந்தேன். என் தோளைப் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் தான் என்னை திடுக்கிடச் செய்தார். (யாரென்று திரும்பிப் பார்த்த போது) அது அலீ இப்னு அபீதாலிப் (ரலி) தாம். அவர்கள், 'உமர் அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!'' என்று பிரார்த்தித்துவிட்டு, '(உமரே!) உயரிய நற்செயலுடன் நான் அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்மாதிரியாக, நான் விரும்பி ஏற்கத் தக்கவர் எவரும் உங்களுக்குப் பின்னால் இல்லை. (நீங்கள் தாம் அத்தகைய மனிதர்.) அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களை உங்கள் தோழர்க(ளான நபி - ஸல் - அவர்கள் மற்றும் அபூபக்ர் - ரலி - அவர்)கள் இருவருடனும் தான் (அவர்களின் மண்ணறைக்கு அருகில் தான்) அடங்கச் செய்வான் என்று எண்ணியிருந்தேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், 'நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்'' என்றும் 'நானும் அபூபக்ரும் உமரும் (இந்த இடத்திற்கு) உள்ளே புகுந்தோம்'' என்றும் 'நானும் அபூபக்ரும் உமரும் புறப்பட்டோம்'' என்று சொல்வதை நான் நிறையச் செவியுற்றிருக்கிறேன் எனக் கூறினார்கள்.

புஹாரி : 3685 இப்னு அப்பாஸ் (ரலி).

1546. 'நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது கனவில் மக்களில் சிலரைப் பார்த்தேன். அவர்களின் மீது (பல விதமான) சட்டைகள் அணிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டனர். அச்சட்டைகளில் சில அவர்களின் மார்பு வரை நீண்டிருந்தன. இன்னும் சில அதற்கும் குறைவாக இருந்தன. உமர் இப்னு கத்தாப் (தரையில்) இழுபடும் அளவு (நீண்ட) சட்டை அணிந்தவர்களாக என்னிடம் எடுத்துக் காட்டப்பட்டார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (சட்டைக்கு) என்ன விளக்கம் தருகிறீர்கள்? எனக் கேட்டதற்கு 'மார்க்கம்' 'என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்''.

புஹாரி : 23 அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) .
1547. 'நான் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் (என்னுடைய கனவில்) ஒருபால்கோப்பை என்னிடம் கொண்டு வரப்பட்டது. உடனே (அதிலிருந்த பாலை நான்) தாகம் தீருமளவு குடித்து அது என்னுடைய நகக் கண்கள் வழியாக வெளியேறுவதைப் பார்த்தேன். பின்னர் மீதமிருந்ததை உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது நபித் தோழர்கள் இறைத்தூதர் அவர்களே! அந்தப்பாலுக்குத் தாங்கள் என்ன விளக்கம் தருகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'கல்வி' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

புஹாரி: 82 இப்னு உமர் (ரலி).

1548. நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக்கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த்தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை.. அல்லது இரண்டு வாளிகள் நீரை.. இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தா பின் மகன் உமர் எடுத்தார். உமர் இறைத்தைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3664 அபூஹுரைரா (ரலி).

1549. கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச் சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி... அல்லது இரண்டு வாளிகள்... தண்ணீரை(சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக! பிறகு உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக் கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3682 இப்னு உமர் (ரலி).

1550. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், '(கனவில்) 'நான் சொர்க்கத்தினுள் நுழைந்தேன்' அல்லது 'சொர்க்கத்திற்குச் சென்றேன்' அங்கு ஒரு மாளிகையைக் கண்டேன். நான், 'இது யாருடையது?' என்று கேட்டேன். அவர்கள் (வானவர்கள்), 'இது உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது'' என பதிலளித்தார்கள். அந்த மாளிகைக்குள் நான் செல்ல நினைத்தேன். ஆனால், (உமரே!) உம்முடைய ரோஷம் குறித்து நான் அறிந்திருந்தது என்னை (உள்ளே செல்லவிடாமல்) தடுத்துவிட்டது'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் இப்னு கத்தாப் (ரலி), 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார்கள்.

புஹாரி :5226 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1551. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோதுஅவர்கள், 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், 'இந்த அரண்மனை யாருடையது?' என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். 'உமர் இப்னு கத்தாப் அவர்களுக்குரியது. ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அழுதார்கள். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?' என்று கேட்டார்கள்.

புஹாரி : 3242 அபூஹூரைரா (ரலி).

1552. (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே'' என்றார்கள். உமர் (ரலி), 'எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) 'தமக்குத் தாமே பகைவர்களாகி விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், 'ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கிறீர்கள்'' என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்'' என்று கூறினார்கள்.

புஹாரி :3294 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

1553. (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்து விட்டபோது, அவரின் புதல்வர் அப்துல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்குக் கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் சட்டையைக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் தம் சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) தம் தந்தைக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள். உடனே உமர் (ரலி) எழுந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுகை நடத்தப்போகிறீர்கள்!'' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்'' என்று கூறிவிட்டு, '(நபியே!) நீங்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்; அல்லது கோராமலிருங்கள். (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீங்கள் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்'' என்று கூறுகிறான். நான் எழுபது முறையை விட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்'' என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இவர் நயவஞ்சகராயிற்றே!'' என்று கூறினார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோனான அல்லாஹ், 'அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) தொழுகை நடத்தாதீர். அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 09:84 வது) வசனத்தை அருளினான்.

புஹாரி : 4670 இப்னு உமர் (ரலி).

No comments: