கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
1573. இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி: 3432 அலீ (ரலி).
1574. ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் 'ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3411 அபூ மூஸா (ரலி).
1575. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.
புஹாரி : 3820 அபூஹூரைரா (ரலி).
1576. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், 'நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் கூறினார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி கூறினார்கள்)'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3819 இஸ்மாயீல் (ரலி).
1577. கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள்.
புஹாரி : 3818 ஆயிஷா (ரலி).
1578. ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)'' என்று கேட்டேன்.
புஹாரி: 3821 ஆயிஷா (ரலி).
No comments:
Post a Comment