Showing posts with label தண்டனை. Show all posts
Showing posts with label தண்டனை. Show all posts

Thursday, January 15, 2009

இறை வேதனைக்கு பயப்படுதல்

1876. ''இறைவனால் தண்டிக்கப்பட்ட இந்த (ஸமூத் கூட்டத்தினரின்) இடத்திற்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம்! நீங்கள் அழுதவர்களாக இல்லையென்றால் அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள்! அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 433 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1877. மக்கள் (தபூக் போரின்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான 'ஹிஜ்ர்' என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டி விடும்படியும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டு விடும்படியும் கட்டளையிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் - அலை- அவர்களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) எந்தக் கிணற்றிற்கு வந்து கொண்டிருந்தோ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் உத்திரவிட்டார்கள்.

புஹாரி : 3379 இப்னு உமர் (ரலி).

Thursday, December 11, 2008

அல்லாஹ்வை விட பொறுமையாளன் இல்லை.

1787. மன வேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு 'யாருமில்லை' அல்லது 'ஏதுமில்லை' மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6099 அபூ மூஸா (ரலி).

Sunday, November 30, 2008

நல்லறங்கள் தீயவைகளை அழித்து விடும்.

1758. ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றி விடும்'' (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் 'இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?' என்று கேட்டதற்கு 'என் சமுதாயம் முழுமைக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

புஹாரி :526 இப்னு மஸ்ஊது (ரலி).

1759. நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருமனிதர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றை செய்து விட்டேன். எனவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். எனவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (தொழுதேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் அல்லாஹ் 'உம்முடைய பாவத்தை' அல்லது உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்றார்கள்.

புஹாரி :6823 அனஸ் (ரலி).

Friday, November 28, 2008

பாவங்களை மீண்டும் செய்து விட்டு தவ்பா செய்பவன் பற்றி....

1754. ஓர் அடியார் ஒருபாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! நான் ஒரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே அவரின் இறைவன். 'என் அடியான் எனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நன்று) நான் என் அடியானை மன்னித்து விட்டேன்'' என்று சொன்னான். பிறகு அந்த அடியார் (சிறிது காலம்) அல்லாஹ் நாடியவரை அப்படியே இருந்தார். பிறகு மீண்டும் ஒரு பாவத்தைச் செய்தார். அப்போது அந்த மனிதர் (மீண்டும்) 'என் இறைவா! நான் மற்றொரு பாவம் செய்து விட்டேன். எனவே, என்னை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். உடனே இறைவன் (இம் முறையும்) 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (நல்லது.) நான் என் அடியானை மன்னித்து விட்டேன்'' என்று சொன்னான். பிறகு அல்லாஹ் நாடியவரை அந்த மனிதர் அப்படியே (சிறிது காலம்) இருந்தார். பிறகும் (மற்றொரு) பாவம் செய்தார். (இப்போதும் முன்பு போன்றே) 'என் இறைவா! நான் இன்னொரு பாவம் செய்து விட்டேன். எனக்காக அதை மன்னித்து விடுவாயாக' என்று பிரார்த்தித்தார். அதற்கு அல்லாஹ் 'என் அடியான் தனக்கோர் இறைவன் இருக்கிறான் என்றும், அவன் பாவங்களை மன்னிப்பான்; (அல்லது) அதற்காகத் தண்டிப்பான் என்றும் அறிந்துள்ளானா? (அப்படியானால்) நான் என் அடியானை மூன்று முறையும் மன்னித்து விட்டேன். இனி அவன் நாடியதைச் செய்து கொள்ளட்டும்'' என்று சொன்னான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7507 அபூஹூரைரா (ரலி).

Monday, August 11, 2008

நற்குணங்கள்.

1501.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் கறுப்பு நிற அடிமையான அன்ஜஷா எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப்பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து) கொண்டிருந்தார். அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'உமக்கு நாசம்தான் (வைஹக்க). அன்ஜஷா! நிதானம்! (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!'' என்று கூறினார்கள்.

புஹாரி :6161 அனஸ் (ரலி).

1502. இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் -எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழி வாங்கியதில்லை. அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி வாங்குவார்கள்.)

புஹாரி :3560 ஆயிஷா (ரலி).