Showing posts with label பதில். Show all posts
Showing posts with label பதில். Show all posts

Thursday, January 08, 2009

இரு ஸூருக்கும் இடைப்பட்ட காலம்.

1864. ''(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) கூறினார். (அபூஹுரைரா (ரலி) அவர்களின் நண்பர்கள்,) '(அபூஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?' என்று கேட்டனர். அபூஹுரைரா (ரலி), '(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்'' என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், 'நாற்பது மாதங்களா?' என்று கேட்டனர். அதற்கும் 'நான் விலகிக் கொள்கிறேன்'' என அபூஹுரைரா (ரலி) கூறினார். 'ஆண்டுகள் நாற்பதா?' என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி), 'நான் விலகிக் கொள்கிறேன்'' என்று கூறினார்கள். பின்னர், 'வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள் வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்'' என்று மேலும் கூறினார்கள்.

புஹாரி : 4935 அல் அமாஷ் (ரலி).

Tuesday, November 11, 2008

அல்லாஹ்விடம் கேட்கும் துஆ.

1715. நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். 'அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு'' என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6338 அனஸ் (ரலி).

1716. நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள் புரிவாயாக'' என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப் படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6339 அபூஹுரைரா (ரலி).

Friday, September 26, 2008

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1616. மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) பள்ளிவாசலில் கவி பாடுவதை உமர் (ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான் (ரலி), 'நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இருக்கும்போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்'' என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா (ரலி) பக்கம் திரும்பி, 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!'' என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி), 'ஆம் (செவியுற்றிருக்கிறேன்)'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3212 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி).

1617. நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், 'எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3213 அல்பராஉ (ரலி).

1618. (ஒரு முறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக் கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்'' என்று கூறினார்கள்.

புஹாரி :3531 உர்வா (ரலி).

1619. (ஒருமுறை) நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவை) பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (தம் பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, '(அவர்கள்) கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம் சாட்டப்பட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள்'' என்று பாடினார்கள். அப்போது ஹஸ்ஸான் அவர்களைப் பார்த்து ஆயிஷா (ரலி), 'ஆனாலும், நீங்கள் அப்படியல்ல (என்னைப் பற்றி அவதூறு பேசுபவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்'') என்று கூறினார்கள்.(தொடர்ந்து) அறிவிப்பாளர் மஸ்ரூக் (ரஹ்) கூறினார்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'ஹஸ்ஸான் அவர்களைத் தங்களிடம் வர ஏன் அனுமதிக்கிறீர்கள்? அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில்), 'அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்கு கடினமான வேதனையுண்டு'' என்று (திருக்குர்ஆன் 24:11ல்) கூறுகிறானே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'குருடாவதை விடக் கொடிய வேதனை ஏது?' என்று கூறிவிட்டு, 'அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பில் பதிலளிப்பவராக அல்லது இறைத்தூதர் சார்பில் (எதிரிகளுக்கு பதிலடியாக) வசைக் கவிபாடுபவராக இருந்தார் என்று கூறினார்கள்.

புஹாரி : 4146 மஸ்ரூக் (ரலி).

1620. (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பவர்கள் வசைபாடிய போது) இணைவைப்பவர்களுக்கெதிராக வசைக் கவிதை பாடுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களுடன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது; எப்படி?' என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி), 'மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி) விடுவேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3531 ஆயிஷா (ரலி).

Monday, September 08, 2008

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) அவர்களின் சிறப்பு.

1572. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'ஆம், நபி (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றினார்கள். உங்களை விட்டு விட்டார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3082 இப்னு அபீ முலைக்கா (ரலி).

Monday, June 23, 2008

வேதக்காரர்களின் ஸலாமுக்கு எப்படி பதிலுரைப்பது?

1398. வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6258 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1399. யூதர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னால் அவர்களில் சிலர் 'அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். எனவே, (அவர்களுக்கு பதிலாக) 'வ அலைக்க' (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6257 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1400. யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து 'அஸ்ஸாமு அலைக்க' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர். 'வ அலைக்கு முஸ்ஸாமு வல்லஅனா'' (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்றார்கள். உடனே நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?' என்று கேட்டேன் அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நான் ('அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து) 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என பதிலளித்து விட்டேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி :6256 ஆயிஷா (ரலி).