உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.
1734. 'நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர் 'யா அல்லாஹ்! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டு விட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன்' என்ற பிரார்த்தனையை நீ செய்து கொள். (இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கினால்) அந்த இரவில் நீ இறந்து விட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள்'' என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது 'நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் 'இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்' என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள்''.
1735. நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டி விடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு (பின்வருமாறு) பிரார்த்தியுங்கள்: பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ. வ பிக்க அர்ஃபஉஹு இன் அம்ஸக்த்த நஃப்ª ஃபர்ஹம்ஹா வ இன் அர்ஸல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பிமா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.
(பொருள்: என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால், அதற்கு நீ கருணை புரிவாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1736. நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்து வந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்து விடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1737. நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபி ஃபீ அம்ரீ குல்லிஹி, வமா அன்த்த அஉலமு பிஹி மின்னீ, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ கத்தாயாய, வ அம்தீ, வ ஜஹ்லீ, வ ஜத்தீ வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்ம ஃக்ஃபிர் லீ மா கத்தகித்து, வ மா அஉலன்த்து, அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.
(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.
1738. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப்போரில் எதிரிகள் தோல்வியுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும் போது) 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்த எதிர்) அணியினரை அவனே தனியாக வென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப் போவது) இல்லை'' என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment