Wednesday, November 26, 2008

தவ்பாவின் சிறப்பு.

தவ்பா (பாவ மீட்சி)

1746. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் ஒரு முழுமளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் நான் (வலதும் இடதுமாக விரித்த) இரண்டு கைகளின் நீள அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடிச் செல்வேன்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7405 அபூஹுரைரா (ரலி).

1747. ஒரு மனிதன் (பயணத்தினிடையே) ஓய்வெடுக்க ஓரிடத்தில் இறங்கினான். அந்த இடத்தில் அவனுக்கு (உணவோ தண்ணீரோ கிடைக்காது என்பதால்) ஆபத்து (காத்து) இருந்தது. அவனுடைய உணவும் பானமும் வைக்கப்பட்டிருந்த அவனுடைய வாகனப் பிராணியும் அவனுடன் இருந்தது. அப்போது அவன் தலையைக் கீழேவைத்து ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கி எழுந்தான். அப்போது அவனுடைய வாகனப் பிராணி (தப்பி ஒடிப்) போயிருந்தது. (எனவே அவன் அதைத் தேடிப் புறப்பட்டான்.) அப்போது அவனுக்குக் 'கடுமையான வெப்பமும் தாகமும்' அல்லது 'அல்லாஹ் நாடிய (கஷ்டம்) ஒன்று' ஏற்பட்டது. அவன், 'நான் முன்பிருந்த அதே இடத்திற்குத் திரும்பிச் செல்கிறேன்'' என்று கூறியவாறு (அங்கு) திரும்பிச் சென்றான். பிறகு ஒரு (குட்டித்) தூக்கம் தூங்கினான். பிறகு தன் தலையை உயர்த்தினான். அப்போது தப்பிப்போன தன்னுடைய பிராணி தன்னருகில் இருப்பதைக் கண்டான். (இப்போது அவன் எந்த அளவுக்கு மகிழ்வான்!) அந்த மனிதன் மகிழ்ச்சி அடைவதைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புக் கோரித் தன்னிடம் திரும்புவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6308 இப்னு மஸ்ஊத் (ரலி).

1748. உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6309 அனஸ் (ரலி).

No comments: