Showing posts with label அன்பளிப்பு பொருட்கள். Show all posts
Showing posts with label அன்பளிப்பு பொருட்கள். Show all posts

Friday, December 21, 2007

ஆயுட்கால அன்பளிப்பு பற்றி....

1050. உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி (ஸல்) அவர்கள், 'அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது'' என்று தீர்ப்பளித்தார்கள்.

புஹாரி 2625 ஜாபிர் (ரலி).

1051. ஆயுட்கால அன்பளிப்பு அனுமதிக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2626 அபூஹுரைரா (ரலி).

Thursday, December 20, 2007

தன் பிள்ளைகளிடம் பாகுபாடு காட்டலாகாது.

1048. என்னை என் தந்தையர் (பஷீர் பின் ஸஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கிறேன்.என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

புஹாரி :2586 நுஃமான் பின் பஷீர் (ரலி).

1049. நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாய் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன், என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக,எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும்படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதேப்போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்துச் செய்தார்கள்.

புஹாரி 2587 ஆமிர் (ரலி).

Saturday, June 09, 2007

நபி குடும்பத்தாருக்கு அன்பளிப்பு தர்மப்பொருட்கள்...

648. பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்'' என்றார்கள்.


புஹாரி : 1495 அனஸ் (ரலி)

649. நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் (வீட்டிற்கு) சென்று '(உண்பதற்கு) ஏதேனும் உள்ளதா?' எனக் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி), 'நீங்கள் நுஸைபாவுக்கு தர்மமாக அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பி வைத்துள்ளார். அதைத் தவிர வேறொன்றும் நம்மிடம் இல்லை'' என்றார். நபி (ஸல்) அவர்கள் 'அப்படியெனில் அது தன்னுடைய இடத்தை (அன்பளிப்பின் அந்தஸ்தை) அடைந்துவிட்டது'' என்றார்கள்.


புஹாரி : 1494 உம்மு அதிய்யா (ரலி).

650. அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் உணவுப்பொருள் கொண்டு வரப்படும் போது இது அன்பளிப்பா? தருமமா? என அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம் நீங்கள் உண்ணுங்கள் என்று கூறி விடுவார்கள் தாம் உண்ண மாட்டார்கள். அன்பளிப்பு என்று கூறப்பட்டால் தம் கையைத் தட்டிக் கொண்டு (விரைந்து) தோழர்களுடன் சேர்ந்து உண்பார்கள்.

புஹாரி : 2576 அபூஹூரைரா (ரலி).