Showing posts with label ஹஜ். Show all posts
Showing posts with label ஹஜ். Show all posts

Monday, September 10, 2007

இணைவைப்போர் நிராகரிப்போர் ஹஜ் உம்ரா செய்ய தடை நிர்வாண தவாஃப் தடை.

854. ஹஜ்ஜத்துல் விதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், 'எச்சரிக்கை! இந்த ஆண்டிற்குப் பின்னர் இணைவைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக்கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் வலம் வரக்கூடாது' என அறிவிக்கச் செய்தார்கள்.

புஹாரி : 1622 அபூஹூரைரா (ரலி).

Sunday, September 09, 2007

ஹஜ் உம்ராவிலிருந்து திரும்பும் போது...

852. நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் கற்கள் நிறைந்த இடத்தில் தம் ஒட்டகத்தை அமர வைத்து, அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள். இப்னு உமர் (ரலி), இது போன்றே செய்வார் என நாஃபிஉ கூறுகிறார்.

புஹாரி :1532 இப்னு உமர் (ரலி).

853. பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் முஅர்ரஸ் எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்தபோது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) 'நீங்கள் அபிவிருத்தி மிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள்'' என்று (வானவரால்) கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் முஅர்ரஸ் எனுமிடத்தைத் தேர்வு செய்தது போல் இப்னு உமரும் அங்கேயே தம் ஒட்டகத்தை உட்கார வைப்பார். அவரின் மகன் ஸாலிமும் அவ்வாறே செய்வார். முஅர்ரஸ் என்னுமிடம் பத்னுல் வாதியிலுள்ள பள்ளிவாசலின் கீழ்ப் புறத்தில் சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற்கும் நடுவிலுள்ளது என்று மூஸா இப்னு உக்பா கூறுகிறார்.

புஹாரி :1535 இப்னு உமர் (ரலி).

Friday, August 31, 2007

மாதவிடாய்ப் பெண் தவிர தவாஃப் அல் விதா அனைவரும் செய்வது.

835. ''இறையில்லம் கஅபாவை வலம் வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்' என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் விதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.)

புஹாரி :1755 இப்னு அப்பாஸ் (ரலி).

836. 'ஹஜ்ஜின்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது' எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் 'அவள் நம்மைப் பயணத்தைவிட்டு நிறுத்தி விடுவாள் போலிருக்கிறதே! உங்களுடன் அவள் தவாஃப் செய்யவில்லையா?' என்று கேட்டார்கள். 'தவாஃப் செய்துவிட்டார்' என (அங்கிருந்தோர்) கூறினார்கள். 'அப்படியானால் புறப்படுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்'.

புஹாரி : 328 ஆயிஷா (ரலி) .

837. ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா (ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் 'நான் உங்களை (புறப்படுவதை விட்டும்) தடுத்துவிட்டேன் எனக் கருதுகிறேன்' என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் 'காரியத்தைக் கெடுத்து விட்டீரே!'' என்று கூறிவிட்டு 'இவர் நஹ்ருடைய (10-ஆம்) நாளில் வலம் வந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். அதற்கு 'ஆம்' எனச் சொல்லப்பட்டதும் 'அப்படியாயின் புறப்படு!'' என்றார்கள்.

புஹாரி :1771 ஆயிஷா (ரலி).

Tuesday, August 21, 2007

முஜ்தலிஃபாவில் ஃபஜ்ரை முன்பாகவே தொழுதல்.

811. ''நபி (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையையும் (அதற்குரிய நேரத்தில் தொழாமல்) வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை... இரண்டு தொழுகைகளைத் தவிர! ஒன்று : (முஸ்தலிஃபாவில்) மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதது இன்னொன்று : ஃபஜ்ரை அதற்கான (வழக்கமான) நேரத்திற்கு முன் (முஸ்தலிஃபாவிலேயே) தொழுதது,''

புஹாரி : 1682 இப்னு மஸ்ஊத் (ரலி).

Saturday, August 18, 2007

ஜமராவில் கல்லெறியும் வரை தல்பியாக் கூறுதல்.

805. அரஃபாவிலிருந்து திரும்பும்போது நான் வாகனத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவுக்கு அருகிலுள்ள இடது புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை அமரச் செய்துவிட்டுச் சிறுநீர் கழித்துவிட்டுப் பிறகு வந்தார்கள். நான் அவர்களுக்கு உளூச் செய்யத் தண்ணீர் ஊற்றினேன். சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது நான், இறைத்தூதர் அவர்களே! தொழப் போகிறீர்களா? எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்) தான்' எனக் கூறிவிட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிஃபா வந்ததும் தொழுதார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும் நாளில் ஃபழ்ல் இப்னு அப்பாஸைத் தம் வாகனத்தில் தமக்குப் பின்னால் ஏற்றினார்கள். குரைப் மற்றொரு அறிவிப்பாளர் கூறினர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜமராவைச் சென்றடையும் வரையில் தல்பியா கூறிக் கொண்டிருந்தார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

புஹாரி :1669 உஸாமா பின் ஜைது (ரலி).

Monday, August 13, 2007

உம்ரா ஹஜ்ஜில் ரமல் செய்தல்

794. நபி (ஸல்) அவர்கள் கஃபாவை வலம் வரும்போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள். பிந்திய நான்கு சுற்றுக்களில் நடப்பார்கள். மேலும் ஸஃபா, மர்வாவுக்கிடையே உள்ள நீரோடைப் பகுதியில் மட்டும் விரைந்து ஓடுவார்கள்.

புஹாரி :1617 இப்னு உமர் (ரலி).

795. நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்தபோது, 'யத்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர்' என்று இணைவைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என்றும் ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். தவாஃபின் மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

புஹாரி :1602 இப்னு அப்பாஸ் (ரலி).

796. நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மர்வாயையும் வலம் வரும்போது தொங்கோட்டம் ஓடியது இணைவைப்போருக்குத் தம் பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.

புஹாரி :1649 இப்னு அப்பாஸ் (ரலி).

Friday, August 10, 2007

மக்காவினுள் ஒருவழியாக நுழைந்து மறு வழியாக வெளியேறுதல்

787. நபி (ஸல்) அவர்கள் ஷஜரா எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும்போது முஅர்ரஸ் எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு செல்லும்போது ஷஜராவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும்போது பத்னுல் வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுதுவிட்டு விடியும் வரை அங்கேயே தங்குவார்கள்.

புஹாரி : 1533 இப்னு உமர் (ரலி).

788. நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.

புஹாரி : 1575 இப்னு உமர் (ரலி).

789. நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்தால் அதன் மேற்புறத்தின் வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறத்தின் வழியாக வெளியேறுவார்கள்.

புஹாரி : 1577 ஆயிஷா (ரலி).

790. மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்கள் 'கதாஉ' (எனும் கணவாய்) வழியாக மக்காவில் நுழைந்து மக்காவின் மேற்பகுதியிலுள்ள 'குதா' (எனும் கணவாய்) வழியாக வெளியேறினார்கள்.

புஹாரி : 1578 ஆயிஷா (ரலி).

Thursday, August 09, 2007

ரமலான் மாதத்தில் செய்யும் உம்ராவின் சிறப்பு!

786. நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம்... 'இப்னு அப்பாஸ் (ரலி) அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள். நான் அதை மறந்துவிட்டேன்!'' என அவரிடமிருந்து அறிவிக்கும் அதா (ரஹ்) கூறினார்.. 'நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவரின் மகனும் (என்னுடைய கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; இன்னொரு ஒட்டகத்தை விட்டுச் சென்றுள்ளனர்; அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்!'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்!' எனக் கூறினார்கள்; அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்.


புஹாரி : 1782 இப்னு அப்பாஸ் (ரலி).

Tuesday, August 07, 2007

இஹ்ராமும் பலிப்பிராணியும்

781. யமனிலிருந்து திரும்பிய அலீ (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'எதற்காக இஹ்ராம் அணிந்தீர் (ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் சேர்த்தா? உம்ராவிற்கு மட்டுமா)?' எனக் கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) 'நீங்கள் இஹ்ராம் அணிந்தது போன்றே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன்...'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், 'என்னுடன் குர்பானிப் பிராணி இல்லையெனில் (உம்ராவை முடித்து) நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்'' என்றார்கள்.


புஹாரி:1558 அனஸ் (ரலி).

Sunday, August 05, 2007

இஹ்ராமிலிருந்து விடுபடுவது....

779. இப்னு அப்பாஸ் (ரலி), 'உம்ரா செய்பவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவார்'' என்று சொன்னதாக அதாஉ (ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். நான், 'எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) இப்படிக் கூறுகிறார்கள்'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'தியாகப் பிராணிகளை அறுத்துத் தியாகம் செய்வதற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகில் உள்ளது'' எனும் (திருக்குர்ஆன் 22:33வது) இறைவசனத்தை ஆதாரமாகக் கொண்டும், நபி (ஸல்) அவர்கள், 'ஹஜ்த்துல் விதாவின்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடும்படி தம் தோழர்களுக்கு உத்தரவிட்டதை ஆதாரமாகக் கொண்டும் தான் இப்படிக் கூறினார்கள்'' என்று பதிலளித்தார்கள். நான், 'இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?' என்று கேட்டேன். அதற்கு அதாஉ(ரஹ்), 'அரஃபாவில் தங்குவதற்கு முன்பும் அங்கிருந்து வந்த பின்பும் (இரண்டு நேரங்களிலுமே) இஹ்ராமிலிருந்து விடுபடுவது அனுமதிக்கப்பட்டதே என்று இப்னு அப்பாஸ் (ரலி) கருதி வந்தார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4396 இப்னு ஜூரைஜ் (ரலி).