போர் வெற்றிப் பொருட்களைத் திருடுபவர் நரகில்.. .
74- நாங்கள் கைபரை வெற்றி கொண்டோம். அப்போது நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. மாடு, ஒட்டகம் (வீட்டுப்) பொருட்கள்,தோட்டங்கள் ஆகியவற்றையே போர்ச்செல்வமாக பெற்றோம். பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) வாதில் குரா என்னுமிடத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். நபியவர்களுடன் மித்அம் எனப்படும் ஓர் அடிமையும் இருந்தார். அவரை பனூளிபாப் குலத்தாரில் (ரிஃபாஅ பின் ஸைத் என்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களின் சிவிகையை அந்த அடிமை இறக்கிக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவர் மீது பாய்ந்தது. அவருக்கு இறைவழியில் உயிர் தியாகம் செய்யும் பேறு கிடைத்து விட்டது. வாழ்த்துகள்! என்று மக்கள் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் இல்லை எனது உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவர் எடுத்துக் கொண்ட போர்வையை அவருக்கு நரக நெருப்பாகி எரிந்து கொண்டிருக்கிறது,என்று கூறினார்கள். நபி(ஸல்)அவர்களிடமிருந்து இதைக் கேட்டபோது ஒரு மனிதர் ,ஒரு செருப்பு வாரை....... அல்லது இரண்டு செருப்பு வார்களைக்...... கொண்டு வந்து இது (போர்ச் செல்வம் பங்கிடப்படும் முன்) நான் எடுத்துக் கொண்ட பொருள் என்று கூறினார். அப்போது (இது சாதாரண செருப்பு வார் அல்ல. இதனைத் திருப்பித்தராமல் இருந்தால் இதுவே )நரகத்தின் செருப்பு வார்....அல்லது இரு வார்கள்....ஆகும் என்று கூறினார்கள்.
புகாரி-4234: அபூஹூரைரா(ரலி)
No comments:
Post a Comment