Sunday, July 23, 2006

பொய் சத்தியம்

ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிக்க பொய் சத்தியம் செய்பவன் குறித்து........

84- ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தை (அநியாயமாக) பறித்துக் கொள்வதற்காக ஒரு பிரமாண(வாக்கு மூல)த்தின் போது துணிவுடன் பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் தான் அவனை (மறுமையில்) சந்திப்பார் என அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும்,தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும் இறுதி நாளில் அல்லாஹ், அவர்களிடம் பேசவுமாட்டான். அவர்களைப் பார்க்கவுமாட்டான்,அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு எனும் (3:77 ஆவது) வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்பால் அஷ் அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (எங்களிடம்) வந்து அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்வூது) உங்களிடம் என்ன சொல்கிறார்? ஏன்று கேட்க, நாங்கள் இப்படி இப்படிச் சொன்னார்கள் என்று பதிலளித்தோம். (அதற்கு)அஷ் அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அவர் சொன்னது உண்மை தான்) என் தொடர்பாகத்தான் அந்த (3:77 ஆவது) வசனம் அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனது கிணறு (ஒன்று) இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக எனக்கும் யூதர் ஒருவருக்குமிடையே ஏற்பட்டத் தகராறில் நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்கள் வழக்கைக் கொண்டு சென்றோம்.) நபி (ஸல்) அவர்கள், உனது (இரு) சாட்சி(கள்), அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் (இவ்வழக்கில் தேவைப்படுகிறது) என்று சொன்னார்கள். உடனே நான், அப்படியென்றால், (யூதரான) இவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எவர் ஒரு பிரமாண(வாக்கு மூல)த்தின் போது அதன் மூலம் ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாகப்) பறித்துக் கொள்வதற்காகத் திட்டமிட்டுப் பொய் சத்தியம் செய்கிறாரோ அவர் மீது அல்லாஹ் கோபம் கொண்ட நிலையில் தான் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார் என்று சொன்னார்கள்.

புகாரி- 4550: அபூ வாயில்(ரஹ்)

No comments: