நிரந்தர நரகம் விதிக்கப்பட்டவர்களைத் தவிர...
118- அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் (அதிபயங்கரமான)இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாராவது) நாம் கேட்டுக் கொண்டால் நன்றாயிருக்குமே! என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான)ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன் (தன்னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும் தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட ,அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தனர். ஆகவே (இந்த துன்ப நிலையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி) எங்களுக்காக நம் இறைவனிடத்தில் பரிந்துரை செய்யுங்கள் என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை, என்று கூறியவாறு (உலகில்) தாம் புரிந்த தவற்றை அவர்கள் நினைவு கூறுவார்கள் உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை என்று கூறி (உலகில்) தாம் புரிந்த தவற்றை நினைவு கூர்ந்து அல்லாஹ் தன்னுடைய உற்ற நன்பராக்கிக் கொண்ட (நபி) இப்ராஹீமிடம் நீங்கள் சொல்லுங்கள் என்றுகூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை நினைவு கூறுவார்கள். பிறகு அல்லாஹ் உரையாடிய (நபி) மூசாவிடம் செல்லுங்கள் என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை அவர்கள் நினைவு கூர்ந்தபடி (நபி) ஈசாவிடம் செல்லுங்கள் என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்வார்கள். அப்போது அவர்கள் (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை. நீங்கள் இறுதி நபியான முஹம்மத் (ஸல்)அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், அவர் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர் என்று கூறுவார்கள்.
உடனே மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடத்தில் அனுமதி கேட்பேன். அவனை நான் கண்டதும் சிரம்பணிந்தவனாக சஜ்தாவில் விழுந்து விடுவேன். அவன் நாடிய நேரம் வரை (நான் விரும்பியதைக் கோர) என்னை விட்டு விடுவான். பிறகு (இறைவன் தரப்பிலிருந்து) உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் சொல்லுங்கள். செவியேற்கப்படும் பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று என்னிடம் கூறப்படும். உடன் நான் என் தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத் தந்த புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்கு பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் சென்று சிரம் பணிந்தவனாக சஜ்தாவில் விழுவேன். அதைப் போன்றே மூன்றாம்முறை அல்லது நான்காம்முறை செய்வேன். இறுதியாகக் குர்ஆன் தடுத்துவிட்டவர்(களான நிரந்தர நரகம் விதிக்கப்பட்ட இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்க மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
No comments:
Post a Comment