லாஇலாஹ இல்லல்லாஹ்!
119- அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். (பீதி மிகுந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அவர்கள் (ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று (இந்தச் சோதனையான கட்டத்திலிருந்து எங்களைக் காக்க) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரைச் செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் அந்தத் தகுதி எனக்கு இல்லை. நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய் பாருங்கள், ஏனென்றால் அவர் அளவிலா அருளாள(னான இறைவ)னின் உற்ற நண்பராவார், என்று கூறுவார்கள். உடனே மக்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும் அந்தத் தகுதி எனக்கு இல்லை, நீங்கள் மூசாவிடம் செல்லுங்கள் என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை அவர்கள் நினைவு கூர்ந்தபடி (நபி) ஈசாவிடம் செல்லுங்கள் என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்வார்கள். அப்போது அவர்கள் (நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை. நீங்கள் இறுதி நபியான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என கூறுவார்கள். உடனே, மக்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், அதற்குரியவன் தான் என்று சொல்லி விட்டு (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதிக் கேட்பேன். அப்போது எனக்கு அனுமதியளிக்கப்படும். தற்போது எனக்குத் தோன்றாத புகழ்மாலைகளையெல்லாம் அப்போது நான் இறைவனைப் போற்றி புகழும் வகையில் எனக்கு அவன் எனது எண்ணத்தில் உதயமாக்குவான். அந்தப் புகழ்மாலைகளால் நான் அவனைப் (போற்றிப்) புகழ்வேன். அவனுக்காக (அவன்முன்) நான்சஜ்தாவில் (சிரவணக்கத்தில்) விழுவேன்.
அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து) முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள், சொல்லுங்கள் உங்களுக்காகச் செவியேற்கப்படும். கேளுங்கள் தரப்படும் பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும். அப்போது நான் என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம் என்பேன். அப்போது சொல்லுங்கள் எவரது உள்ளத்தில் வாற்கோதுமையின் எடையளவு இறைநம்பிக்கை இருந்ததோ அவரை நரகத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள் என்று சொல்லப்படும். ஆகவே நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு திரும்பி வந்து, அதே புகழ்மாலைகளைக் கூறி (மீண்டும்) அவனை நான் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் நான் விழுவேன். அப்போது முஹம்மதே! தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள் தரப்படும் பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று கூறப்படும். அப்போது நான் என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம் என்று சொல்வேன். அப்போது செல்லுங்கள், யாருடைய உள்ளத்தில் அணுவளவு அல்லது கடுகளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொல்லப்படும். நான் சென்று, அவ்வாறே செய்து விட்டு, மீண்டும் திரும்பி வந்து அதேப் புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போதும் முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், உங்கள் சொல் செவியேற்கப்படும், கேளுங்கள். தரப்படும் பரிந்துரை செய்யுங்கள் ,உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். என்று (இறைவனின் தரப்பிலிருந்து) சொல்லப்படும். அப்போது நான் என் இறைவா! என் சமுதாயம், என் சமுதாயம் என்பேன். அதற்கு அவன் செல்லுங்கள் எவரது உள்ளத்தில் கடுகு மணியைவிட மிக மிகச் சிறிய அளவில் இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள். என்று சொல்வான். அவ்வாறே நான் சென்று அ(த்தகைய)வரை நரகத்திலிருந்து வெளியேற்றுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
(நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.) பிறகு நான்காம் தடவையாக நான் இறைவனிடம் சென்று அதே (புகழ்மாலைகளைக்) கூறி இறைவனைப் போற்றிப் புகழ்வேன். பிறகு அவனுக்காக சஜ்தாவில் விழுவேன். அப்போது முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! சொல்லுங்கள், செவியேற்கப்படும். கேளுங்கள், அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும். என்று இறைவனின் தரப்பிலிருந்து சொல்லப்படும். அப்போது நான் என் இறைவா! (உலகில்) லாயிலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)என்று சொன்னவர்கள் விஷயத்தில் பரிந்துரை செய்ய) நான் கேட்பேன். அதற்கு இறைவன் என் கண்ணியத்தின் மீதும், மகத்துவத்தின் மீதும் பெருமையின் மீதும் ஆணையாக! லாஇலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னவர்களை நான் நரகத்திலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவேன் என்று சொல்வான்.
No comments:
Post a Comment