பாம்புகளைக் கொல்லுதல் வேண்டும்.
1441. நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட ('தாத் துஃப்யத்தைன்' என்னும்) பாம்பையும் குட்டையான - அல்லது - சிதைந்த வால் கொண்ட ('அப்தர்' எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்'' என்று சொல்ல கேட்டேன். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்: நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா (ரலி) என்னைக் கூப்பிட்டு 'அதைக் கொல்லாதீர்கள்'' என்றார்கள். நான், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், '(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்'' என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 3297-3298 இப்னு உமர் (ரலி).
1442. நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, 'வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)'' எனும் (77 வது) அத்தியாயம் அருளப் பட்டது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன்னுடைய புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போதுஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டு விட்டது'' என்று கூறினார்கள்.
புஹாரி : 4930 இப்னு மஸ்ஊது (ரலி).
No comments:
Post a Comment