Tuesday, September 30, 2008

இரட்டை ஹிஜ்ரத் வாசிகள்.

1627. நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டு விட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா ஆவார்; மற்றொருவர் அபூ ருஹ்கி ஆவார். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். -அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ புர்தா ஆமிர் இப்னு அபீ மூஸா (ரஹ்) கூறினார்: ''என்னுடைய (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பத்திற்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்'' என்றோ 'ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம் என்றோ (என் தந்தை அபூ மூஸா (ரலி)) கூறினார்கள். நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை (கொண்டு சென்று) இறக்கி விட்டது. (அபிசினியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களைத் தற்செயலாகச் சந்தித்தோம். (ஏற்னெவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது சிலர், கப்பலில் வந்தவர்களான எங்களை நோக்கி, 'உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்து விட்டோம்'' என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் (ரலி) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபிசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். பிறகு உமர் (ரலி) (தம் மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அஸ்மா அவர்களைக் கண்டபோது, 'இவர் யார்?' என்று (தம் மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். '(இவர்) அஸ்மா பின்த் உமைஸ்'' என்று ஹஃப்ஸா (ரலி), 'இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா?' என்று கேட்டார்கள். அதற்கு, 'ஆம்'' என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் (ரலி), 'உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். எனவே, உங்களை விட நாங்களே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா (ரலி) கோபப்பட்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியான நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலைவிலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில்... அல்லது பூமியில்... இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவு மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! உமர் அவர்கள் இன்னின்னவாறு கூறினார்கள்'' என்று கூறினார்கள். 'அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன்'' என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவரின் சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசினியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4230-4231 அபூ மூஸா (ரலி).

Monday, September 29, 2008

அபூமூஸா (ரலி) அபூஆமிர் (ரலி) சிறப்புகள்.

1623. மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே 'ஜிஃரானா' என்னுமிடத்தில் பிலால் (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்தபோது நான் அவர்களிடம் இருந்தேன். அப்போது கிராமவாசி ஒருவர் (நபி -ஸல் - அவர்களிடம்) வந்து, 'நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்கமாட்டீர்களா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'நற்செய்தியைப் பெற்றுக் கொள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லி விட்டீர்களே!'' என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தவரைப் போன்று என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். 'இவர் (என்னுடைய) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் இருவரும், 'நாங்கள் ஏற்றுக் கொண்டோம்'' என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள் பிறகு (எங்களிடம்), 'இதிலிருந்து சிறிது அருந்திவிட்டு, 'உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு ஸலமா (ரலி) திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, '(இறை நம்பிக்கையாளர்களான) உங்களின் அன்னை(யான என)க்காகவும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிது மீதி வைத்தோம்.

புஹாரி : 4328 அபூமூஸா (ரலி).

1624. நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக் கொண்டு திரும்பியபோது, அபூ அமீர் அவர்களை (தளபதியாக்கி) 'அவ்தாஸ்' பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அப்போது அபூ ஆமிர் அவர்கள் (கவிஞன்) 'துரைத் இப்னு ஸிம்மா'வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்குமிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூ ஆமிர் அவர்களுடன் என்னையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின்போது அபூ ஆமிர் அவர்களின் முழங்காலில் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர்களின் முழங்காலில் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, 'என் தந்தையின் சகோதரரே! உங்களின் மீது அம்பெய்தவன் யார்?' என்று கேட்டேன். 'என் மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ!'' என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக் கொண்டே, '(என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா?' என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக் கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளினால் மோதிக் கொண்டோம். அப்போது அவனை நான் கொன்று விட்டேன். பிறகு நான் அபூ ஆமிர் அவர்களிடம் (சென்று), 'உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்றுவிட்டான்'' என்று கூறினேன். பிறகு, (''என்னுடைய முழங்காலில் பாய்திருக்கும்) இந்த அம்மைப் பிடுங்கியெடு'' என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. 'என் சகோதரரின் மகனே! நபி (ஸல்) அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு'' என்று அபூ ஆமிர் (ரலி) கூறினார். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்துவிட்டு, சிறிது நேரத்திற்குப் பின் அபூ ஆமீர் (ரலி) (வீர) மரணமடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தங்களின் வீட்டில் (பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது. (எனினும்) கட்டிலின் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும், இரண்டு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர்களிடம் எங்கள் செய்தியையும், அபூ ஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றியும் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறி, அதில் உளூச் செய்தார்கள். பிறகு தம் இரண்டு கரங்களையும் உயர்த்தி, 'இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் பார்த்தேன். உடனே நான், 'எனக்காகவும் பாவமன்னிப்புக் கோருங்கள் (நபியே!)'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இறைவா! அப்துல்லாஹ் இப்னு கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்புவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அபூபுர்தா (ரலி) கூறினார்: (நபி - ஸல் - அவர்கள் புரிந்த இரண்டு பிரார்த்தனைகளில்) ஒன்று அபூ அமீர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூமூஸா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.

புஹாரி : 4323 அபூமூஸா (ரலி).

1625. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும்போது அவர்கள் குர்ஆன் ஒதும் ஒசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான்பார்த்திருக்கா விட்டாலும் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார் அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அல்லது எதிரிகளைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடுகின்றார் என்று (துணிவோடு) கூறுவார் என்று கூறினார்கள்.

புஹாரி : 4232 அபூமூஸா (ரலி).

1626. அஷ்அரீ குலத்தினரின் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2486 அபூமூஸா (ரலி).

Sunday, September 28, 2008

நபித்தோழர் ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்களின் சிறப்பு.

1622. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் 'ரவ்ளா' எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), 'கடிதத்தை வெளியே எடு'' என்று கூறினோம். அவள், 'என்னிடம் கடிதம் எதுவுமில்லை'' என்று கூறினாள். நாங்கள், 'ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்'' என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' என்று கூறினார்கள். உமர் (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, 'நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்'' என்றார்கள்.

புஹாரி : 3007 அலீ(ரலி).

Saturday, September 27, 2008

அபூஹுரைரா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1621. 'அபூஹுரைரா (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறாரே' என்று நீங்கள் (குறையாகக்) கூறுகின்றீர்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா? தவறா? என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. நான் ஓர் ஏழை மனிதன். நான், என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். முஹாஜிர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனமாக இருந்தார்கள். அன்சாரிகள் தம் (வேளாண்மை) செல்வங்களில் கவனம் செலுத்தி வந்தார்கள். நான் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், 'நான் என் சொல்லைச் சொல்லி முடிக்கும்வரை தம் மேல்துண்டை விரித்து வைத்திருந்து பிறகு அதைச் சுருட்டி (நெஞ்சோடு சேர்த்து அணைத்து)க் கொள்கிறவர் என்னிடமிருந்து கேட்ட எதையும் ஒருபோதும் மறக்கமாட்டார்'' என்றார்கள். உடனே நான் என் மீதிருந்த மேலாடையை (எடுத்து) விரித்தேன். நபி (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! நான் நபியவர்களிடமிருந்து கேட்ட எதையும் (அன்றிலிருந்து) மறந்ததில்லை.

புஹாரி : 7354 அல்அராஜ் (ரலி).

Friday, September 26, 2008

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1616. மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) பள்ளிவாசலில் கவி பாடுவதை உமர் (ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான் (ரலி), 'நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இருக்கும்போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்'' என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா (ரலி) பக்கம் திரும்பி, 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!'' என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி), 'ஆம் (செவியுற்றிருக்கிறேன்)'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3212 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி).

1617. நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், 'எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3213 அல்பராஉ (ரலி).

1618. (ஒரு முறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக் கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்'' என்று கூறினார்கள்.

புஹாரி :3531 உர்வா (ரலி).

1619. (ஒருமுறை) நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவை) பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (தம் பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, '(அவர்கள்) கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம் சாட்டப்பட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள்'' என்று பாடினார்கள். அப்போது ஹஸ்ஸான் அவர்களைப் பார்த்து ஆயிஷா (ரலி), 'ஆனாலும், நீங்கள் அப்படியல்ல (என்னைப் பற்றி அவதூறு பேசுபவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்'') என்று கூறினார்கள்.(தொடர்ந்து) அறிவிப்பாளர் மஸ்ரூக் (ரஹ்) கூறினார்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'ஹஸ்ஸான் அவர்களைத் தங்களிடம் வர ஏன் அனுமதிக்கிறீர்கள்? அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில்), 'அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்கு கடினமான வேதனையுண்டு'' என்று (திருக்குர்ஆன் 24:11ல்) கூறுகிறானே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'குருடாவதை விடக் கொடிய வேதனை ஏது?' என்று கூறிவிட்டு, 'அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பில் பதிலளிப்பவராக அல்லது இறைத்தூதர் சார்பில் (எதிரிகளுக்கு பதிலடியாக) வசைக் கவிபாடுபவராக இருந்தார் என்று கூறினார்கள்.

புஹாரி : 4146 மஸ்ரூக் (ரலி).

1620. (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பவர்கள் வசைபாடிய போது) இணைவைப்பவர்களுக்கெதிராக வசைக் கவிதை பாடுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களுடன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது; எப்படி?' என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி), 'மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி) விடுவேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3531 ஆயிஷா (ரலி).

Thursday, September 25, 2008

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)அவர்களின் சிறப்புகள்.

1614. நபி(ஸல்) அவர்கள் பூமியின் மீது நடந்து செல்லும் எவரையும், 'இவர் சொர்க்கவாசி'' என்று சொல்லி நான் கேட்டதில்லை. அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைத் தவிர, அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்களைக் குறித்தே, 'மேலும், இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து சாட்சி சொல்பவர் ஒருவர் இது போன்ற வேதத்திற்கு சாட்சி கூறினார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்'' என்னும் (திருக்குர்ஆன் 46:10) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி : 3812 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

1615. நான் மதீனாவின் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் (நபித்தோழர்கள் சிலருடன்) அமர்ந்திருந்தேன். அப்போது ஒருவர் தம் முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான அடையாளத்துடன் உள்ளே வந்தார். மக்கள், 'இவர் சொர்க்கவாசிகளில் ஒருவர்'' என்று கூறினார்கள். அவர் இரண்டு ரக்அத்துகள் தொழுதார். அவற்றை (அதிக நேரம் எடுக்காமல்) சுருக்கமாகத் தொழுதார். பிறகு அவர் வெளியேற, நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று, 'நீங்கள் பள்ளி வாசலுக்குள் நுழைந்தபோது மக்கள், 'இவர் சொர்க்கவாசி' என்று கூறினர்'' என்றேன். அதற்கு அவர் கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தமக்குத் தெரியாததைக் கூறுவது எவருக்கும் முறையல்ல. ஏன் அவ்வாறு (மக்கள் பேசிக் கொள்கிறார்கள்) என்று உங்களுக்கு இதோ தெரிவிக்கிறேன். அதாவது, நான் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கனவொன்று கண்டேன். அதை அவர்களிடம் விவரித்தேன். நான் ஒரு பூங்காவில் இருப்பது போன்று கண்டேன் - அறிவிப்பாளர் கூறுகிறார்: அம்மனிதர் அதன் விசாலத்தையும் பசுமையையும் வர்ணித்தார் - அதன் நடுவே இரும்பாலான தூண் இருந்தது. அதன் அடிப்பகுதி பூமியில் இருந்தது. மேற்பகுதி வானத்தில் இருந்தது. அதன் மேற்பகுதியில் பிடி ஒன்று இருந்தது. என்னிடம், 'இதில் ஏறு'' என்று சொல்லப்பட்டது. நான், 'என்னால் இயலாதே'' என்று சொன்னேன். அப்போது என்னிடம் பணியாள் ஒருவர் வந்து என் ஆடையைப் பின்னாலிருந்து உயர்த்தி விட்டார். உடனே நான் (அதில்) ஏறினேன். இறுதியில் அதன் மேற்பகுதிக்கு நான் சென்றுவிட்டபோது அந்தப் பிடியை நான் பற்றினேன். உடனே என்னிடம், 'நன்கு பற்றிப் பிடித்துக் கொள்'' என்று சொல்லப்பட்டது. (நான் அதைப் பற்றினேன்.) அந்தப் பிடி என் கையில் இருக்க (திடுக்கிட்டு) நான் விழித்தெழுந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் அதை நான் விவரித்தபோது, 'அந்தப் பூங்கா இஸ்லாமாகும். அந்தத் தூண் இஸ்லாம் எனும் தூணாகும். அந்தப் பிடி பலமான (இறை நம்பிக்கை என்னும்) பிடியாகும். எனவே, நீங்கள் இறங்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள்'' என்று நபியவர்கள் பதிலளித்தார்கள் (இப்படிச் சொன்ன) அந்த மனிதர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) தாம்.

புஹாரி : 3813 கைஸ் பின் உபாத் (ரலி).

Wednesday, September 24, 2008

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் சிறப்பு.

1612. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், 'அனஸ் தங்களின் சேவகர், (அவருக்காகப் பிரார்த்தியுங்கள்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிடுவாயாக! அவருக்கு நீ வழங்கியவற்றில் சுபிட்சத்தை ஏற்படுத்துவாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.

புஹாரி :6380 உம்மு சுலைம் (ரலி).

1613. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்புக்குப் பிறகும் கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.

புஹாரி : 6289 அனஸ் (ரலி).

Tuesday, September 23, 2008

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிள் சிறப்புகள்

1611. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு வானவர் என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூற 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

புஹாரி : 1121 இப்னு உமர்(ரலி).

Monday, September 22, 2008

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1610. 'நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும் நான் அவர்களுக்காகத் தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் 'இந்தத் தண்ணீரை யார் வைத்தது?' என்று கேட்டதற்கு (என்னைப் பற்றி) கூறப்பட்டது. உடனே 'இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக' என்று பிரார்த்தித்தார்கள்''.

புஹாரி: 143 இப்னுஅப்பாஸ்(ரலி).

Sunday, September 21, 2008

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1608. நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தம் வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை. 'என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை'' என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்ட பெற்றவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.

புஹாரி : 3035-3036 ஜரீர்(ரலி).

1609. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்து விட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.

புஹாரி : 3020 ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி).

Saturday, September 20, 2008

அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்களின் சிறப்பு.

1607. அபூதர் (கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரிடம், 'இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, 'வானத்திலிருந்து (இறைச்) செய்தி தம்மிடம் வருகிற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகிற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) எனக்கு அறிவி. அவரின் சொல்லைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பிறகு என்னிடம் வா!'' என்று கூறினார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு, அபூதர்ரிடம் திரும்பிச் சென்று, 'அவர் நற்குணங்களைக் கைக் கொள்ளும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை பார்த்தேன். ஒரு வாக்கையும், (செவியுற்றேன்) அது கவிதையாக இல்லை'' என்று கூறினார். அபூதர், 'நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை'' என்று கூறிவிட்டு, பயண உணவு எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தன்னுடைய தோல்பை ஒன்றைச் சுமந்து கொண்டு (அபூதர்) புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றனர். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷிகள் தமக்கு தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டது. அப்போது அலீ (ரலி) அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ - ரலி - அவர்கள் அபூதர்ரிடம், 'வீட்டுக்கு வாருங்கள்'' என்று சொல்ல) அபூதர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார். விடியும்வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல்பையையும் தம் பயண உணவையும் சுமந்து கொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும் வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவரைக் கடந்து சென்றார்கள். 'தம் தங்குமிடத்தை அறிந்து கொள்ள மனிதருக்கு வேளை இன்னும் வரவில்லையா?' என்று கேட்டுவிட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியம் கேட்டுக் கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்தபோது அலீ (ரலி) அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்கவைத்துக் கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), 'நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?' என்று கேட்டார்கள். அவர், '(நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதி மொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன்'' என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழியளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி), 'அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் இறைத்தூதர் தாம். காலையானதும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகிற எதையாவது கண்டால் நான் தண்ணீர் ஊற்றுவதைப் போன்று நின்று கொள்வேன். நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும் வரை என்னைப் பின்தொடருங்கள்'' என்று கூறினார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலி அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி), நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீங்கள் உங்கள் (கிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள். அபூதர், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இச்செய்தியை (இறைமறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன்'' என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளிவாசலுக்கு வந்து, உரத்த குரலில், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) என்றும் உறுதி சொல்கிறேன்'' என்று கூறினார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரை அடித்தார்கள். அப்பாஸ் (ரலி) வந்து, அவரின் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். 'உங்களுக்குக் கேடுண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும்வழி (கிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட்பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில் தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா?' என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதே போன்று செய்ய குறைஷிகளும் அடித்தபடி அவரின் மீது பாய்ந்தார்கள். உடனே (முன் போன்றே) அப்பாஸ் (ரலி) அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்தார்கள்.

புஹாரி : 3861இப்னு அப்பாஸ்(ரலி).

Friday, September 19, 2008

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களின் சிறப்பு

1606. உஹதுப் போர் தினத்தன்று உறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் என் தந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவ்வுடல் மீது ஒரு துணி போர்த்தப்பட்டிருந்தது. அப்போது நான் சென்று அந்தத் துணியை நீக்கி (என் தந்தையை)ப் பார்க்க நாடினேன். எனினும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்தனர். நான் மீண்டும் சென்று துணியை நீக்க முனைந்தேன். மீண்டும் என் கூட்டத்தினர் என்னைத் தடுத்து விட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாவை தூக்கும்படி) கட்டளையிட்டார்கள். (ஜனாஸா) தூக்கப்பட்டபோது ஒரு பெண் சப்தமாக அழுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், 'யார் அந்தப் பெண்?' என வினவினார்கள். அம்ர்டைய மகள் என்றோ அல்லது அம்ர்டைய சகோதரி என்றோ (கூடியிருந்தோர்) கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'நீ ஏன் அழுகிறாய்? நீ அழுதாலும் அழாவிட்டாலும் ஜனாஸா உயர்த்தப்படும்வரை வானவர்கள் தங்களின் இறக்கைகளை விரித்து நிழல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்'' என்றார்கள்.

புஹாரி : 1293 ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி).

Thursday, September 18, 2008

ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் சிறப்பு (2)

1604. (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் அதைத் தொட்டுப் பார்த்து அதன் மென்மையைக் கண்டு வியப்படையலானார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களின் கைக்குட்டைகள் இதை விடச் சிறந்தவை அல்லது இதை விட மென்மையானவை ஆகும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3802 அல்பராஉ (ரலி).

1605. நபி(ஸல்) அவர்களுக்கு மெல்லிய பட்டாலான அங்கி ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. அவர்கள் பட்டுத் துணியை (அணிவதைத்) தடை செய்து வந்தார்கள். மக்களோ அந்த அங்கி(யின் தரம் மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! சொர்க்கத்தில் ஸஅத் இப்னு முஆத்துக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிடத் தரமானவையாயிருக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2615 அனஸ் (ரலி).

Wednesday, September 17, 2008

ஸஆது பின் முஆது (ரலி) அவர்களின் சிறப்பு.

1603. ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3803 ஜாபிர் (ரலி).

Tuesday, September 16, 2008

உபை இப்னு கஃப் மற்றும் அன்ஸார்கள் சிறப்பு.

1601. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் தாம் அவர்கள்'' என்று அனஸ் (ரலி) கூறினார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3810 அனஸ் (ரலி).

1602. நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் உங்களுக்கு, 'வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களின் நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை..'' என்னும் (திருக்குர்ஆனின் 98-ம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்'' என்று கூறினார்கள். அதற்கு உபை இப்னு கஅப் (ரலி), 'என் பெயரைக் குறிப்பிட்டா. (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை இப்னு கஅப் அவர்கள் (ஆனந்தம் மேலிட்டு) அழுதார்கள்.

புஹாரி : 3809 அனஸ் (ரலி).

Monday, September 15, 2008

அப்துல்லாஹ் இப்னு மஸவூத் (ரலி) அவர்களின் சிறப்பு.

1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம்.

புஹாரி : 3763 அபூமூஸா (ரலி).

1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்து எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கேட்டறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக, தங்களிலேயே அல்லாஹ்வின் வேதத்தை (குர்ஆனை) நன்கறிந்தவன் நான் என பிற நபித்தோழர்கள் நன்கறிவார்கள். (அதற்காக எல்லாவகையிலும்) நான் அவர்களில் சிறந்தவன் அல்லன்'' என்று குறிப்பிட்டார்கள். (இது குறித்து) மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைச் செவிமடுத்தவாறே அந்த அவையில் நான் அமர்ந்திருந்தேன். இப்னு மஸ்வூத் (ரலி) சொன்னதை மறுத்து வேறுவிதமாகப் பேசியதை யாரிடமிருந்தும் நான் கேட்கவில்லை.

புஹாரி : 5000 ஷகீக் பின் ஸலாமா (ரலி).

1599. எவனைத் தவிர வேறு இறைவன் யாருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் வேதத்தில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், அது எங்கே அருளப்பட்டது என்பதை நான் நன்கு அறிவேன். அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனம் அருளப்பட்டால் அது யார் விஷயத்தில் அருளப்பட்டது என்பதையும் நான் நன்கறிவேன். என்னை விட அல்லாஹ்வின் வேதத்தை நன்கு அறிந்தவர்கள், ஒட்டகம் சென்றடையும் தூரத்தில் இருந்தால் நான் (அவரிடமிருந்து அதைக் கற்றுக் கொள்வதற்காக) அவரை நோக்கி நிச்சயம் பயணம் புறப்பட்டு விடுவேன் என இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5002 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்).

1600. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), 'அவர் எத்தகைய மனிதரென்றால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப், முஆத் இப்னு ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3758 மஸ்ரூக் (ரலி).

Sunday, September 14, 2008

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு.

1596. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, 'நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்'' என்றார்கள்.

புஹாரி : 2844 அனஸ் (ரலி).

Saturday, September 13, 2008

ஜைனப் (ரலி) அவர்களின் சிறப்பு.

1595. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'உங்களின் மரணத்திற்குப் பின் எங்களில் யார் முதலில் வந்து உங்களைச் சேர்வார்?' எனக் கேட்டதற்கு, 'உங்களுள் கை நீளமானவரே!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர்கள் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்து பார்த்தபோது ஸவ்தா (ரலி)வின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஜைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை அறிந்தோம். (ஜைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்தால் தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும் அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக் கூடியவராகவும் இருந்தார்.

புஹாரி :1420 ஆயிஷா (ரலி).

Friday, September 12, 2008

உம்மு ஸலமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1594. நபி (ஸல்) அவர்களிடம் உம்மு ஸலமா (ரலி) அமர்ந்திருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு மனிதரின் தோற்றத்தில்) வந்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரீல் பேசத் தொடங்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், 'இவர் யார்?' என்று கேட்க, அவர்கள், 'இது திஹ்யா (என்ற நபித்தோழர்)'' என்று பதிலளித்தார்கள். (அப்போது அது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம்'' என்று உம்மு ஸலமா - ரலி - அவர்களுக்கு தெரியாது.) (பின்னர்) உம்மு ஸலமா (ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான், நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னதாகத் தம் உரையில் குறிப்பிட்டதைச் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா கல்பீ அவர்கள் தாம் என்றே நான் நினைத்திருந்தேன் (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்று எனக்குத் தெரிய வந்தது)'' என்று கூறினார்கள்.

நான் அறிவிப்பாளர் அபூ உஸ்மான் (ரஹ்) அவர்களிடம், 'யாரிடமிருந்து இதை நீங்கள் செவியுற்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3633 அபூஉஸ்மான் (ரலி).

Thursday, September 11, 2008

ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1591. நாங்கள் ஹுசைன் இப்னு அலீ (ரலி) - அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! - கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், 'என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)'' என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு 'அப்படி எதுவுமில்லை'' என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி), 'அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்று சேராது'' என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) ஃபாத்திமா (ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். - அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், 'ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்'' என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை - (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) - அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். 'அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது'' என்று கூறினார்கள்.

புஹாரி :3110 அலி பின் ஹூஸைன் (ரலி).

1592. அலீ (ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, '(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்'' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.

புஹாரி : 3729 அல் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).

1593. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், 'என் மகளே! வருக!'' என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரை தம் 'வலப்பக்கத்தில்' அல்லது 'இடப் பக்கத்தில்' அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவரின் துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ, இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், 'எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!'' என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், 'உங்களின் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்'' என்றேன். ஃபாத்திமா, 'சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)'' என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார். முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின் வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன். எனவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்று விடுவேன். எனவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். என்னுடைய பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, 'ஃபாத்திமா! 'இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு' அல்லது 'இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு' தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?' என்று இரகசியமாகக் கேட்டார்கள். (எனவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)

புஹாரி : 6285 ஆயிஷா (ரலி).

Wednesday, September 10, 2008

ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1579. ''நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, 'இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்' என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், 'இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்' என்று சொல்லிக் கொண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

புஹாரி : 3895 ஆயிஷா (ரலி).

1580. என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), 'முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், 'இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்'' என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதன்று)'' என்று கூறினேன்.

புஹாரி : 5228 ஆயிஷா (ரலி).

1581. நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

புஹாரி : 6130 ஆயிஷா (ரலி).

1582. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்க மக்கள் நபிகளார் என்னிடம் தங்கும் நாள் எது என எதிர்பார்த்து வழங்கினர்.

புஹாரி :2574 ஆயிஷா (ரலி).

1583. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?' என்று என்னுடைய (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.

புஹாரி : 4450 ஆயிஷா (ரலி).

1584. நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, '(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாதிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)''(4:69) என்று சொல்லத் தொடங்கினார்கள்.

புஹாரி : 4436 ஆயிஷா (ரலி).

1585. ''உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை'' என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்ட (கம்மிய, கரகரப்பான குரலில்), 'அல்லாஹ் அருள் புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்'' எனும் (திருக்குர்ஆன் 04:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். எனவே, 'இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது' என்று நான் எண்ணிக்கொண்டேன்.

புஹாரி : 4435 ஆயிஷா (ரலி).

1586. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, 'சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரையில்' அல்லது '(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில்' எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை'' என்று சொல்லி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களின் தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களின் பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், 'இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், 'இனி (நபி (ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்'' என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) அறிந்து கொண்டேன்.

புஹாரி : 4437 ஆயிஷா (ரலி).

1587. நபி (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (என்னிடம்), 'இந்த இரவு நீங்கள் என்னுடைய ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களின் ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்'' என்று கூறினார்கள். நான், 'சரி'' என்று (சம்மதம்) கூறினேன். எனவே, (நாங்களிருவரும்) ஒருவர் மற்றவரின் ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) என்னுடைய ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் 'சலாம்' (முகமன்) கூறினார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை (நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் என்னுடைய இரண்டு கால்களையும் 'இத்கிர்' புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, 'இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என் மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்'' என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

புஹாரி : 5211 ஆயிஷா (ரலி).

1588. (உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் 'ஸரீத்' என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3770 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1589. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், 'ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்'' என்று கூறினார்கள். நான், 'வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு - அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்'' என்று கூறினேன்.

புஹாரி :3217 அபூ ஸலாமா (ரலி).

1590. (முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக் கொண்டனர். முதலாவது பெண் கூறினார்: என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அதை மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை. இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்று கூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரின் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங் குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும். மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர் அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரின் காதுக்கு எட்டி)னால். நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.) நான்காவது பெண் கூறினார். என் கணவர் (மக்கா உள்ளிட்ட) 'திஹாமா' பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை. கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.

ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தை போல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார். ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமலும் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக் கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை.

ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் 'விவரமில்லாதவர்' அல்லது 'ஆண்மையில்லாதவர்', சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் என்னை ஏசுவார். கேலி செய்தால்) என் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) என் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார். எட்டாவது பெண் கூறினார்:என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்து போல் மணக்கக் கூடியவர்.

ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப் போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிரைத்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டவர். பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர் எத்துணை பெரும் செவ்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாள்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முனனிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதிசெய்து கொள்ளும். பதினொன்றாவது பெண் கூறினார்: என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது) '»க்' எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.(என் கணவரின் தாயார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் வீட்டுக்கு களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும் அவரின் வீடு விசாலமானதாகவே இருக்கும்.(என் கணவரின் புதல்வர்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று (சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை(இறைச்சி) அவரின் பசியைத் தணித்து விடும். (அந்த அளவிற்குக் குறைவாக உண்ணுபவர்.)(என் கணவரின் புதல்வி) பின்த் அபீ ஸர்உ எத்தயைவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரின் ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.(என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.)

(ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகள் அவளுடைய இடைக்குக் கீழே இரண்டு மாதுளங்கனிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். எனவே, (அவளுடைய கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்குக் செய்துவிட்டு, அவளை மணந்தார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) 'கத்' எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்தார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டு வந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, 'உம்மு ஸாஉவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன்(தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு'' என்றார்.(ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக் கூட அவை நிரப்பமுடியாது (என்று கூறி முடித்தார்.) ஆயிஷா (ரலி) கூறினார்:

(என்னருமைக் கணவரான) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), '(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்' என்றார்கள்.

புஹாரி :5189 ஆயிஷா (ரலி).

Tuesday, September 09, 2008

கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1573. இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 3432 அலீ (ரலி).

1574. ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் 'ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3411 அபூ மூஸா (ரலி).

1575. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3820 அபூஹூரைரா (ரலி).

1576. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், 'நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் கூறினார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி கூறினார்கள்)'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3819 இஸ்மாயீல் (ரலி).

1577. கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள்.

புஹாரி : 3818 ஆயிஷா (ரலி).

1578. ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)'' என்று கேட்டேன்.

புஹாரி: 3821 ஆயிஷா (ரலி).

Monday, September 08, 2008

அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) அவர்களின் சிறப்பு.

1572. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'ஆம், நபி (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றினார்கள். உங்களை விட்டு விட்டார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3082 இப்னு அபீ முலைக்கா (ரலி).

Sunday, September 07, 2008

ஜைது பின் ஹாரிதா (ரலி) உஸாமா பின் ஜைது (ரலி) சிறப்புகள்.

1570. ''வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களை 'ஸைத் இப்னு முஹம்மத்' (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.

புஹாரி : 4782 இப்னு உமர் (ரலி).

1571. நபி (ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், '(இப்போது) இவரின் தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்... (இது ஒன்றும் புதிதல்ல). இதற்கு முன் (மூத்தா போரின் போது) இவரின் தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராக இருந்தார். (அவரின் மகனான) இவர் (உஸாமா) தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவராவார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3730 இப்னு உமர் (ரலி).

Saturday, September 06, 2008

ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சிறப்புகள்.

1568. நபி (ஸல்) அவர்கள் ஒரு பகல் நேரத்தில் புறப்பட்டார்கள். அவர்கள் என்னுடன் பேசவில்லை. நானும் அவர்களுடன் பேசவில்லை. 'பனூ கைனுகா' கடைவீதிக்கு அவர்கள் வந்ததும் ஃபாத்திமா (ரலி) அவர்களின் விட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். 'இங்கே அந்தப் பொடிப்பையன் இருக்கிறானா?' என்று கேட்டார்கள். ஃபாத்திமா (ரலி) தம் மகனைச் சற்று நேரம் தாமதப்படுத்தினார். 'அவர் தம் மகனுக்கு நறுமண மாலையை அணிவித்துக் கொண்டிருக்கிறார்' என்றோ அல்லது 'மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்' என்றோ நான் நினைத்தேன். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்களின் மகன் (ஹஸன் (ரலி)) ஓடிவந்தார். உடனே, நபி (ஸல்) அவர்கள் அவரைக் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். 'இறைவா! இவனை நீ நேசி! இவனை நேசிப்பவர்களையும் நீ நேசி!'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2122 அபூஹூரைரா (ரலி).

1569. அலீ (ரலி) அவர்களின் மகன் ஹஸன் (ரலி), நபி (ஸல்) அவர்களின் தோள் மீது அமர்ந்திருக்க, நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரை நேசிப்பாயாக!'' என்று பிரார்த்திக்கக் கண்டேன்.

புஹாரி : 3749 அல்பராஉ (ரலி).

Friday, September 05, 2008

அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1566. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3744 அனஸ் (ரலி).

1567. நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான் வாசிகளிடம், 'நம்பத்தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுக்கு நிச்சயம் நான் அனுப்புவேன்'' என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் (பலர் அந்த 'அமீன்' என்னும் சிறப்பு தமக்கு கிட்டாதா என) பேராவல் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

புஹாரி : 3745 ஹூதைஃபா (ரலி).

Thursday, September 04, 2008

தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) சிறப்புகள்.

1563. நபி (ஸல்) அவர்கள் (இணைவைப்பவர்களுடன்) போரிட்ட அந்த (உஹுதுப் போரின்) நாள்களில் அவர்களுடன் எங்கள் இருவரையும் தவிர வேறெவரும் இருக்கவில்லை. இதை, அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அபதுர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) தல்ஹா (ரலி) மற்றும் ஸஅத் (ரலி) ஆகிய இருவரிடமே நேரடியாகக் கேட்டு அறிவித்தார்கள்.

புஹாரி : 3723 அபூஉஸ்மான் (ரலி).

1564. அனைத்துக் குலங்களும் நம்மை எதிர்த்துப் போரிடும் (இந்த அகழ்ப் போர்) நாளில் அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஸுபைர் (ரலி), 'நான் (உளவறிந்து கொண்டு வருகிறேன்)'' என்று கூறினார்கள். பிறகு (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'அந்தக் குலத்தாரின் செய்தியை என்னிடம் (உளவறிந்து) கொண்டு வருபவர் யார்?' என்று கேட்க, ஸுபைர் (ரலி), 'நான்'' என்று கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், 'ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் ஸுபைராவார்'' என்று கூறினார்கள்.

புஹாரி: 2846 ஜாபிர் (ரலி)

1565. அகழ்ப் போரின்போது நானும் உமர் இப்னு அபீ ஸலமா (ரலி) அவர்களும் (நபி - ஸல் அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப்பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) தன் குதிரையின் மீது (சவாரி செய்த படி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு... அல்லது மூன்று முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்தபோது, 'என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை பார்த்தேன்'' என்று சொன்னேன். அவர்கள், 'என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!'' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (பார்த்தேன்)'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களின் செய்தியைக் கொண்டு வருபவர் யார்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களின் செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையார் இருவரையும் சேர்த்து, 'என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனக் கூறினார்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3720 அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி).

Wednesday, September 03, 2008

ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1560. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின், முதலில் இரவில் கண் விழித்திருந்தார்கள். மதீனாவுக்கு வந்து சிறிது காலம் கழித்து, 'என் தோழர்களிடையே எனக்கு இரவில் காவல் காப்பதற்கு ஏற்ற மனிதர் ஒருவர் இருந்தால் நன்றாயிருக்குமே'' என்று கூறினார்கள். அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், 'யாரது?' என்று கேட்டார்கள். வந்தவர், 'நானே ஸஅத் இப்னு அபீ வக்காஸ். தங்களுக்குக் காவல் இருப்பதற்காக வந்துள்ளேன்'' என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் (நிம்மதியாக) உறங்கினார்கள்.

புஹாரி : 2885 ஆயிஷா (ரலி).

1561. ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்குப் பிறகு வேறெவருக்கும் தம் தாய் தந்தையை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை. ஸஅத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்'' என்று கூறியதை கேட்டேன்.

புஹாரி : 2905 அலீ (ரலி).

1562. ''(என்னுடைய வீரச் செயலைக் கண்டு என்னைப் பாராட்டும் விதத்தில்) நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது தம் தாய் தந்தை இருவரையும் சேர்த்து எனக்கு அர்ப்பணிப்பதாக (என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும்' எனச்) கூறினார்கள்'' என்று ஸஅத் (ரலி) சொல்ல கேட்டேன்.

புஹாரி : 3725 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

Tuesday, September 02, 2008

அலீ பின் அபுதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1556. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும்வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி), 'குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4416 ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி).

1557. நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, 'அல்லாஹ் எவருடைய கரத்தில் வெற்றியைத் தரவிருக்கிறானே அத்தகைய ஒரு மனிதரிடம் (நாளைக்கு) நான் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைத் தருவேன்'' என்று கூறக் கேட்டேன். உடனே, நபித் தோழர்கள், அதை யாரிடம் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கப் போகிறார்கள் என்று எதிர் பார்த்து நின்றனர். அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று விரும்பியவர்களாக மறுநாள் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அலீ எங்கே?' என்று கேட்டார்கள். 'அவருக்குக் கண்வலி'' என்று கூறப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கண்களில் (தம்) எச்சிலை உமிழ்ந்தார்கள். உடனே அவர்களின் கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. உடனே, அலீ (ரலி), 'நம்மைப்போல் (முஸ்லிம்களாய்) ஆகும் வரை நாம் அவர்களுடன் போர் புரிவோம்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நிதானமாகச் சென்று அவர்களின் களத்தில் இறங்குவீராக! பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்களின் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது (அரபுகளின் உயரிய செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை (தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்றார்கள்.

புஹாரி : 2942 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

1558. அலீ (ரலி) கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டிருந்தது. 'நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே'' என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நாளின் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நாளின் மாலை நேரம் வந்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ, 'அத்தகைய ஒருவர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்'' என்றோ அல்லது, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன்'' என்றோ சொல்லிவிட்டு, 'அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்'' என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், 'இதோ, அலீ அவர்கள்!'' என்று கூறினர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான்.

புஹாரி : 2975 ஸலமா பின் அக்வஹ் (ரலி).

1559. நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமாவின் இல்லத்திற்கு வந்தபோது அலி (ரலி)யை காணவில்லை. உன் பெரிய தந்தையின் மகன் எங்கே? என்று ஃபாத்திமா (ரலி)விடம் கேட்டார்கள். எனக்கும் அவருக்கும் சிறிய மனஸ்தாபம் இருந்தது: கோபித்துக் கொண்டு சென்று விட்டார். என்னிடம் தங்கவில்லை என்று ஃபாத்திமா (ரலி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர் எங்கே என்று பார்த்து வாரும்! என்று ஒருவரை அனுப்பினார்கள். அவர் வந்து, அலி பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார். நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்த போது அலி (ரலி) தமது மேலாடை விலகியவராகவும் மேனியில் மண் படிந்தவராகவும் ஒரு பக்கமாகப் படுத்திருந்தார்கள்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது மேனியில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டு மண்ணின் தந்தையே எழும்! மண்ணின் தந்தையே எழும்! எனக் கூறினார்கள்.

புஹாரி : 441 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).

Monday, September 01, 2008

உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1554. நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒருவர் வந்து (வாயில் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்காகத் திறவுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் அவருக்காக (வாயிற் கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், 'அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று கூறினார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்து விட்டேன். அம்மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். (நானும் சென்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, '(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (ஆற்றலைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3693 அபூமூஸா (ரலி).

1555. நான் என் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), 'நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்'' என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், 'நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்'' என்று கூறினர். நான் (நபி (ஸல்) - அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விட்டப்படி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச்சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), 'இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன்'' என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர்கள், '(நானே) அபூபக்ர் (வந்துள்ளேன்)'' என்று பதிலளித்தார்கள். உடனே நான், 'சற்றுப் பொறுங்கள்'' என்று சொல்லிவிட்டு (நபி - ஸல் - அவர்களிடம்) சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் அபூபக்ர் அவர்களை நோக்கிச் சென்ற அவர்களிடம், 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள்'' என்று சொன்னேன். உடனே, அபூபக்ர் அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப்பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), 'அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான்'' என்று சொல்லிக் கொண்டேன்.'' இன்னார்' என்று அபூ மூஸா அல் அஷ் அரீ (ரலி) கூறியது. தம் சகோதரரைக் கருத்தில் கொண்டே'' என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) கூறினார்: அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். வந்தவர், '(நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்) என்று சொன்னார். நான், 'கொஞ்சம் பொறுங்கள்'' என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, 'இதோ, உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் சென்று, 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்'' என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன். 'அல்லாஹ் இன்னாருக்கு (என்சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான் என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான்,'யார் அது?' என்று கேட்டேன். அவர், '(நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்)'' என்று பதிலளித்தார். உடனே, 'கொஞ்சம் பொறுங்கள்'' என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள்.அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் அவர்களிடம் சென்று அவரிடம், 'உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்'' என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி (ஸல்)அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள். அறிவிப்பாளர் ஷரீக் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்:

ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்), 'நான் (நபி - ஸல் அவர்களும், அபூபக்ர் (ரலி ) அவர்களும், உமர் (ரலி) அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் (தற்போது) அவர்களின் கப்ருகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3674பூமூஸா அல் அஷ்அரி (ரலி).