Showing posts with label நோன்பு. Show all posts
Showing posts with label நோன்பு. Show all posts

Friday, January 16, 2009

கணவனை இழந்த பெண்ணிற்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுபவரின் சிறப்பு!

1878. (கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப்பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5353 அபூஹுரைரா (ரலி).

Sunday, July 08, 2007

ஷஃபான் மாத இறுதியில் நோன்பு நோற்க தடை.

722. இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க வேறொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள் 'இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?' என்று கேட்டார்கள். அம்மனிதர் 'இல்லை! இறைத்தூதர் அவர்களே!'' என்றார். நபி (ஸல்) அவர்கள் 'நீர் நோன்பை விட்டுவிட்டால் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பீராக!'' என்று கூறினார்கள்.


''நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே. 'இம்மாதம்' என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ இப்னு மைமூன்) கூறினார்கள் என நான் நினைக்கிறேன்!'' என்று அபுந் நுஃமான் கூறுகிறார்.'நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு 'இம்மாதம்' என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்!'' என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான 'ஸல்த்' என்பவர் கூறவில்லை. 'ஷஅபானின் கடைசி' என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

புஹாரி :1983 இம்ரான் பின் ஹூஸைன் (ரலி).

Saturday, July 07, 2007

தொடர்ந்து நோன்பு நோற்க தடை.

714. 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உயிருடனிருக்கும் வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன்' என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்தது. (இது பற்றி) அவர்கள் என்னிடம் கேட்டபோது) 'என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!'' நான் அவ்வாறு கூறியது உண்மையே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், 'இது உம்மால் முடியாது! (சில நாள்கள்) நோன்பை விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நோன்பு வையும்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்கூலி கொடுக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்!'' என்றார்கள். நான் 'என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்யமுடியும்!'' என்று கூறினேன். 'அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டு விடுவீராக! இதுதான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்!'' என்றார்கள். நான் 'என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்?' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் 'இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை!'' என்றார்கள்.

புஹாரி : 1976 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

715. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் 'ஆம்! இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் 'இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்கள்) நோன்பு வையும்; (சில நாள்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன் உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன் உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! 'இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். தாவூத் நபி (அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். 'வருடத்தில் பாதி நாள்கள்!'' என்றார்கள்.''அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) வயோதிகம் அடைந்த பின் 'நபி (ஸல்) அவர்களின் சலுகைகை நான் ஏற்காமல் போய் விட்டேனே' என்று (வருத்தத்துடன்) கூறுவார்!'' என அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

புஹாரி: 1975 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

716. என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை குர்ஆனை) ஓதி நிறைவுசெய்!'' என்று கூறினார்கள். அப்போது நான், '(அதை விடவும் குறைந்த நாள்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது'' என்று கூறினேன். 'அப்படியானால், ஏழு நாள்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்; அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கி விடாதே'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5054 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

717. நபி (ஸல்) அவர்கள் என்னிடம், 'அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதைவிட்டதைப் போன்று நீர் ஆகிவிடாதீர்' என்று கூறினார்கள்.

புஹாரி :1152 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

718. நான் தொடர்ந்து நோன்பு வைப்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தது. அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா? நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி (ஸல்) அவர்கள் 'நீர் விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதை விட்டுவிடவும் செய்வீராக! (இரவில் எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உம்முடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன. உமக்கும் உம்முடைய குடும்பத்தினருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன!'' என்று கூறினார்கள். நான், 'இதற்கு எனக்கு சக்தி உள்ளது!'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் 'நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக!'' என்றார்கள். 'அது எவ்வாறு?' என்று கேட்டேன். 'தாவூத் நபி (அலை) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்; ஒரு நாள் விட்டுவிடுவார்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்க மாட்டார்!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்!'' என்றேன்.
''காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். என்றாலும் 'காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்!'' என்று நபி (ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள் (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது!)'' என்று அதா (ரஹ்) கூறினார்.

புஹாரி :1977 அப்துல்லாஹ் பின் அம் ர்(ரலி).

719. நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று. இரவெல்லாம் வணங்குகிறீரோ?' என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான் 'ஆம்!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள், 'அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே போய்விடும். (மேலும்) அதனால் உள்ளம் களைந்து (பலவீனமடைந்து) விடும்! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்! (மாதந்தோறும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது காமெல்லாம் நோன்பு நோற்பதாகும்!'' என்றார்கள். அதற்கு 'நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்'' என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அப்படியானால் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள்விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள். (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவும் மாட்டார்கள்!'' என்று கூறினார்கள்.

புஹாரி : 1979 அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி).

720. ''அல்லாஹ்விற்கு மிக விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிக விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பைவிட்டு விடுவார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1131 அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி).

721. நபி (ஸல்) அவர்களிடம் என்னுடைய நோன்பு பற்றிக் கூறப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாள்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர் அவர்களே! (இதை விட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!)'' என்றேன். அவர்கள் 'ஐந்து நாள்கள்!'' என்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே!'' என்றேன். 'ஒன்பது நாள்கள்!'' என்றேன். ஒன்பது நாள்கள்!'' என்றார்கள். பிறகு, 'தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்பும் இல்லை அது ஆண்டின் பாதி நாள்களாகும்! எனவே, ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக!'' என்றார்கள்.

புஹாரி :1980 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

Friday, July 06, 2007

ரமலான் அல்லாத பிற நாட்களில் நோன்பு.

711. ''(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: '(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை. ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!''

புஹாரி : 1969 ஆயிஷா (ரலி).

712. நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில ஆண்டுகளில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். 'உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள்! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்!'' என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழும் தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

புஹாரி :1971 ஆயிஷா (ரலி).

713. நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்க மாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இனிமேல் நோன்பை விட மாட்டார்கள்!'' என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். 'அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இனிமேல் நோன்பு நோற்க மாட்டார்கள்!' என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டு விடுவார்கள்.

புஹாரி :1970 இப்னு அப்பாஸ் (ரலி).

Thursday, July 05, 2007

நோன்பில் மறதியாக....

710. ''ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1933 அபூஹுரைரா (ரலி)

Wednesday, July 04, 2007

அறப்போருக்கு செல்பவரின் நோன்பு.

709. இறைவழியில் (அறப் போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2840 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி).

Tuesday, July 03, 2007

நோன்பின் சிறப்புகள்.

707. ''நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!'' என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!'' என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1904 அபூஹுரைரா (ரலி).

708. ''சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1896 ஸஹ்ல் (ரலி) .

Monday, July 02, 2007

நோன்பின் போது நாவைப் பேணுதல்.

706. ''நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!'' (என்று அல்லாஹ் கூறினான்)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1894 அபூஹுரைரா (ரலி).

Sunday, July 01, 2007

இறந்தவருக்காக நோன்பு நோற்றல்.

704. ''களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்பாக அவரின் பொறுப்பாளர் நோன்பு நோற்பார்''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1952 ஆயிஷா (ரலி)

705. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்துவிட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா?' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது'' என்றார்கள் .

புஹாரி :1953 இப்னு அப்பாஸ் (ரலி).

Friday, June 29, 2007

வெள்ளிக் கிழமை நோன்பிருக்க கூடாது.

700. நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை நோன்பு வைப்பதைத் தடை செய்தார்களா என்று ஜாபிர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். 'ஆம்' என்றார்.

புஹாரி :1984 முஹம்மது பின் அப்பாத் (ரலி).

701. ''உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1985 அபூஹுரைரா (ரலி).

702. ''நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்'' எனும் (திருக்குர்ஆன் 02:184வது) இறைவசனம் அருளப்பட்டபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் ('உங்களில் அந்த மாதத்தை அடைகிறவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 02:185வது வசனம்) அருளப்பெற்றது.

புஹாரி :4507 ஸலாமா (ரலி).

Thursday, June 28, 2007

இருபெருநாள் தினங்களில் நோன்பிருக்க கூடாது.

697. இவ்விரு நாள்களிலும் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை நோன்பை முடித்துப் பெருநாள் கொண்டாடும் தினமும் குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் நாளுமாகும்.

புஹாரி : 1990 அபூஉபைத் (ரலி).

698. நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களும் நோன்பு நோற்கக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1197 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

699. ஒருவர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, 'ஒருவர் ஒரு நாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!'' என்று கூறினார்கள். அந்த மனிதர் '(அவர்) திங்கட்கிழமையன்று... (நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!)'' என்று கூறினார்கள் என நான் நினைக்கிறேன். அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெருநாளாக அமைந்துவிட்டது! எனவே, இப்னு உமர் (ரலி) 'நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நபி (ஸல்) அவர்கள் இந்த தினத்தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்!'' என்று கூறினார்கள்.

புஹாரி :1994 ஜியாத் பின் ஜூபைர் (ரலி).

Wednesday, June 27, 2007

ஆஷூரா தினத்தில் உணவை உண்டவர்.

695. நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் 'யார் சாப்பிட்டுவிட்டாரோ அவர் (நோன்பாக) இருக்கட்டும்!' என்று ஒருவரை அனுப்பி மக்களுக்கு அறிவிக்கச் செய்தார்கள்.


புஹாரி : 1924 ஸலமா பின் அக்வஹ் (ரலி).



696. நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, 'யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!'' என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.


புஹாரி : 1960 அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி).

Tuesday, June 26, 2007

ஆஷூரா நோன்பு.

688. குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் '(ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்!'' எனக் கூறினார்கள்.


புஹாரி : 1893 ஆயிஷா (ரலி).



689. அறியாமைக்கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி (ஸல்) அவர்கள், '(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகிறவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகிறவர் அதை விட்டுவிடலாம்'' என்று கூறினார்கள்.


புஹாரி : 4506 இப்னு உமர் (ரலி).



690. (ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டிருந்தபோது அஷ்அஸ் இப்னு கைஸ் அவர்கள் வந்து, 'இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே'' என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டு கொண்டிருப்பதைக் கண்டு வியந்து) கூறினார். நான், 'ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டு வந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. எனவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்'' என்று சொன்னேன்.


புஹாரி : 4503 இப்னு மஸ்ஊத் (ரலி).



691. முஆவியா (ரலி) ஹஜ்ஜுக்குச் சென்ற ஆண்டு ஆஷுரா நாளில் மிம்பரில் நின்றுகொண்டு, 'மதீனா வாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? நபி (ஸல்) அவர்கள், இது ஆஷுரா நாளாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை என்று கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன். நோன்பு நோற்றிருக்கிறேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும்; விரும்பாதவர் விட்டு விடட்டும்' என்று கூறினார்.


புஹாரி : 2003 ஹூமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரலி).



692. நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். யூதர்கள் 'இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்'' என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.


புஹாரி : 2004 இப்னு அப்பாஸ் (ரலி).



693. ஆஸுரா நாளை யூதர்கள் பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், 'அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்!'' என்றார்கள்.


புஹாரி : 2005 அபூமூஸா (ரலி).


694. ''ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!''


புஹாரி: 2006 இப்னு அப்பாஸ் (ரலி).

Monday, June 25, 2007

ஹஜ் செய்பவர்கள் அரஃபா நோன்பு நோற்க வேண்டாம்.

686. அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்கு பானம் அனுப்பி வைத்தேன்; அதையவர்கள் குடித்தார்கள்.

புஹாரி : 1658 உம்மு ஃபழ்ல் (ரலி).

687. அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.

புஹாரி : 1989 மைமூனா (ரலி).

Sunday, June 24, 2007

பயணத்தில் நோன்பு நோற்கலாமா?

684. ஹம்ஸா இப்னு அம்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், 'பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?' என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், 'நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு'' என்றார்கள்.

புஹாரி: 1943 ஆயிஷா (ரலி).

685. ''நாங்கள் நபி (ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்தனர். அப்பயணத்தில் நபி (ஸல்) அவர்களை தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை!''

புஹாரி : 1945 அபூதர்தா (ரலி).

Saturday, June 23, 2007

நோன்பு நோற்காதோர் அதிக நன்மை பெற்றது.

683. (ஒரு பயணத்தில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத் தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது. ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பு நோற்காமல் விட்டுவிட்டவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள். நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், 'இன்று நோன்பை (நோற்காமல்) விட்டவர்கள் மறுமையில் (அதிக) நன்மையைக் கொண்டு சென்றார்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 2890 அனஸ் (ரலி).

Friday, June 22, 2007

பயணிகள் நோன்பை விடுவது.

680. ''நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். 'கதீத்' எனும் இடத்தை அடைந்ததும் நோன்பைவிட்டார்கள்; மக்களும் நோன்பைவிட்டனர்!''

புஹாரி : 1944 இப்னு அப்பாஸ் (ரலி).

681. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!'' என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் '(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!'' என்று கூறினார்கள்.

புஹாரி : 1946 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

682. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நோற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள்.

புஹாரி : 1947 அனஸ் (ரலி).

Wednesday, June 20, 2007

நோன்பாளி குளிப்பு கடமையானவராகயிருத்தல்.

677. ''நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!''.

புஹாரி : 1930 ஆயிஷா (ரலி).

Tuesday, June 19, 2007

நோன்பு நோற்ற நிலையில் மனைவியை முத்தமிட்டால்...

675. ''நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!'' என்று சொல்லிவிட்டு ஆயிஷா (ரலி) சிரித்தார்கள்.

புஹாரி : 1928 ஆயிஷா (ரலி).

676. ''நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் எவரையும் விட தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!''

புஹாரி : 1927 ஆயிஷா (ரலி).

Monday, June 18, 2007

தொடர் நோன்பு நோற்க தடை.

670. நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்'' என்றார்கள்.

புஹாரி : 1962 இப்னு உமர் (ரலி).

671. நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்?' என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்தபோது ஒருநாள் அவர்களைத் தொடர் நோன்பு நோற்கச் செய்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்'' என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போல் கூறினார்கள்.

புஹாரி : 1965 அபூஹூரைரா (ரலி).

672. ''தொடர் நோன்பு வைப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் அமல்களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று விடையளித்தார்கள்.

புஹாரி : 1966 அபூஹூரைரா (ரலி).

673. நபி (ஸல்) அவர்கள் (ரமளான்) மாதக் கடைசியில் தொடர்நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) மக்கள் சிலரும் தொடர் நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், 'எனக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாள்கள்) நீட்டிக்கப்பட்டாலும் என்னால் தொடர் நோன்பு நோற்க முடியும். அப்போது (என்னைப் பார்த்து தொடர்நோன்பு நோற்று, வணக்க வழிபாடுகளில்) மிதமிஞ்சி ஈடுபடுபடுவர்கள் தங்களின் போக்கைக் கைவிட வேண்டியது வரும். நான், உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் கொடுக்கும் நிலையில் நான் உள்ளேன்'' என்றார்கள்.

புஹாரி : 7241 அனஸ் (ரலி).

674. நபி (ஸல்) அவர்கள் மக்களின் மீது இரக்கப்பட்டுத் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், 'நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான்'' என்று கூறினார்கள்.

புஹாரி ;1964 ஆயிஷா (ரலி).