Sunday, November 30, 2008

நல்லறங்கள் தீயவைகளை அழித்து விடும்.

1758. ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றி விடும்'' (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் 'இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?' என்று கேட்டதற்கு 'என் சமுதாயம் முழுமைக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

புஹாரி :526 இப்னு மஸ்ஊது (ரலி).

1759. நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருமனிதர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றை செய்து விட்டேன். எனவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். எனவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (தொழுதேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் அல்லாஹ் 'உம்முடைய பாவத்தை' அல்லது உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்றார்கள்.

புஹாரி :6823 அனஸ் (ரலி).

No comments: