Showing posts with label தொழுகை. Show all posts
Showing posts with label தொழுகை. Show all posts

Sunday, November 30, 2008

நல்லறங்கள் தீயவைகளை அழித்து விடும்.

1758. ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றி விடும்'' (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் 'இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?' என்று கேட்டதற்கு 'என் சமுதாயம் முழுமைக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

புஹாரி :526 இப்னு மஸ்ஊது (ரலி).

1759. நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருமனிதர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றை செய்து விட்டேன். எனவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். எனவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (தொழுதேன்)'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் அல்லாஹ் 'உம்முடைய பாவத்தை' அல்லது உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்றார்கள்.

புஹாரி :6823 அனஸ் (ரலி).

Saturday, October 25, 2008

பாதையில் துன்பம் தரும் பொருட்களை அகற்றுதல்.

1682. ''ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதை விட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :652 அபூஹுரைரா (ரலி).

Monday, October 06, 2008

மனிதனின் வாழ்நாள் அதிகபட்ச அளவு.

1648. 'நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஆயுளின் கடைசிக் காலத்தில் இஷாத் தொழுகை நடத்தினார்கள். ஸலாம் கொடுத்ததும் எழுந்து நின்று, 'இன்றைய இந்த இரவை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் துவக்கத்தில் இப்போது பூமியின் மேல் இருக்கக் கூடியவர்களில் ஒருவர் கூட எஞ்சியிருக்கமாட்டார்கள்' என்று கூறினார்கள்'' .

புஹாரி : 116 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி).

Tuesday, September 23, 2008

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிள் சிறப்புகள்

1611. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு வானவர் என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூற 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

புஹாரி : 1121 இப்னு உமர்(ரலி).

Wednesday, July 30, 2008

நபி (ஸல்) அவர்களின் கனவுகள்.

1463. 'நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது, 'வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!' என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''

புஹாரி : 246 இப்னு உமர் (ரலி).

1464. நான் மக்கா நகரைத் துறந்து அங்கிருந்து பேரீச்சந் தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்த பூமி 'யமாமா'வாகவோ 'ஹஜரா'கவோ தான் இருக்கும் என்று நான் எண்ணினேன். ஆனால், அது யஸ்ரிப் -மதீனாவாகிவிட்டது. மேலும், இந்த என்னுடைய கனவில் நான் (என்னுடைய) வாள் ஒன்றை அசைக்க, அதன் முனை உடைந்து விடுவதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின்போதுமுஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்தபடியே மீண்டும் (ஒட்டி) அழகாகியது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளைமாடுகளை பார்த்தேன். (உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் அளித்த அந்தஸ்து (அவர்கள் இந்த உலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்ததாகும்.எனவே, (அந்த மாடுகள்) உஹுதுப் போரின்போது கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும். நன்மை என்பது அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த நம்முடைய வாய்மைக்கான பரிசும் (கைபர், மக்கா வெற்றிகளும்) ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3622 அபூ மூஸா(ரலி).

1465. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (தன்னை இறைத் தூதர் என்று வாதிட்ட) 'முஸைலிமா' எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், 'முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்'' என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலபேருடன் மதீனா வந்திருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ் (ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்சமட்டைத் துண்டு ஒன்று இருந்தது.

முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி (ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, 'இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச்செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைத் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன். இதோ, இவர்தாம் ஸாபித் இவர் என் சார்பாக உனக்கு பதிலளிப்பார்'என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன்'' என்று (முஸைலிமாவிடம்) சொன்னார்கள்

புஹாரி :4373 இப்னுஅப்பாஸ் (ரலி).

1466. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எனவே, கனவில் அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதினேன். உடனே, அவ்விரண்டும் பறந்துவிட்டன. எனவே, நான் அவ்விரண்டுக்கும் 'எனக்குப் பின் வெளிப்படவிருக்கிற மகா பொய்யர்கள் இருவர்' என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் அன்ஸீ மற்றொருவன் முஸைலிமா என்று கூறினார்கள்.

புஹாரி :4374 அபூஹூரைரா (ரலி).

1467. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்'' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்'' என்றனர்.

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள். நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், 'இவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள்,'செல்லுங்கள், செல்லுங்கள்'' என்று என்னிடம் கூறினர். அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவன் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்து வைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்து வைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், 'இவ்விருவரும் யார்?' என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்'' என்று கூறினார்கள்.

நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், 'இவர் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்'' என்று கூறினர். அப்படியே நடந்து அடர்ந்துயர்ந்த பசுமையான ஒரு பூங்காவிற்குச் சென்றோம். அதில் வசந்த காலத்தின் எல்லா வண்ணப் பூக்களும் காணப்பட்டன. அந்தப் பூங்காவிற்கு நடுவில் உயரமான மனிதர் ஒருவர் இருந்தார். வான் நோக்கி உயர்ந்திருந்தால் அவரின் தலையை என்னால் (எளிதில்) பார்க்க முடியவில்லை. அந்த மனிதரைச் சுற்றி நான் ஒருபோதும் கண்டிராத அளவிற்கு ஏராளமான சிறுவர்கள் இருந்தார்கள். நான் அவ்விருவரிடமும், 'இந்த (உயரமான) மனிதர் யார்? இந்தச் சிறுவர்கள் யார்?' என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், 'செல்லுங்கள், செல்லுங்கள்' எனக் கூறிவிடவே நடந்து ஒரு பெரும் பூங்காவுக்கு வந்தோம். அதைவிட பெரிய அழகான பூங்காவை நான் ஒருபோதும் கண்டதில்லை. (அதில் ஒரு பெரிய மரமும் இருந்தது.) அவ்விருவரும் என்னிடம், 'அதில் ஏறுங்கள்'' என்றனர். அப்படியே அதில் நாங்கள் ஏறி தங்கம் மற்றும் வெள்ளி செங்கற்களால் கட்டப்பட்டிருந்த ஒரு நகரத்திற்கு வந்தோம். அந்த நகரத்தின் தலை வாயிலை அடைந்து (அதைத்) திறக்குமாறு கூறினோம். உடனே எங்களுக்காக அது திறக்கப்பட்டது. நாங்கள் அதில் நுழைந்தோம். அங்கு நீ காண்கிறவற்றிலேயே மிகவும் அழகான பாதித் தோற்றமும் நீ காணுகிறவற்றிலேயே மிகவும் அருவருப்பான (மறு) பாதித் தோற்றமும் கொண்ட சில மனிதர்கள் எங்களை எதிர்கொண்டனர். அவர்களைப் பார்த்து (என்னுடன் வந்த) அவ்விருவரும், செல்லுங்கள்; (சென்று) அந்த நதியில் குதியுங்கள்'' என்றனர். அங்கு குறுக்கே ஒரு நதி பாய்ந்து கொண்டிருந்தது. அதன் நீர் தூய வெண்ணிறத்தில் காணப்பட்டது. எனவே, அவர்கள் சென்று அதில் விழுந்து (குளித்துவிட்டு) தங்களிடமிருந்து அந்த அசிங்கம் நீங்கி விட்டிருந்த நிலையில் மிகவும் பொலிவான வடிவத்திற்கு மாறியவர்களாக எங்களிடம் திரும்பி வந்தனர்.அவ்விருவரும் என்னிடம், 'இது (-இந்த நகரம்) தான் 'அத்ன்' எனும் (நிலையான) சொர்க்கமாகும். இதுவே உங்கள் ஓய்விடமாகும்'' என்றார். நான் பார்வையை உயர்த்தி மேலே பார்த்தபோது அங்கு வெண் மேகத்தைப் போன்ற மாளிகையொன்றைக் கண்டேன். அவ்விருவரும் என்னிடம், 'இது உங்கள் இருப்பிடம்'' என்றனர். நான் அவர்களிடம், 'உங்கள் இருவருக்கும் அல்லாஹ் சுபிட்சம் வழங்கட்டும்! என்னை விடுங்கள். நான் இதில் நுழைந்து கொள்கிறேன்'' என்றேன். அவ்விருவரும், 'இப்போது முடியாது நீங்கள் (மறுமையில்)அதில் நுழையத்தான் போகிறீர்கள்'' என்றனர். நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக்கண்டு உள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?'என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம்,'(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக் கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து) விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில் நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார். அந்தப் பூங்காவிலிருந்த உயரமான மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்களாவார். அவர்களைச் சுற்றியிருந்த சிறுவர்கள் இயற்கை மரபில் (இஸ்லாத்தில்) இறந்துவிட்ட சிறுவர்கள் ஆவர். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியபோது முஸ்லிம்களில் சிலர், 'இறைத்தூதர் அவர்களே! இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் (அந்தப் பூங்காவில் இருந்த குழந்தைகளில் அடங்குவார்களா?)'' என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(ஆம்) இணைவைப்பாளர்களுடைய குழந்தைகளும் தாம்'' என்று பதிலளித்தார்கள்.(தொடர்ந்து என்னுடன் வந்த அவ்விருவரும் கூறுகையில்,) ஒரு பாதி அழகாகவும் மறு பாதி அசிங்கமாகவும் காட்சியளித்த மக்கள், நல்லறங்களுடன் தீமைகளையும் கலந்து விட்டவர்களாவர்; (பின்னர்) அவர்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் (என்று கூறினர்).

புஹாரி : 7047 ஸமுரா பின் ஜூன்துப் (ரலி).

Wednesday, April 23, 2008

அறுத்துப் பலியிடும் நேரம்.

ஈதுல் அல்ஹாவில் (ஹஜ்ஜூப் பெருநாள் தினம்) அறுக்கப்படும் பிராணிகள்.

1280. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். 'தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்றை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்'' என்றார்கள்.

புஹாரி : 985 ஜூன்துப் (ரலி).

1281. அபூ புர்தா என்றழைக்கப்பட்டு வந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், 'உம்முடைய ஆடு இறைச்சி ஆடுதான். (குர்பானி ஆடன்று)'' என்று கூறினார்கள். அபூ புர்தா (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)'' என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவருக்குப் பொருந்தாது'' என்று சொல்லிவிட்டு, 'தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர் தமக்காகவே (அதை) அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்து விட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5556 அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1282. ''(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவர் திரும்பவும் அறுக்கட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது ஒருவர் எழுந்து 'மாமிசம் விரும்பி உண்ணக் கூடிய நாளாகும் இது. சதைப் பற்றுள்ள இரண்டு ஆடுகளை விட எனக்கு விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்றும் என்னிடம் உள்ளது' என்று கூறித் தம் அண்டை வீட்டார்(களுக்கும் கொடுக்க வேண்டியுள்ளது) பற்றியும் குறிப்பிட்டார். (தொழுகைக்கு முன்பே அறுப்பதற்கு மேற்கண்ட காரணங்களால் அவர் அனுமதி கேட்டார்) அவருக்கு நபி (ஸல்) சலுகை வழங்கினார்கள். இந்தச் சலுகை மற்றவர்களுக்கும் உண்டா இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை.

புஹாரி : 954 அனஸ் (ரலி).

1283. நபி (ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!'' எனக் கூறினார்கள்.

புஹாரி : 2300 உக்பா பின் ஆமிர் (ரலி).

Monday, March 10, 2008

மற்ற போர்கள் பற்றி...

1186. முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். 'தூகரத்' என்னுமிடத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரிய ஓர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, 'இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டன'' என்று கூறினான். நான், 'அவற்றை யார் பிடித்துச் சென்றது?' என்று கேட்டேன். அதற்கவன், 'கத்ஃபான் குலத்தார்'' என்று பதில் சொன்னான். உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, 'யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக் கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். 'நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப்போகும்) நாள்'' என்று (பாடியபடி) கூறிக் கொண்டே அவர்களின் மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் 'ரஜ்ஸ்' எனும் யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன். (அவர்களை நான் விரட்டிச் சென்ற போது) அவர்கள்விட்டுவிட்டுப் போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக் கொண்டேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்(து சேர்ந்த)னர். நான், 'இறைத்தூதர் அவர்களே! அந்தக் கூட்டத்தினர் தாகமுடன் இருந்த போதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்து விட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச் சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அக்வஃ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். எனவே, மென்மையாக நடந்து கொள்'' என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிற்குத்) திரும்பி வந்தோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.


புஹாரி : 4194 ஸலமா பின் அக்வஹ் (ரலி).

Saturday, February 23, 2008

சில காரியங்களில் துரிதம் காட்டுதல்.

1158. அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து திரும்பியபோது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் 'பனு குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும் வரை அஸர் தொழ வேண்டாம்'' என்று கூறினார்கள். வழியிலேயே அஸர் நேரத்தை அடைந்தோம். 'பனூ குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை அடையும் வரை நாம் அஸர் தொழவேண்டாம்' என்று சிலர் கூறினர். வேறு சிலர் 'இந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை; எனவே நாம் தொழுவோம்' என்றனர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் நபி (ஸல்) அவர்கள் குறை கூறவில்லை.

புஹாரி :946 இப்னு உமர் (ரலி).

Sunday, March 25, 2007

அச்சநேரத் தொழுகை..

481. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு அணிகளில் ஓரணியினருக்கு (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுகை நடத்தினார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்று கொண்டு) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் (இரண்டாம் அணியினர்) நின்றிருந்த இடத்தில் (எதிரிகளுக்கு முன்னால்) நின்று கொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து ஒரு ரக்அத் தொழுதுவிட்டு, அவர்கள் (தொழுகையில்) இருக்க நபியவர்கள் ஸலாம் கொடுத்தார்கள். பிறகு இந்த அணியினர் எழுந்து (மீதமிருந்த) தங்களின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். முதல் அணியினரும் எழுந்து (மீதிமிருந்த) தங்களின் ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர்.

புஹாரி:4133 இப்னு உமர் (ரலி)

482. (அச்ச நேரத் தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர்களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தங்கள் முகங்கள் இருக்கும் வண்ணம் (தொழாமல்) நிற்பர். அப்போது இமாம் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். பிறகு, அவர்கள் எழுந்து தங்களுக்கு (மீதிமிருக்கும்) ஒரு ரக்அத்தை அந்த இடத்திலேயே இரண்டு சஜ்தாக்கள் செய்து பூர்த்தி செய்து கொள்வர். பிறகு, இவர்கள் மற்றோர் அணியினரின் இடத்திற்குச் சென்றுவிடுவர். அந்த (இரண்டாவது) அணியினர் (இமாமிடம்) வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இன்னொரு ரக்அத்தை இமாம் தொழுவார். இப்போது இமாமுக்கு இரண்டு ரக்அத்துக்களும் முடிந்துவிட்டது. பிறகு இவர்கள் (மீதமிருக்கும் ஒரு ரக்அத்தைத் தனியாக எழுந்து) ருகூஉ செய்து இரண்டு சஜ்தாக்கள் செய்து தொழுவார்கள்.

புஹாரி: 4131 ஸாலிஹ் இப்னு கவ்வாத் (ரஹ்)

483. ('தாத்துர் ரிகாஉ') போருக்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அப்போது நாங்கள் எதிரிகளை எதிர்கொண்டு அவர்களுக்காக அணி வகுத்தோம். கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர்களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தங்கள் முகங்கள் இருக்கும் வண்ணம் (தொழாமல்) நிற்பர். அப்போது இமாம் தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்துவார். பிறகு, அவர்கள் எழுந்து தங்களுக்கு (மீதிமிருக்கும்) ஒரு ரக்அத்தை அந்த இடத்திலேயே இரண்டு சஜ்தாக்கள் செய்து பூர்த்தி செய்து கொள்வர். பிறகு, இவர்கள் மற்றோர் அணியினரின் இடத்திற்குச் சென்றுவிடுவர். அந்த (இரண்டாவது) அணியினர் (இமாமிடம்) வருவார்கள். அவர்களுடன் சேர்ந்து இன்னொரு ரக்அத்தை இமாம் தொழுவார். இப்போது இமாமுக்கு இரண்டு ரக்அத்துக்களும் முடிந்துவிட்டது. பிறகு இவர்கள் (மீதமிருக்கும் ஒரு ரக்அத்தைத் தனியாக எழுந்து) ருகூஉ செய்து இரண்டு சஜ்தாக்கள் செய்து தொழுவார்கள்.

புஹாரி :4132 ஸாலிஹ் பின் கவ்வாத் (ரலி)

484. 'தாத்துர் ரிகாஉ' போரில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு (போரை முடித்துக் கொண்டு) நாங்கள் நிழல் நிறைந்த ஒரு மரத்தினருகே வந்தோம். அந்த மரத்தை நபி (ஸல்) அவர்களு(டைய மதிய ஓய்வு)க்காக விட்டுவிட்டோம். அப்போது இணைவைப்பவர்களில் ஒருவர் வந்தார். நபி (ஸல்) அவர்களின் வாள் அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. உடனே அதை அவர் உருவிக் கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி, 'எனக்கு நீர் அஞ்சுகிறீரா?' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் (கொஞ்சமும் அஞ்சாமல்) 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். அவர், 'இப்போது என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்றுவது யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்'' என்று பதிலளித்தார்கள். அப்போது நபித்தோழர்கள் அவரைக் கண்டித்தார்கள். பிறகு தொழுகைக்காக 'இகாமத்' சொல்லப்பட்டது. அப்போது (தம் தோழர்களில்) ஓர் அணியினருக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் (அச்ச நேரத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள். பிறகு இந்த அணியினர் பின்னால் விலகிக் கொள்ளவே (எதிரிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த அணியினர் வந்தனர்.) அந்த அணியினருக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுகை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு ரக்அத்துகளும், மக்களுக்கு இரண்டு ரக்அத்துகளும் ஆயின. (அந்த மனிதரின் பெயர் 'கவ்ரஸ் இப்னு ஹாரிஸ்' என்றும், இப்போரில் 'முஹாரிப் கஸஃபா' கூட்டத்தாரை நபி (ஸல்) அவர்கள் எதிர்கொண்டார்கள் என்றும் அபூ அவானா (ரஹ்) அவர்களிடமிருந்து முஸத்தத் (ரஹ்) அறிவித்தார்.)

புஹாரி: 4136 ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)

Saturday, March 24, 2007

பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை..

480. ''ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறிவிட்டு மூன்றாம் முறை 'விரும்பியவர்கள் தொழலாம்'' என்றார்கள்.

புஹாரி : 627 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

Friday, March 23, 2007

மக்ரிபுக்கு முன் ஸூன்னத்து தொழுதல்..

479. முஅத்தின் பாங்கு சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்கு) வருவதற்கு முன் நபித் தோழர்கள் (ஸுனனத் தொழுவதற்காக) தூண்களை நோக்கி விரைவார்கள். இவ்வாறே பாங்கிற்கும் இகாமத்துக்கும் இடையில் (அதிக நேரம்) இல்லாமலிருந்தும் மஃரிபுக்கும் முன்பு இரண்டு ரக்அத் தொழுதார்கள்.

புஹாரி :625 அனஸ் (ரலி)

Thursday, March 22, 2007

அஸருக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் தொழுதது..

477. இப்னு அப்பாஸ் (ரலி), மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்ஹர் (ரலி) ஆகியோர் என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறும்! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி (ஸல்) அவர்கள் அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க. அத் தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!'' என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ் (ரலி), தாமும் உமரும், இவ்வாறு (அஸருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) 'நீர் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கேளும்' எனக் கூறினார். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா (ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம்; வந்து விஷயத்தைக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை பார்த்தேன். தொழுதுவிட்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனு ஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி, 'நீ அவர்களுக்கு அருகில் சென்று இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே? என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி (ஸல்) அவர்கள் தம் சைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், 'அபூ உமய்யாவின் மகளே! அஸருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்'' என்றார்கள் என உம்மு ஸலாமா (ரலி) விடையளித்தார்கள்.

புஹாரி :1233 குரைப் (ரலி)

478. இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ நபி (ஸல்) அவர்கள் விட்டதேயில்லை. அவை ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், அஸர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.

புஹாரி : 592 ஆயிஷா (ரலி)

Wednesday, March 21, 2007

தொழக்கூடாத நேரங்கள்..

473. ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

புஹாரி: 581 உமர் (ரலி)

474. ''ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உயரும் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


புஹாரி: 586 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)

475. ''சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள்''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 582 இப்னு உமர் (ரலி)

476. சூரியனின் தலைப்பகுதி உதயமாகிவிட்டால் அது முழுமையாக வெளிப்படும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்டால் அது (முழுமையாக) மறைந்து விடும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3272 இப்னு உமர் (ரலி)

Friday, March 09, 2007

தொழுகையில் தாம் எதை ஓதுகிறோம் என்ற உணர்வுடன்

448.நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. 'இந்தக் கயிறு ஏன்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், 'இது ஸைனபு (ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். சோர்வடைந்தால் உட்கர்ந்து விட வேண்டும்' என்று கூறினார்கள்.

புஹாரி:1150 அனஸ் (ரலி)

449. 'என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். 'யார் இந்தப் பெண்மணி?' என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி (ஸல்) 'போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்' என்று கூறினார்கள்'' என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

புஹாரி:43 ஆயிஷா (ரலி)

450. 'உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது கண் அயர்ந்தால், அவரை விட்டும் தூக்கக் கலக்கம் நீங்கும் வரை அவர் (தொழுவதை விட்டுவிட்டு) தூங்கட்டும். உங்களிலே அவர் கண் அயர்ந்து கொண்டே தொழுதால் அவர் (தொழுகையில்) பாவ மன்னிப்புக் கோருகிறாரா, தன்னைப் பழிக்கிறாரா என்பது அவருக்குத் தெரியாது' என்று' இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

புஹாரி:212 ஆயிஷா (ரலி)

Wednesday, March 07, 2007

காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி..

442.நபி (ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், 'அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் - அல்லது அவரின் காதில் - ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி:3270 இப்னு மஸ்வூத் (ரலி)

443.நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் வந்தார்கள். 'நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழும்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து 'மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.

புஹாரி: 1127 அலி (ரலி)

444.''உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்'.

புஹாரி: 1142 அபூஹூரைரா (ரலி)