Showing posts with label ஆடு. Show all posts
Showing posts with label ஆடு. Show all posts

Friday, January 23, 2009

எலிகளாக உருமாற்றப் பட்டோர்.

1886. பனூ இஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டு விட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் அவர்கள் சொன்னார்கள். இதை நான் கஅபுல் அஹ்பார் (ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?' என்று வினவினார்கள். நான், ஆம் (கேட்டேன்)'' என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். 'நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)'' என்று கேட்டேன்.

புஹாரி : 3305 அபூஹூரைரா (ரலி).

Thursday, July 03, 2008

விஷமூட்டுதல்.

1413. யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், 'வேண்டாம்'' என்று கூறிவிட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

புஹாரி : 2617 அனஸ் (ரலி).

Monday, May 19, 2008

தம்மைக் காட்டிலும் பிறரின் தேவைக்கு முன்னுரிமையளித்தல்.

1330. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.''.. அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.''.. என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)'' என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார். அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச் சரிசெய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்'' என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

புஹாரி : 3798 அபூஹூரைரா (ரலி).

1331. நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள், 'உங்களில் எவரிடமாவது உணவு இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் சுமார் ஒரு ஸாவு அளவு உணவு தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. பிறகு, மிக உயரமான (முரட்டு சுபாவம் கொண்ட) தலைவிரிகோலமான இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், '(இவை) விற்பதற்காகவா? அன்பளிப்பாகவா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை. விற்பதற்காகத் தான் (கொண்டு வந்துள்ளேன்)'' என்று பதிலளித்தார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் வாங்கினார்கள்; அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்றி முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்குமே அதன் ஈரலில் இருந்து ஒரு துண்டை நபி (ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்திருந்தார்கள். அங்கிருந்தவருக்கு அதைக் கொடுத்தார்கள். அங்கில்லாதவருக்கு எடுத்து (பாதுகாத்து) வைத்தார்கள். இரண்டு (அகன்ற) தட்டுகளில் அவற்றை வைத்தார்கள். அனைவரும் உண்டார்கள். நாங்களும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளும் அப்படியே மீதமாகிவிட்டன. அவற்றை நாங்கள் ஒட்டகத்தில் ஏற்றிச் சென்றோம்.

புஹாரி : 2618 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் (ரலி).

1332. திண்ணைத் தோழர்கள் ஏழ்மை வயப்பட்ட மனிதர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் 'இருவருக்குரிய உணவு யாரிடம் உள்ளதோ அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை அழைத்துச் செல்லட்டும்! நான்கு பேருக்குரிய உணவு இருந்தால் ஐந்தாவது, ஆறாவது நபர்களாக திண்ணைத் தோழர்களை அழைத்துச் செல்லட்டும்!' எனக் கூறினார்கள். அபூ பக்ர் (ரலி) மூன்று நபர்களை அழைத்துச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் பத்து நபர்களை அழைத்துச் சென்றனர். (வீட்டில்) நானும் என் தந்தை (அபூ பக்ரும்) தாயும் என்னுடைய வீட்டிற்கும் (என் தந்தை) அபூ பக்ருடைய வீட்டிற்கும் கூட்டாகப் பணி செய்து வரும் வேலையாளும் இருந்தோம். என் மனைவியும் என்று அவர் குறிப்பிட்டாரா இல்லையா என்று அடுத்த அறிவிப்பாளர் சந்தேகம் தெரிவிக்கிறார். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் இரவு உணவு அருந்திவிட்டு, இஷாத் தொழும் வரை அங்கேயே தங்கிவிட்டு இரவில் அல்லாஹ் நாடிய அளவு கழிந்த பின் (வீட்டிற்கு) வந்தனர். 'உங்கள் விருந்தினரை விட்டுவிட்டு எங்கே தங்கி விட்டீர்?' என்று அவர்களின் மனைவி கேட்டனர். அதற்கு அபூபக்ர் (ரலி), 'அவர்களுக்கு இன்னும் நீ இரவு உணவு அளிக்கவில்லையா?' என்று திருப்பிக் கேட்டார்கள். 'உணவை முன் வைத்த பின்பும் நீங்கள் வருவது வரை அவர்கள் உண்ண மறுத்துவிட்டனர்' என்று மனைவி கூறினார். (என் தந்தை கோபிப்பார் என்பதை அறிந்த) நான் சென்று ஒளிந்து கொண்டேன்.

'அறிவிலியே!' 'மூக்கறுபடுவாய்!' என என்னை ஏசினார்கள். பிறகு மகிழ்வற்ற நிலையில் 'சாப்பிடுங்கள்! அல்லாஹ்வின் மேல் ஆணையாக ஒருபோதும் நான் சாப்பிட மாட்டோம்' என்று (தம் குடும்பத்தினரை நோக்கிக்) கூறினார்கள். நாங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்தையும் எடுத்துச் சாப்பிடும்போது அதன் அடிப்புறத்திலிருந்து அதை விட அதிகமாக வளர்ந்து கொண்டே இருந்தது. அனைவரும் வயிறு நிரம்ப உண்டார்கள். அதற்கு முன்னிருந்ததை விட உணவு அதிகமாக இருந்தது. முன்பிருந்த அளவு அல்லது அதை விட அதிகமாக உணவு இருப்பதைக் கண்ட அபூபக்ர் (ரலி) 'பனூ ஃபிராஸ் சகோதரியே! இது என்ன?' என்று (தம் மனைவியிடம்) வினவினார்கள். அதற்கவர் 'என் கண் குளிர்ச்சியின் மேல் ஆணை! இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பிருந்ததை விட மூன்று மடங்கு இப்போது அதிகமாக உணவு உள்ளது என்றார். பிறகு அபூ பக்ரும் சாப்பிட்டார்கள். சாப்பிட மாட்டேன் என்று சத்தியம் செய்தது ஷைத்தானிடமிருந்து ஏற்பட்டுவிட்டது ஒரு கவளத்தை எடுத்து உண்டார்கள். பின்பு நபி (ஸல்) அவர்களிடம் எஞ்சிய உணவை எடுத்துச் சென்றார்கள். காலை வரை அது அங்கேயே இருந்தது. எங்களுக்கும் ஒரு கூட்டத்தினருக்குமிடையே உடன் படிக்கை ஒன்று இருந்தது. அந்தக் கெடு முடிந்துவிட்டது. (அது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தவர்களை) பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு தலைவரின் கீழ் அமைத்தோம். அவர்களில் ஒவ்வொருவருடனும் எத்தனை பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். அவர்கள் அனைவரும் அந்த உணவிலிருந்து சாப்பிட்டார்கள்.

புஹாரி : 602 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் (ரலி).

Sunday, May 18, 2008

அரக்கு மரத்தின் பழங்கள் பற்றி..

1329. நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ('மர்ருழ் ழஹ்ரான்' என்னுமிடத்தில்) 'அராக்' (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள். ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது'' என்று கூறினார்கள். மக்கள், 'நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3406 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

Saturday, May 03, 2008

பால் குடித்தல் பற்றி....

1307. நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரின் குதிரை அவருடனேயே பூமியில் அழுந்திவிட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), 'எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடனிருக்க, ஓர் ஆட்டிடையன் அவ்வழியே சென்றான். உடனே, அபூபக்ர் (ரலி) ஒரு கிண்ணத்தை எடுத்து (ஆடு ஒன்றிலிருந்து) சிறிது பாலை அதில் கறந்து அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அபூ பக்ர் அவர்கள் திருப்தியடையும் வரை நபி (ஸல்) அவர்கள் (அதிலிருந்து) அருந்தினார்கள்.

புஹாரி :3908 அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1308. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'ஈலியா' (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாரிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் 'உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4709 அபூஹூரைரா (ரலி).

Saturday, April 26, 2008

மாற்றப்பட்ட குர்பானிச் சட்டம்.

1287. குர்பானி இறைச்சிகளை மூன்று நாள்களுக்கு (மட்டும்) உண்ணுங்கள். (இந்த ஹதீஸின்படி செயல்படும் வகையில்) அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) மினாவிலிருந்து புறப்படும்போது குர்பானிப் பிராணிகளின் இறைச்சி(யைத் தவிர்ப்பதற்)காக (ரொட்டியை) எண்ணெய் தொட்டு உண்டுவந்தார்கள்.

புஹாரி : 5574 இப்னு உமர் (ரலி).

1288. நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் 'மூன்று நாள்களுக்கு மேல் (குர்பானி இறைச்சியை) உண்ணாதீர்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது அதை உண்ணக் கூடாது எனக் கட்டாயப்படுத்துவதற்கல்ல. மாறாக, அவர்கள் (அவ்வாண்டு பஞ்சத்தில் பீடிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு வசதியுள்ளவர்கள்), அதிலிருந்து உணவளிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். (அவர்களின் எண்ணத்தை) அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

புஹாரி : 5570 ஆயிஷா (ரலி).

1289. நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாள்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைப் சாப்பிட மாட்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள், 'சாப்பிடுங்கள்; சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி எங்களுக்குச் சலுகை வழங்கியதும் நாங்கள் சாப்பிட்டு, சேமித்து வைக்கலானோம்.

புஹாரி : 1719 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

1290. நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்'' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 5569 ஸலமா பின் அக்வஹ் (ரலி).

1291. (இனி), தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாள்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5474 அபூஹுரைரா (ரலி).

Thursday, April 24, 2008

பலிப் பிராணியைத் தம் கையால் அறுத்துப் பலியிடுதல்

1284. நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.

புஹாரி : 5565 அனஸ் (ரலி).

Wednesday, April 23, 2008

அறுத்துப் பலியிடும் நேரம்.

ஈதுல் அல்ஹாவில் (ஹஜ்ஜூப் பெருநாள் தினம்) அறுக்கப்படும் பிராணிகள்.

1280. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். 'தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்றை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்'' என்றார்கள்.

புஹாரி : 985 ஜூன்துப் (ரலி).

1281. அபூ புர்தா என்றழைக்கப்பட்டு வந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், 'உம்முடைய ஆடு இறைச்சி ஆடுதான். (குர்பானி ஆடன்று)'' என்று கூறினார்கள். அபூ புர்தா (ரலி), 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)'' என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவருக்குப் பொருந்தாது'' என்று சொல்லிவிட்டு, 'தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர் தமக்காகவே (அதை) அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்து விட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5556 அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1282. ''(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவர் திரும்பவும் அறுக்கட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அப்போது ஒருவர் எழுந்து 'மாமிசம் விரும்பி உண்ணக் கூடிய நாளாகும் இது. சதைப் பற்றுள்ள இரண்டு ஆடுகளை விட எனக்கு விருப்பமான ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்றும் என்னிடம் உள்ளது' என்று கூறித் தம் அண்டை வீட்டார்(களுக்கும் கொடுக்க வேண்டியுள்ளது) பற்றியும் குறிப்பிட்டார். (தொழுகைக்கு முன்பே அறுப்பதற்கு மேற்கண்ட காரணங்களால் அவர் அனுமதி கேட்டார்) அவருக்கு நபி (ஸல்) சலுகை வழங்கினார்கள். இந்தச் சலுகை மற்றவர்களுக்கும் உண்டா இல்லையா? என்பது எனக்குத் தெரியவில்லை.

புஹாரி : 954 அனஸ் (ரலி).

1283. நபி (ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது, 'அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக!'' எனக் கூறினார்கள்.

புஹாரி : 2300 உக்பா பின் ஆமிர் (ரலி).