Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Saturday, November 08, 2008

மறுமை நாளின் அடையாளங்கள்.

1709. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' .

புஹாரி : 80 அனஸ் (ரலி).

1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; 'ஹர்ஜ்' பெருகிவிடும். 'ஹர்ஜ்' என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7063 அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி).

1711. நபி (ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெருகிவிடும்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'கொலை, கொலை'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 7061 அபூஹுரைரா (ரலி).

1712. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

புஹாரி : 100 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி).

Saturday, May 03, 2008

பால் குடித்தல் பற்றி....

1307. நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி (ஹிஜ்ரத்) சென்றபோது சுராக்கா இப்னு மாலிக் இப்னி ஜுஃஷும் என்பவர் அவர்களைப் (பிடித்து வரப்) பின்தொடர்ந்து சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கெதிராக (அவரைச் செயலிழக்கச் செய்யும் படிப்) பிரார்த்தித்தார்கள். உடனே, அவரின் குதிரை அவருடனேயே பூமியில் அழுந்திவிட்டது. சுராக்கா (நபியவர்களிடமே), 'எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். நான் உங்களுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாகத்துடனிருக்க, ஓர் ஆட்டிடையன் அவ்வழியே சென்றான். உடனே, அபூபக்ர் (ரலி) ஒரு கிண்ணத்தை எடுத்து (ஆடு ஒன்றிலிருந்து) சிறிது பாலை அதில் கறந்து அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அபூ பக்ர் அவர்கள் திருப்தியடையும் வரை நபி (ஸல்) அவர்கள் (அதிலிருந்து) அருந்தினார்கள்.

புஹாரி :3908 அல் பராஉ பின் ஆஸிஃப் (ரலி).

1308. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'ஈலியா' (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாரிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் 'உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4709 அபூஹூரைரா (ரலி).

Thursday, May 01, 2008

போதை தரும் மதுவை அருந்தியவன் திருந்தி தவ்பா செய்க.

1303. எவனொருவன் போதை தரும் மதுவை அருந்திவிட்ட பிறகு (அதைக் கைவிட்டு) அதற்காகப் பாவமன்னிப்புக் கோரவில்லையெனில் அவன் மறுமையில் (சொர்க்கத்தின்) மதுவை அருந்தும் பேற்றை இழந்துவிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 5575 இப்னு உமர் (ரலி).

Wednesday, April 30, 2008

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.

1301. 'போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 242 ஆயிஷா (ரலி).

1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, '(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)'' என்று (அறிவுரை) கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான 'பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4344 அபூபுர்தா (ரலி).

Tuesday, April 29, 2008

மது ஊற வைக்கப்படும் குடுவைகள் பற்றி...

1296. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , '(மது ஊறவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவையிலும், தார் பூசப்பட்ட பீப்பாயிலும் (பேரீச்சம் பழச்சாற்றை அல்லது திராட்சைப்) பழச்சாற்றை ஊற்றி வைக்காதீர்கள்'' என்று சொன்னதாக அனஸ் (ரலி) எனக்கு அறிவித்தார்கள்.

புஹாரி : 5587 அனஸ் (ரலி).

1297. நபி (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவையையும், தார் பூசப்பட்ட பாத்திரத்தையும் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

புஹாரி : 5594 அலீ (ரலி).

1298. நான் அஸ்வத் இப்னு யஸீத் (ரஹ்) அவர்களிடம் 'எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பது விரும்பத்தகாதது என இறை
நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நீங்கள் வினவியதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம் (வினவினேன்). இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! எந்தப் பாத்திரத்தில் பானங்களை ஊற்றிவைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரான எங்களை சுரைக்காய் குடுவையிலும் தார் பூசப்பட்ட பாத்திரத்திலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடை செய்தார்கள்'' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) கூறினார்:) 'சுட்ட களிமண் பாத்திரத்தையும் மண்சாடியையும் ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடவில்லையா?' என கேட்டேன். அதற்கு அஸ்வத் (ரஹ்) 'நான் கேட்டதைத்தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் கேட்காத ஒன்றை உங்களுக்கு அறிவிக்க வேண்டுமா?' என்று கூறினார்கள்.

புஹாரி : 5595 இப்ராஹீம் (ரலி).

1299. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு நான் தடை செய்கிறேன்' என்று கூறினார்கள். (பின்னர் இத்தடை நீக்கப்பட்டது)

புஹாரி : 1398 இப்னு அப்பாஸ் (ரலி).

1300. நபி (ஸல்) அவர்கள் தோலால் ஆன நீர்ப்பாத்திரங்க(ளைத் தவிர மற்றவைக)ளுக்குத் தடை விதித்தபோது, 'மக்கள் அனைவருமே தோல் பாத்திரங்களைப் பெற்றிருப்பதில்லையே'' என்று சொல்லப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், தார் பூசப்படாத சுட்ட களிமண் பாத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்தார்கள்.

புஹாரி : 5593 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி).

Monday, April 28, 2008

கனிகளை போதை பெற ஊறவைக்கத் தடை.

1294. நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த திராட்சையையும் பேரீச்சம் பழத்தையும் கலந்து ஊறவைக்க வேண்டாமென்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சக் செங்காய்களையும் கலந்து ஊற வைக்க வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.

புஹாரி : 5601 ஜாபிர் (ரலி).

1295. நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும், பேரீச்சம் பழத்தையும் உலர்ந்த திரட்சையையும் ஒன்று சேர்(த்து ஊற வை)ப்பதையும் தடை செய்தார்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித் தனியாக ஊற வைக்கலாம் (என அனுமதியளித்தார்கள்).

புஹாரி : 5602 அபூகதாதா (ரலி).

Sunday, April 27, 2008

போதை தரும் பானங்கள் பற்றி...

குடி பானங்கள்

1292. பத்ருப் போரின்போது போரில் கிடைத்த செல்வத்திலிருந்து என்னுடைய பங்காக வயதான ஒட்டகம் ஒன்று எனக்குக் கிடைத்திருந்தது. நபி (ஸல்) அவர்களும் (தமக்குக் கிடைத்த ஐந்தில் ஒரு பாகமான) குமுஸில் இருந்து எனக்கு மற்றொரு கிழட்டு ஒட்டகத்தைத் தந்திருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமாவுடன் (முதன் முதலாக) வீடு கூட விரும்பியபோது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரை, என்னுடன் வந்து 'இத்கிர்' புல்லைக் கொண்டு வர ஏற்பாடு செய்திருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும் தீனிப் பைகள், மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களும் அன்சாரி ஒருவரின் அறையின் அருகே மண்டியிட்டு அமரச் செய்யப்பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது திரும்பி வந்தேன். அப்போது என் இரண்டு ஒட்டகங்களின் திமில்களும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவற்றின் இந்த (அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் (கண்ணீர் சிந்த விடாமல்) கட்டுப்படுத்த முடியவில்லை. நான், 'இதையெல்லாம் செய்தவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'ஹம்ஸா இப்னு அப்தில் முத்தலிப் தான் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழு ஒன்றில் தான் இருக்கிறார்'' என்று பதிலளித்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களிடம் ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களின் செயலால் நான் அடைந்த வேதனை என் முகத்தில் தென்பட, அதைப் புரிந்து கொண்டார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய நாளைப் போன்ற (பயங்கரமான) ஒரு நாளை ஒருபோதும் நான் பார்த்ததில்லை. ஹம்ஸா என் இரண்டு ஒட்டகங்களையும் தாக்கி அவற்றின் திமில்களை அறுத்துவிட்டார். அவற்றின் (அடிவயிற்று) இடுப்புப் பகுதிகளை (வாளால்) கிழித்துவிட்டார். அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் நண்பர்கள் குழுவுடன் இருக்கிறார்'' என்று சொன்னேன். உடனே, நபி (ஸல்) அவர்கள் தங்களின் அங்கி ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி அதையணிந்து நடந்து செல்ல, அவர்களை நானும் ஸைத் இப்னு ஹாரிஸாவும் பின்தொடர்ந்து சென்றோம். ஹம்ஸா இருந்த வீட்டிற்கு வந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபிக்கு அனுமதி கொடுத்தார்கள். அங்கே அவர்கள் (அனைவரும்) மது அருந்திக் கொண்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கத் தொடங்கினார்கள். ஹம்ஸாவின் இரண்டு கண்களும் சிவந்திருக்க, அவர் போதையுற்று விட்டிருந்தார். ஹம்ஸா, அல்லாஹ்வின் தூதரைப் பார்த்துப் பார்வையை உயர்த்தி அவர்களின் இரண்டு முழங்கால்களையும் பார்த்தார்; பிறகு பார்வையை உயர்த்தி, அவர்களின் வயிற்றுப் பகுதியைப் பார்த்தார். பிறகு, 'நீங்கள் என் தந்தையின் அடிமைகள் தாமே?' என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டு, தாம் வந்த வழியே (திரும்பாமல்) அப்படியே பின் வாங்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.

புஹாரி : 3091 அலீ (ரலி).

1293. நான் அபூ தல்ஹா (ரலி) வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாள்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, '(மக்களே!) மது தடை செய்யப்பட்டுவிட்டது'' என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா (ரலி) என்னிடம், 'வெளியே சென்று இதை ஊற்றிவிடு'' என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், 'மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)'' என்று கேட்டார்கள். அப்போதுதான், 'இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்களின் மீது குற்றமில்லை'' (திருக்குர்ஆன் 05:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.

புஹாரி : 2464 அனஸ் (ரலி).

Friday, January 25, 2008

மது அருந்தியவர்க்குரிய தண்டனை.

1108. மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடித்திடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடுத்(திட உத்தரவு பிறப்பித்)தார்கள்.

புஹாரி 6776 அனஸ் (ரலி).

1109. நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்தால் (அதற்காக) நான் கவலை அடையப் போவதில்லை; குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்தால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக்குத் தண்டனையாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.

புஹாரி :6778 அலி (ரலி).