Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

Wednesday, January 07, 2009

தஜ்ஜாலுக்கு மதீனாவில் நுழையத் தடை.

1858. தஜ்ஜால் (மதீனாவை நோக்கி) வருவான்; மதீனாவின் வாசல்களில் நுழைவது அவனுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, (மதீனாவுக்கு வெளியே), மதீனாவின் உவர் நிலத்தில் அவன் தங்குவான்; அவனை நோக்கி மக்களில் சிறந்த ஒருவர் அன்று புறப்படுவார்; அவர் அவனிடம், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அடையாளம்) சொல்லிய தஜ்ஜால் நீதான் என்று உறுதியாகக் கூறுகிறேன்!'' என்பார். அப்போது தஜ்ஜால் (மக்களைநோக்கி), 'நான் இவனைக் கொன்று, பிறகு உயிர்ப்பித்தால் (என்) விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொள்வீர்களா?' என்று கேட்பான். மக்கள் 'கொள்ள மாட்டோம்!'' என்பார்கள். உடனே, அவன் அவரைக் கொன்று, பின்னர் உயிர்ப்பிப்பான். அப்போது, அந்த நல்ல மனிதர் உயிர்ப்பிக்கப்பட்டதும், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இன்றைய தினத்தை விடத் தெளிவாக உன்னைப் பற்றி நான் (இதற்கு முன்) ஒருபோதும் அறிந்திருக்கவில்லை!'' என்று கூறுவார். தஜ்ஜால்' நான் இவரைக் கொல்வேன்!'' என்பான். ஆனால், அவனால் அவரைக் கொல்ல முடியாது!''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1882 அபூ ஸயீத் (ரலி).

1859. நபி (ஸல்) அவர்களிடம் தஜ்ஜாலைக் குறித்து நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. மேலும், அவர்கள் என்னிடம், 'அவனால் உமக்கென்ன தீங்கு?' என்று கேட்டார்கள். நான், '(அச்சம் தான்.) ஏனெனில், தஜ்ஜாலுடன் மலையளவு ரொட்டியும் நதியளவு நீரும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், 'இது என்ன (பிரமாதம்)? (அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்டவிருக்கிறானோ) அதைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானதே'' என்றார்கள்.

புஹாரி : 7122 அல்முகீரா பின் ஷூஹ்பா (ரலி).

1860. ''மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காப்பார்கள். பின்னர் மதீனா, தன் குடிமக்களுடன் மூன்று முறை நில நடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிருந்து) வெளியேற்றி விடுவான்!. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1881 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1861. யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை மறுமை நாள் வந்தடைகிறதோ அவர்கள் தாம் மக்களிலேயே தீயோர் ஆவர் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.

புஹாரி : 7067 இப்னு மஸ்ஊத் (ரலி).

1862. தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறக் கேட்டேன்.

புஹாரி :4936 ஸஹ்ல் பின் ஸஆது (ரலி).

1863. நானும் மறுமை நாளும் இதோ இந்த (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டையும் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6504 அனஸ் (ரலி).

Wednesday, December 31, 2008

இரு முஸ்லீம்கள் வாளால் போரிட்டால்....

1834. இவருக்கு (அலீ (ரலி)க்கு) உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) என்னைச் சந்தித்து 'எங்கே செல்கிறீர்?' எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் 'நீர் திரும்பிச் செல்லும்; ஏனெனில், 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, 'அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்'

புஹாரி : அஹ்னஃப் இப்னு கைஸ் (ரலி).

1835. ஒரே வாதத்தை முன் வைக்கிற இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை இறுதி நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3608 அபூஹுரைரா (ரலி).

1836. (ஒரு முறை) எங்களிடையே நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்து விட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.

புஹாரி : 6604 ஹூதைஃபா (ரலி).

Monday, December 01, 2008

கொலைகள் செய்தவர் தவ்பா அங்கீகரிக்கப் படுதல்.

1760. பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒருவர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, '(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?' என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார். அந்தப் பாதிரியார், 'கிடைக்காது'' என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒருவர், '(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!'' என்று அவருக்குக் கூறினார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார். அப்போது இறை கருணையைப் பொழியும் வானவர்களும் இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) தர்க்கித்தனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, 'நீ நெருங்கி வா!'' என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, 'நீ தூரப்போ!'' என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான். பிறகு, 'அவ்விரண்டுக்குமிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்'' என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்லவிருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3470 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி).

1761. நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன், அவர்களின் கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, '(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?' என்று கேட்டதற்கு இப்னு உமர் (ரலி), 'அல்லாஹுதஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, 'நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?' என்று கேட்பான். அதற்கு, அவன் 'ஆம், என் இறைவா!' என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த இறைநம்பிக்கையாளர், 'நாம் இத்தோடு ஒழிந்தோம்' என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன், 'இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன்' என்று கூறுவான். அப்போது அவனுடைய நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், 'இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது இறைவனின் சாபம் உண்டாகும்' என்று கூறுவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2441 ஸஃப்வான் பின் முஹ்ரிஜ் (ரலி).

1762. ''தபூக் போரைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இதுவல்லாது நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. பத்ரில் கலந்துகொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப் போனார்கள். (போன இடத்தில்) போரிடும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான். 'இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்' என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அளித்த 'அகபா இரவில்' இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்கு பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; 'அல் அகபா' பிரமாணத்தைவிட 'பத்ர்' மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே! (தபூக் போரில் கலந்து கொள்ளாததையடுத்து நடந்த நிகழ்ச்சிகள் குறித்த) என்னுடைய செய்திகள் சில பின்வருமாறு: அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாதபோது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ்நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின்போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று (இரண்டு பொருள்படும்படி பேசிப் பாசாங்கு செய்து) அதை மறைக்காமல் இருந்ததில்லை. ஆனால், தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயியில் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்லவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்லவேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர் பார்த்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அப்போதுதான் அவர்கள் தங்களின் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும் விட்டார்கள். 'எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனைப் பேருக்கு இடமளிக்காது' எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள்.(போரில் கலந்துகொள்ளாமல்) தலைமறைவாகி விடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு (வஹீ) வராத வரையில் (தான் போருக்கு வராத) விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற) அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில்) காலத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லலாவேன். என்னுடைய பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்துவிடுவேன். '(நினைக்கும் போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத் தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப்படவேண்டும்?)' என்று என் மனத்திற்குள் கூறிக்கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக் கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடுபட்டனர். (ஒரு வழியாகப் பயண ஏற்பாடு முடிந்தது.) பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு (ஒரு) காலை நேரத்தில் புறப்பட்டு விட்டார்கள். அப்போதும் நான் என்னுடைய பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை. 'நபி (ஸல்) அவர்கள் சென்ற பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்களில் பயண ஏற்பாடுகளைச் செய்து அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்வேன்' என்று நான் (என் மனத்திற்குள்) சொல்லிக் கொண்டேன். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு (அன்றைய இரவும் கழிந்து) மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் அந்த பிற்பகுதியும் செய்து முடிக்கவில்லை. (இன்று நாளை என்று) என்னுடைய நிலை இழுபட்டுக் கொண்டே சென்றது. முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். (எனக்கு) அந்தப் போர் கை நழுவிவிட்டது. நான் உடடினயாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். (ஆனால், என்ன செய்வது?) அது என் விதியில் எழுதப்பட்டிருக்கவில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனாவில் நான் மக்களிடையே சுற்றி வரும்போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , தபூக் சென்றடையும் வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்து கொண்டிருக்கும்போது தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'கஅப் என்ன ஆனார்?' என்று கேட்டார்கள். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! அவரின் இரண்டு சால்வைகளும் (ஆடை அணிகலன்களும்) அவற்றைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டிருப்பதும் தான் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டன'' என்று கூறினார். உடனே, முஆத் இப்னு ஜபல் (ரலி), (அந்த மனிதரை நோக்கி), 'தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) மௌனமாகவே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டியபோது கவலை என் மனத்தில் (குடி) புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன். 'நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்?' என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் (ஆலோசனை) உதவி தேடினேன். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவை) நெருங்கி வந்துவிட்டார்கள் என்று (செய்தி) சொல்லப்பட்டபோது (நான் புனைந்து வைத்திருந்த) பொய்மை என் மனத்தைவிட்டு விலகிவிட்டது. 'பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது. அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். அவன் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்து விடுவான்)' என்று உணர்ந்து, நபி (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள்.(பொதுவாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்களின் வழக்கம். (வழக்கம் போல்) அதை அவர்கள் செய்தபோது, (தபூக் போரில் கலந்துகொள்ளச் செல்லாமல்) பின்தங்கி விட்டவர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (தாம் போருக்கு வராமல் போனதற்கு) சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்று அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள். அப்போது, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்னபோது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போன்று புன்னகைத்தார்கள். பிறகு, 'வாருங்கள்'' என்று கூறினார்கள். உடனே, நான் அவர்களிடம் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், '(போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்து கொண்டிருக்கவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாயதவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி (அவருடைய) கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்போது) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை'' என்று கூறினேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'இவர் உண்மை சொல்லிவிட்டார்'' (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்களின் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்'' என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்து கொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமல் போய்விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே!'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லிவிடலாமா என்று நான் நினைத்தேன். பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, '(தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கிறார்களா?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'ஆம், இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போன்றே (உண்மையான காரணத்தை நபியவர்களிடம்) கூறினார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டதும் தான் அப்போது அவர்கள் இருவருக்கும் (பதிலாகச்) சொல்லப்பட்டது.'' என்று கூறினார்கள். உடனே நான், 'அவர்கள்'' இருவரும் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'முராரா இப்னு ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் இப்னு உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும்'' என்று பத்ருப்போரில் கலந்துகொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்று விட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்களின் விஷயத்தில் மாறிப் போய்விட்டார்கள். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போன்றும் அது எனக்கு அன்னியமானது போன்றும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாள்கள் இருந்தோம். என்னுடைய இரண்டு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்து போய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர். ஆனால் நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டை விட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்துகொண்டும், கடை வீதிகளில் சுற்றிக் கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேசமாட்டார்கள். நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும்போது சலாம் கூறுவேன். எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது (என்னை நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்று) ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன். நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தார்கள். மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்றபோது, நான் நடந்து சென்று அபூ கத்தாதா (ரலி) அவர்களின் தோட்டத்தின் சுவர் மீதேறினேன். அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. உடனே நான், 'அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன்வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயாக?' என்று கேட்டேன். அதற்கு அவர் (பதிலேதும் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போன்றே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாயிருந்தார். (மூன்றாம் முறையாக) மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரண்டு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்த அந்தச் சுவரில் ஏறி (வெளியேறி) னேன். (நிலைமை இவ்வாறு நீடித்துக் கொண்டிருக்க) ஒரு நாள் மதீனாவின் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகளில் ஒருவர், 'கஅப் இப்னு மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்?' என்று (என்னைக் குறித்து) விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே, அவர் என்னிடம் வந்து, 'ஃகஸ்ஸான்' நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி)விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்துவிடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம். இதை நான் படித்தபோது, 'இது இன்னொரு சோதனையாயிற்றே!'' என்று (என் மனத்திற்குள்) கூறிக்கொண்டு அதை எடுத்துச் சென்று (ரொட்டி சுடும்) அடுப்பிலிட்டு எரித்து விட்டேன்.

ஐம்பது நாள்களில் நாற்பது நாள்கள் கழிந்தபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஒரு தூதர் என்னிடம் வந்து, 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , நீங்கள் உங்கள் மனைவியை விட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள்'' என்று கூறினார். அதற்கு நான், 'அவளை நான் விவாகரத்துச் செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டேன். அவர், 'இல்லை. (விவாகரத்து செய்ய வேண்டாம்.) அவரைவிட்டு நீங்கள் விலகி விடவேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத்தூதர் உத்தரவு)'' என்று கூறினார். இதைப் போன்றே என் இரண்டு சகாக்களுக்கும் (நபி (ஸல்) அவர்கள் உத்தரவு) அனுப்பியிருந்தார்கள். எனவே, நான் என் மனைவியிடம், 'உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா!'' என்று சொன்னேன். (என் சகா) ஹிலால் இப்னு உமய்யா (ரலி) அவர்களின் மனைவி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, '(என் கணவர்) ஹிலால் இப்னு உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா?' என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவு கொள்ள) நெருங்க வேண்டாம்'' என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டேயிருக்கிறார்'' என்றும் (அல்லாஹ்வின் தூதரிடம்) கூறினார். கஅப்(ரலி) கூறினார்: என் வீட்டாரில் ஒருவர், 'தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் இப்னு உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடைபுரிய) அனுமதிக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே)'' என்று கூறினார். அதற்கு நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்கமாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக (வேறு) இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சலுகை காட்டியிருக்கலாம்)'' என்று கூறி (மறுத்து) விட்டேன். அதற்குப் பின் பத்து நாள்கள் (இவ்வாறே) இருந்தேன். எங்களிடம் பேசக் கூடாதென இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாள்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118வது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) 'பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொருத்த வரையில் அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது அப்போது, 'சல்உ' மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், 'கஅப் இப்னு மாலிக்கே! நற்செய்தி பெற்றுக்கொள்!'' என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டேன். 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தபோது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று அறிவித்து விட்டார்கள்' என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரண்டு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார். அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக்கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி கூறினார்.) மேலும், (மலை மீதிருந்து வந்த) வந்து சேர்ந்தது. எவருடைய குரலை (மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரண்டு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூ கத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்துகொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், 'அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம்' என்று கூறலாயினர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்களில் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னபோது, சந்தோஷத்தினால் அவர்கள் தம் முகம் மின்னிக்கொண்டிருக்க, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதல் உன்னைக் கடந்து சென்ற நாள்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன்'' என்று கூறினார்கள்.
நான், 'இறைத்தூதர் அவர்களே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக்கிறீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'இல்லை. (என் தரப்பிலிருந்து நான் இதைத் தெரிவிக்கவில்லை.) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்துள்ள வேத அறிவிப்பின் அடிப்படையில்) தான் தெரிவிக்கிறேன்'' என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஏதாவது) சந்தோஷம் ஏற்படும்போது அவர்களின் முகம் சந்திரனின் ஒரு துண்டு போல் ஆகி பிரகாசிக்கும். அவர்களின் முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களின் சந்தோஷத்தை நாங்கள் அறிந்துகொள்வோம். இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டபோது, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தர்மமாக அளித்து விடுகிறேன்'' என்று சொன்னேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது'' என்று கூறினார்கள். 'கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன். இறைத்தூதர் அவர்களே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்'' என்று கூறினேன். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தது போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதி மொழியை நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து என்னுடைய இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் கால(மனை)த்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், 'திண்ணமாக, அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள் புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களின் மீதும் அன்சாரிகளின் மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான். (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாமல்) விவகாரம் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்.) பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கடியாகத் தோன்றி அவர்கள் உயிர் வாழ்வதும் மிகக் கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் உறுதிபட அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகிக்கொள்ளும் பொருட்டு அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 09: 117-119) வசனங்களை அருளினான். எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழி காட்டிய பின், தன் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை உண்மை பேசச் செய்து உபகாரம் புரிந்தது போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒருபோதும் கருதவில்லை. நான் அவர்களிடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்ன(வர்களான நயவஞ்சகர்)கள் அழிந்து போனது போன்று நானும் அழிந்து விட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேத அறிவிப்பு (வஹீ) அருளியபோது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான். 'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது, அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள்! ஏனென்றால், அவர்கள் அசுத்தமானவர்கள்; உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்த தீவினைகளுக்கு இதுவே கூலியாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்'' என்று (கடிந்த வண்ணம்) அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 09:95, 96) குறிப்பாக, எங்கள் மூவரின் விவகாரம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (பொய்) சத்தியம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களிடமும் உறுதிப்பிரமாணம் பெற்று அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். (எங்களின்) அந்த விவகாரத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிக்கும் வரையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் விவகாரத்தைத் தள்ளிப்போட்டு வந்தார்கள். இதனால் தான் (9வது அத்தியாயத்தின் 118-வது வசனத்தில்) அல்லாஹ் எங்களைக் குறித்து 'போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்' என்று (போரைக் குறிப்பிட்டுக்) கூறவில்லை. (மாறாக, 'பின்தங்கிவிட்ட மூவர்' என்று பொதுவாகவே குறிப்பிட்டுள்ளான்.) 'நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் பொய்யான சாக்குப் போக்குக் கூறியவர்களின் காரணங்களை உடனுக்குடன் ஏற்றது போன்றல்லாமல் எங்கள் விவகாரத்தை (உடனே தீர்க்காது) அல்லாஹ் தள்ளிப்போட்டு வந்தான்'' என்பதே அதன் கருத்தாகும்.

புஹாரி : 4418 அப்துல்லாஹ் பின் கஃப் (ரலி).

Saturday, November 08, 2008

மறுமை நாளின் அடையாளங்கள்.

1709. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' .

புஹாரி : 80 அனஸ் (ரலி).

1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; 'ஹர்ஜ்' பெருகிவிடும். 'ஹர்ஜ்' என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7063 அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி).

1711. நபி (ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெருகிவிடும்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'கொலை, கொலை'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 7061 அபூஹுரைரா (ரலி).

1712. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

புஹாரி : 100 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி).

Sunday, September 14, 2008

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு.

1596. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, 'நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்'' என்றார்கள்.

புஹாரி : 2844 அனஸ் (ரலி).

Friday, March 07, 2008

கஃப் பின் அஷ்ரஃப் என்ற யூத வெறியனைக் கொன்றது.

1179. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்'' என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி) எழுந்து, 'நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), 'நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், '(சரி) சொல்'' என்றார்கள். உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'இந்த மனிதர் (முஹம்மத் - ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்'' என்று (நபி - ஸல் அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, 'உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்'' என்றும் கூறினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்'' என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள், 'நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம்.


அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)'' என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, 'நீ எங்களுக்கு ஒரு வஸக்கு... அல்லது இரண்டு வஸக்கு... (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்'' என்று கூறினார்கள். அப்போது கஅப் இப்னு அஷ்ரஃப், 'சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'நீ எதை விரும்புகிறாய் (கேள்)?' என்று கூறினர். கஅப் இப்னு அஷ்ரஃப், 'உங்கள் பெண்களை என்னிடம் அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)'' என்று கூறினார்கள்'' (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு அவர்கள், 'எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, 'இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்' என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்'' என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.


(பிறகு) அவர்கள் தம்முடன் அபூ நாயிலா (ரலி) இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். - அபூ நாயிலா (ரலி), கஅப் இப்னு அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரராவார் - அவர்களைத் தன்னுடைய கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் இப்னு அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், 'இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறு யாருமல்ல) முஹம்மத் இப்னு மஸ்லமாவும் என்னுடைய (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்'' என்று பதிலளித்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) (தம் சகாக்களிடம்), 'கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்'' என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), 'இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை'' என்று கூறினார்கள். மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி), '(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?' என்று கேட்டார்கள். அவன், 'சரி (நுகர்ந்து பார்)'' என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். '(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் 'சரி (அனுமதிக்கிறேன்)'' என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, 'பிடியுங்கள்'' என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.

புஹாரி :4037 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

Thursday, March 06, 2008

அபூஜஹ்லைக் கொல்லுதல்.

1178. ''அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?' என்று நபி (ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே!'' என்று கேட்டார்கள். ''நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?' என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.

புஹாரி : 3962 அனஸ் (ரலி).

Monday, March 03, 2008

இறைத்தூதர் கரத்தால் கொல்லப்பட்டவன் பற்றி...

1171. (முன் வாய்ப்பற்களில், கீழ்வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி 'நபியை (இப்படிச்) செய்துவிட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது'' என்று கூறினார்கள். (மேலும், 'இறைவழியில் (அறப்போரில்) இறைத்தூதர் தம் கரத்தால் எவனைக் கொன்று விடுவார்களோ அவன் மீது(ம்) அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4073 அபூஹுரைரா (ரலி).

Friday, January 18, 2008

ஒருவரை மற்றவர் வெட்டிக்கொண்டு மரணித்தல் தடுக்கப்பட்டது.

1094. ''வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள 'முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது துல்ஹஜ் இல்லையா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'ஆம்'' என்றோம். (பிறகு,) 'இது எந்த நகரம்?' எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது (புனிதமிக்க) நகரமல்லவா? எனக் கேட்க, நாங்கள், 'ஆம்'' என்றோம். மேலும், 'இது எந்த நாள்?' என்று கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?' எனக் கேட்க, நாங்கள், 'ஆம்'' என்றோம். (பிறகு,) 'உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் - உங்கள் மானமும் - உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்தீர்ப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள். இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம். -இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன் (ரஹ்) இதை அறிவிக்கும்போது, 'முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை கூறினார்கள்'' என்று கூறுவார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள், 'நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?' என்று இரண்டு முறை கேட்டார்கள்.

புஹாரி :4406 அபூபக்ரா (ரலி).

Thursday, January 17, 2008

மறுமையில் முதலில் தீர்ப்பு.

1093. மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1093 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி).

Wednesday, January 16, 2008

கொலையை இப்புவியில் துவங்கியவன்.

1092. (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம் (அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3335 அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி).

Monday, January 14, 2008

ஒரு முஸ்லீமைக் கொல்ல 3 காரணங்கள்.

1091. 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.

(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது.

புஹாரி :6878 இப்னு மஸ்ஊத் (ரலி).