Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts

Thursday, January 15, 2009

இறை வேதனைக்கு பயப்படுதல்

1876. ''இறைவனால் தண்டிக்கப்பட்ட இந்த (ஸமூத் கூட்டத்தினரின்) இடத்திற்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம்! நீங்கள் அழுதவர்களாக இல்லையென்றால் அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள்! அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 433 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1877. மக்கள் (தபூக் போரின்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஸமூத் கூட்டத்தார் வசித்த பூமியான 'ஹிஜ்ர்' என்னும் பகுதியில் தங்கினார்கள். அதன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து அதனால் மாவு பிசைந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பகுதியின் கிணற்றிலிருந்து அவர்கள் இறைத்த தண்ணீரைக் கொட்டி விடும்படியும் (அதனால் பிசைந்த) அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டு விடும்படியும் கட்டளையிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் - அலை- அவர்களின்) ஒட்டகம் (தண்ணீர் குடிப்பதற்காக) எந்தக் கிணற்றிற்கு வந்து கொண்டிருந்தோ அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ளும் படியும் உத்திரவிட்டார்கள்.

புஹாரி : 3379 இப்னு உமர் (ரலி).

Tuesday, January 13, 2009

பனூ இஸ்ராயீல்கள் மூவரின் கதை.

1868. பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்க அவர், 'நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஒட்டகம் தான் (என்றோ) அல்லது மாடு தான். (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)'' என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், 'இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப்போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், 'எச்செல்வம் உனக்கு விருப்பமானது?' என்று கேட்டார். அவர், 'மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்'' என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, 'இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிவிட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், 'உனக்கு எச்செல்வம் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும்(ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, 'நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய் விட்டது) இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்'' என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், '(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)'' என்றார். உடனே அவ்வானவர், 'உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?' என்று கேட்டதற்கு அவன், '(இல்லையே நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்'' என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், 'நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், 'நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, 'நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான என் வாழ்வதாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்'' என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், 'நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீதுகோபமுற்றான்'' என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3464 அபூ ஹுரைரா (ரலி).

Thursday, December 18, 2008

சுவன வாசிகளிடம் அல்லாஹ் ஒருபோதும் கோபிப்பதில்லை.

1802. அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி சொர்க்கவாசிகளே! என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திருப்தி அடைந்தீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகியவற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா? என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் அதை விடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப் போகிறேன் என்பான். அவர்கள் அதிபதியே! அதை விடச் சிறந்தது எது? என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் உங்கள் மீது என் திருப்தியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்பட மாட்டேன் என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6549 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

Thursday, November 27, 2008

அல்லாஹ்வின் இரக்கம் அவனின் கோபத்தை மிகைத்தது.

1749. அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய ('லவ்ஹுல் மஹ்ஃபூழ்' என்னும்) பதிவேட்டில் - அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது - 'என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது'' என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3194 அபூஹுரைரா (ரலி).

1750. அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்து விடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6000 அபூஹுரைரா (ரலி).

1751. (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!'' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று கூறினார்கள்.

புஹாரி :5999 உமர் (ரலி).

1752. (முந்தைய காலத்தில்) நன்மை எதையும் அறவே செய்யாத ஒருவர் 'நான் இறந்துவிட்டால் என்னை எரித்து, அந்தச் சாம்பலில் பாதியைக் கரையிலும் பாதியைக் கடலிலும் தூவிவிடுங்கள். ஏனெனில், இறைவன் மீதாணையாக! என் மீது இறைவனுக்கு சக்தி ஏற்பட்டால், உலக மக்களில் யாவரும் அளிக்காத வேதனையை அவன் எனக்கு அளித்து விடுவான்'' என்று சொல்லி(விட்டு இறந்து) விட்டார். (அவ்வாறே அவர் உடல் எரிக்கப்பட்டு சாம்பல் தூவப்பட்டது.) பிறகு, அல்லாஹ் கடலுக்கு ஆணையிட்டு அதிலிருந்த அவரின் உடலை ஒன்று திரட்டினான். தரைக்கு ஆணையிட்டு அதிலிருந்தும் அவரின் உடலை ஒன்று திரட்டினான். பிறகு, 'நீ எதற்காக இப்படிச் செய்தாய்?' என்று கேட்டான். அதற்கு அவர், 'உன் அச்சத்தினால் தான். நீ நன்கறிந்தவன்'' என்று சொல்ல, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7506 அபூஹுரைரா (ரலி).

1753. உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒருவர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்டபோது தன் மகன்களிடம், 'உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்'' என்று கேட்டார். அவர்கள், 'சிறந்த தந்தையாக இருந்தீர்கள்'' என்று பதில் கூறினர். அதற்கு அவர், 'நான் நற்செயல் எதையும் செய்யவேயில்லை. எனவே, நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னைப் பொடிப் பொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள்'' என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை (அவரின் உடல் அணுக்களை) அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) 'இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது?' என்று கேட்டான். அவர், 'உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் (இப்படி உத்திரவிட என்னைத் தூண்டியது)'' என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அவன் அரவணைத்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3478 அபூ ஸயீத் (ரலி).

Wednesday, October 22, 2008

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்.

1676. மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6114 அபூ ஹுரைரா (ரலி).

1677. நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்'' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி (ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்'' என்றார்.

புஹாரி :6115 ஸூலைமான் பின் ஸூரத் (ரலி).

Tuesday, October 14, 2008

விசுவாசியின் பிணி பாவ பரிகாரமே.

1661. இறைத்தூதர் (ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.

புஹாரி :5646 ஆயிஷா (ரலி).

1662. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்'' என்று கூறினார்கள். நான், '(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5648 இப்னு மஸ்ஊது (ரலி).

1663. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5640 ஆயிஷா (ரலி) .

1664. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5641 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அபூஹுரைரா (ரலி) .

1665. இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

புஹாரி :5652.அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்).

Monday, October 13, 2008

சந்தேகித்தல் உளவு பார்த்தல் பற்றி...

1660. (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6066 அபூ ஹுரைரா (ரலி).

Sunday, October 12, 2008

பொறாமை கொள்ளாதே.

1658. ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6065 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1659. ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர் தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6077 அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி).

Saturday, August 23, 2008

முஸ்லீம்களில் பெருங்குற்றம் புரிந்தவர்.

1521. 'தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி ஒருவர் கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவராவார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7289 ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).

1522. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், 'நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்'' என்று குறிப்பிட்டார்கள்.அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒருவர், 'என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், 'இன்னார்'' என்று கூறினார்கள். அப்போதுதான் 'இறைநம்பிக்கையாளர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 05:101 வது) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி:4621 அனஸ் (ரலி).

1523. நபித்தோழர்கள் (சிலர்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், (அவர்களுக்குப் பிடிக்காத) சில விஷயங்கள் குறித்து வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதேறி, '(நான் அறிகிறவற்றை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்.) இன்று நீங்கள் என்னிடம் எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி நான் உங்களுக்குத் தெளிவுபடுத்தாமல் இருக்கப் போவதில்லை'' என்றார்கள். அப்போது நான் வலப் பக்கமும் இடப் பக்கமும் திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டபோது அங்கிருந்த ஒவ்வொரு வரும் தம்தம் ஆடையால் தம் தலைகளைச் சுற்றிப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்தார்கள். இந்நிலையில் ஒருவர் தம் தந்தையல்லாத மற்றொருவரின் மகன் என தாம் அழைக்கப்படுவது குறித்துச் சிலருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை யார்?' என்று கேட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'ஹுதாஃபா (தாம் உன் தந்தை)'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்களின் சாந்த முகத்தில் கோபத்தின் ரேகை படர்வதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராகவும் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். சோதனைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்'' என்று கூறலானார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'நன்மையிலும் தீமையிலும் இன்றைய தினத்தைப் போன்று எந்த நாளையும் நான் ஒருபோதும் கண்டதில்லை. எனக்கு சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்டன. அவற்றை (மிஹ்ராபின்) இந்த சுவருக்கு அப்பால் கண்டேன்'' என்றார்கள்.

புஹாரி :6362 அனஸ் (ரலி).

1524. 'நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களிடம் அது பற்றி அதிகமாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டபோது கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் 'நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்' எனக் கூறினார்கள். அப்போது ஒருவர். 'யார் என்னுடைய தந்தை?' என்று கேட்டதற்குவர்கள் 'ஹுதாபாதான் உம்முடைய தந்தை' என்றார்கள். உடனே வேறொருவர் எழுந்து 'என்னுடைய தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க 'உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம் என்பவர் தாம்' என்றார்கள். (இக் கேள்விகளின் மூலம்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மெய்யாகவே மகத்துவமும், கண்ணியமும் மிக்க இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்' என்றார்கள்''.

புஹாரி : 92 அபூ மூஸா (ரலி).

1525. (எனக்குப் பின்) உங்களிடையே ஒரு காலம் வரும். அப்போது என்னைக் காண்பது உங்கள் மனைவி மக்கள், செல்வம் ஆகியன (உங்களுடன்) இருப்பதை விடவும் உங்களுக்கு மிகப் பிரியமானதாயிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 3589 அபூஹூரைரா (ரலி).

Thursday, August 21, 2008

அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடிய அண்ணலார்.

1518. நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, 'சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களை விட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்'' என்றார்கள்.

புஹாரி :6101 ஆயிஷா (ரலி).

Monday, March 03, 2008

இறைத்தூதர் கரத்தால் கொல்லப்பட்டவன் பற்றி...

1171. (முன் வாய்ப்பற்களில், கீழ்வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி 'நபியை (இப்படிச்) செய்துவிட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது'' என்று கூறினார்கள். (மேலும், 'இறைவழியில் (அறப்போரில்) இறைத்தூதர் தம் கரத்தால் எவனைக் கொன்று விடுவார்களோ அவன் மீது(ம்) அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4073 அபூஹுரைரா (ரலி).

Sunday, February 03, 2008

கோபத்திலிருக்கும் போது தீர்ப்பளிக்காதே.

1119. (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் - ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். 'நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்கவேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்'' (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).

புஹாரி :7158 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ரா (ரலி).