Showing posts with label செல்வம். Show all posts
Showing posts with label செல்வம். Show all posts

Tuesday, January 13, 2009

பனூ இஸ்ராயீல்கள் மூவரின் கதை.

1868. பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்க அவர், 'நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஒட்டகம் தான் (என்றோ) அல்லது மாடு தான். (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)'' என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், 'இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப்போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், 'எச்செல்வம் உனக்கு விருப்பமானது?' என்று கேட்டார். அவர், 'மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்'' என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, 'இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்'' என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிவிட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், 'உனக்கு எச்செல்வம் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும்(ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, 'நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய் விட்டது) இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்'' என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், '(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)'' என்றார். உடனே அவ்வானவர், 'உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?' என்று கேட்டதற்கு அவன், '(இல்லையே நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்'' என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், 'நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், 'நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, 'நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான என் வாழ்வதாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்'' என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், 'நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்'' என்று கூறினார். உடனே அவ்வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீதுகோபமுற்றான்'' என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3464 அபூ ஹுரைரா (ரலி).

Sunday, December 07, 2008

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.

1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப்பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து,'அபுல்காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப் படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்''.

புஹாரி : 125 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).

1781. நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்) தரமாட்டேன்!''என்றான். நான் 'அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!' எனக் கூறினேன். அதற்கவன் 'நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!'' என்றான். அப்போதுதான் 'நம்முடைய வசனங்களை நிராகரித்து, '(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!' என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) கருணையாளனான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?' என்ற (திருக்குர்ஆன் 19:77, 78) இறைவசனம் அருளப்பட்டது!''.

புஹாரி :2091 கப்பாப் (ரலி).

Wednesday, September 24, 2008

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் சிறப்பு.

1612. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், 'அனஸ் தங்களின் சேவகர், (அவருக்காகப் பிரார்த்தியுங்கள்)'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கிடுவாயாக! அவருக்கு நீ வழங்கியவற்றில் சுபிட்சத்தை ஏற்படுத்துவாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.

புஹாரி :6380 உம்மு சுலைம் (ரலி).

1613. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்புக்குப் பிறகும் கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.

புஹாரி : 6289 அனஸ் (ரலி).

Monday, April 07, 2008

அல்லாஹ்வின் வாக்கு மேலோங்க போரிடுபவரின் சிறப்பு.

1243. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'ஒருவர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகிறார்; மற்றொரு மனிதர் புகழுக்காகப் போரிடுகிறார்; இன்னொரு மனிதர் தன் வீரத்தைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகிறார். (இவர்களில்) இறைவழியில் போரிடுபவர் எவர்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், '(இவர்களில் எவருமே இறைவழியில் போரிடுபவராக இல்லை.) அல்லாஹ்வின் (ஏகத்துவ) வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 2810 அபூமூஸா (ரலி).

1244. 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும் சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?' என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, 'அல்லாஹ்வின் கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்' என்று கூறினார்கள்.

புஹாரி : 123 அபூ மூஸா (ரலி).

Wednesday, April 02, 2008

மக்களில் சிறந்தவர் யார்?

1237. ''இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?' என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)'' என்று பதிலளித்தார்கள். மக்கள், 'பிறகு யார்?' என்று கேட்டார்கள். 'மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

புஹாரி : 2786 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

Tuesday, April 01, 2008

அல்லாஹ்வின் பாதையில் சிறிது நேரம் போரிடுவதின் சிறப்பு.

1234. இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2792 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1235. இறைவழியில் காலையிலும் மாலையிலும் சிறிதுநேரம் போர் புரியச் செல்வது உலகத்தை விடவும் அதிலுள்ள பொருட்களை விடவும் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2794 ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி).

1236. சொர்க்கத்தில் ஒரு வில்லுக்குச் சமமான (ஒரு முழம்) அளவு (இடம் கிடைப்பது) சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும். மேலும், இறைவழியில் ஒரு காலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2793 அபூஹுரைரா (ரலி).

Sunday, March 30, 2008

அறப்போருக்குச் செல்வதின் சிறப்பு.

1229. போரிடுவதற்குப் புறப்பட்டுச் சென்றவரைக் கூலியைப் பெற்றவராகவோ, போர் ஆதாயங்களைப் பெற்றவராகவோ திரும்பக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை அல்லது அவரைச் சொர்க்கத்தில் சேர்க்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான். என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமத்தைக் கொடுத்து விடுவேனோ என்று (அச்சம்) மட்டும் இல்லையானால் (நான்) அனுப்பும் எந்த இராணுவத்திற்குப் பின்னரும் (நானும் போகாமல்) உட்கார்ந்திருக்கமாட்டேன். நிச்சயமாக நான் இறைவழியில் கொல்லப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு மீண்டும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''


புஹாரி 36 அபூஹுரைரா (ரலி).

1230. இறைவழியில் போரிடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவன் பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் புகுத்துவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை அவரின் வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வர அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


புஹாரி : 3123 அபூஹுரைரா (ரலி).

1231. 'இறைவழியில் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு காயமும் ஈட்டியால் குத்தப்படும்போது இருந்தது போல் மறுமை நாளில் அப்படியே இருக்கும். அதிலிருந்து இரத்தம் பீறிட்டு ஒடும். ஆனால் அதன் நிறம் இரத்தத்தினுடைய நிறமாக இருந்தாலும் அதன் வாடை கஸ்தூரி வாடையாகவே இருக்கும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.


புஹாரி : 237 அபூஹுரைரா (ரலி).

Saturday, March 29, 2008

குதிரைகளின் நெற்றியில்....

1226. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரைக்கும் நன்மை உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2849 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1227. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுதலில் கிடைக்கும் நன்மையும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2852 உர்வா அல் பாரிகீ (ரலி)

1228. (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2851 அனஸ் (ரலி).

Tuesday, March 18, 2008

போர் வெற்றிப் பொருளை திருடுதல்.

1201. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, 'மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், 'உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்'' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்), அப்போது நான், 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன். அல்லது அசைகிற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து வந்து 'இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்' என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், 'என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்' என்று கூறி விடுவேன்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

புஹாரி 3073 அபூஹுரைரா (ரலி).

Thursday, January 31, 2008

கஞ்சனின் மனைவி கணவனின் பொருளைத் திருடலாம்.

1115. (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா (ரலி) (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் 'நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :5359 ஆயிஷா (ரலி).

1116. ஹிந்த் பின்த் உத்பா, (நபி - ஸல் - அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்த பொழுது) பூமியின் முழுதும் உள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட) பிறகு இன்று பூமியின் முழுதும் உள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (இந்த உன்னுடைய விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)'' என்று பதிலளித்தார்கள். ஹிந்த் பின்த் உத்பா, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் மிகவும் கருமியான ஒருவர். எனவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நியாயமான அளவிற்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :3825 ஆயிஷா (ரலி).