Showing posts with label அறியாமை. Show all posts
Showing posts with label அறியாமை. Show all posts

Sunday, January 04, 2009

குழப்பங்கள் கிழக்கிலிருந்து தோன்றுதல். குழப்பங்களின் நிலைகளில் சில.

1840. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிழக்கை நோக்கியபடி, அறிந்து கொள்ளுங்கள்! குழப்பம், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இந்த இடத்திலிருந்து தோன்றும்'' என்று சொல்ல கேட்டேன்.

புஹாரி : 7093 இப்னு உமர் (ரலி).

1841. தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் 'துல்கலஸா' கடவுள் சிலையைச் சுற்றி அசையாதவரை மறுமை நாள் வராது. 'துல்கலஸா' என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டு வந்த ஒரு சிலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7116 அபூஹுரைரா (ரலி).

1842. ஒருவர் மற்றொரு மனிதரின் மண்ணறையை (கப்ரை)க் கடந்து செல்லும்போது, 'அந்தோ! நான் இவரின் இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) சொல்லும் காலம் வராதவரை மறுமை நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7115 அபூஹுரைரா (ரலி).

1843. ''அபிஷீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 1596 அபூஹுரைரா (ரலி).

1844. கஹ்தான் குலத்திலிருந்து ஒருவர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3517 அபூஹுரைரா (ரலி).

1845. சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான (சப்பை) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதிநாள் ஏற்படாது. அவர்களின் முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும். முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாதவரை இறுதி நாள் ஏற்படாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2928 அபூஹுரைரா (ரலி).

1846. (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்தக் குறைஷிக் குலத்தவர்(களில் சிலர்) மக்களை அழித்து விடுவார்கள்'' என்று கூறினார்கள். மக்கள், '(அப்படி ஒரு நிலை வந்தால்) நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அவர்களிடமிருந்து மக்கள் விலகி வாழ்ந்தால் நன்றாயிருக்கும்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3604 அபூஹூரைரா (ரலி).

1847. (தற்போதைய பாரசீகப் பேரரசன்) குஸ்ரூ அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு குஸ்ரூ (வமிச அரசன்) எவனும் இருக்க மாட்டான். (தற்போதைய ரோமப் பேரரசன்) சீசர் நிச்சயம் அழிந்து விடுவான். அவனுக்குப் பிறகு சீசர் (வமிச அரசன்) எவனும் இருக்கமாட்டான். அவ்விருவரின் கருவூலங்களும் இறைவழியில் போரிடுவோரிடையே பங்கிடப்பட்டு விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3027 அபூஹுரைரா (ரலி).

1848. (தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா அழிந்துவிட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். (தற்போதைய ரோமப் பேரரசர்) சீசர் அழிந்துவிட்டால் அதன் பிறகு சீசர் எவரும் இருக்க மாட்டார். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் அவ்விருவரின் கருவூலங்களையும் இறைவழியில் செலவழிப்பீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3121 ஜாபிர் இப்னு சமுரா (ரலி).

1849. யூதர்கள் உங்களுடன் போர் புரிவார்கள். அவர்களின் மீது (போரில்) உங்களுக்கு வெற்றியளிக்கப்பட்டு ஆதிக்கம் வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால், ஒரு கல்கூட, முஸ்லிமே! இதோ, என் பின்னால் யூதன் ஒருவன் (ஒளிந்து கொண்டு) இருக்கிறான். அவனைக் கொன்றுவிடு'' என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3593 இப்னு உமர் (ரலி).

1850. இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை உலக முடிவு நாள் வராது. அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும். ஆனால், அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும். பெரும் பொய்யர்களான 'தஜ்ஜால்கள்' ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாதவரை இறுதிநாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

புஹாரி : 3609 அபூஹுரைரா (ரலி).

Sunday, December 07, 2008

யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.

1780. அவர்கள் மதீனாவில் மக்கள் சஞ்சாரம் இல்லாத ஒரு பாழ் வெளியில் சென்றபோது அவர்களுடன் நானும் சென்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் குழு ஒன்றைஅவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'ரூஹை (உயிர்) பற்றி அவரிடம் கேளுங்கள்' என்றார். அவர்களின் இன்னொருவர் 'அவரிடம் அதைப் பற்றிக் கேட்காதீர்கள்; உங்களுக்குப் பிடிக்காத எதையும் அவர் சொல்லப் போவதில்லை என்றார். அவர்களில் மற்றொருவரோ, '(இல்லை!) இறைவன் மீது ஆணையாக நாம் (அதைப்பற்றி) அவரிடம் கேட்டே விடுவோம்' என்றார். (முடிவில்) அவர்களில் ஒருவர் எழுந்து,'அபுல்காஸிம் அவர்களே! ரூஹு என்றால் என்ன? என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். 'அவர்களுக்கு இறைவனிடமிருந்து இப்போது செய்தி அறிவிக்கப்படுகிறது' என்று என்னுடைய மனதிற்குள் நினைத்தபடி நான் நின்று கொண்டிருந்தேன். (இறைச் செய்தி வரும்போது ஏற்படும் சிரமம் விலகி) அவர்கள் தெளிவடைந்தபோது '(நபியே!) உம்மிடம் அவர்கள் ரூஹைப் பற்றிக் கேட்டார்கள். ரூஹு என்பது என் இறைவனுடைய கட்டளையைச் சார்ந்ததாகும். ஞானத்தில் (மிகக்) குறைந்த அளவே தவிர அவர்கள் கொடுக்கப் படவில்லை என்று நீர் (பதில்) கூறும்!' (திருக்குர்ஆன் 17:85) என்று (திருக்குர்ஆன் வசனத்தை) கூறினார்கள்''.

புஹாரி : 125 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி).

1781. நான் அறியாமைக் காலத்தில் கருமானாக இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவன் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதை வாங்குவதற்காக அவனிடம் நான் சென்றேன். அப்போது அவன், 'நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை (உன்னிடம் வாங்கிய கடனை) உனக்குத் (திருப்பித்) தரமாட்டேன்!''என்றான். நான் 'அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, திரும்ப நீ எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்!' எனக் கூறினேன். அதற்கவன் 'நான் மரணித்து எழுப்பப்படும்வரை என்னை விட்டுவிடு! அப்போது பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் எனக்கு வழங்கப்படும்; அப்போது உன் கடனை நான் தீர்த்து விடுகிறேன்!'' என்றான். அப்போதுதான் 'நம்முடைய வசனங்களை நிராகரித்து, '(மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக பொருட் செல்வமும் குழந்தைச் செல்வமும் வழங்கப்படும்!' என்று கூறியவனை (நபியே!) நீர் பார்த்தீரா? (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் முன்கூட்டியே தெரிந்து கொண்டானா? அல்லது (இப்படியெல்லாம் தனக்கு வழங்கப்பட வேண்டுமென்று) கருணையாளனான இறைவனிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?' என்ற (திருக்குர்ஆன் 19:77, 78) இறைவசனம் அருளப்பட்டது!''.

புஹாரி :2091 கப்பாப் (ரலி).

Saturday, November 08, 2008

மறுமை நாளின் அடையாளங்கள்.

1709. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' .

புஹாரி : 80 அனஸ் (ரலி).

1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; 'ஹர்ஜ்' பெருகிவிடும். 'ஹர்ஜ்' என்பது கொலையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 7063 அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி).

1711. நபி (ஸல்) அவர்கள் '(மறுமை நாள் நெருங்கும்போது) காலம் சுருங்கிவிடும்; செயல்பாடு (அமல்) குறைந்து போய்விடும்; மக்களின் உள்ளங்களில் (பேராசையின் விளைவாக) கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டு விடும். குழப்பங்கள் தோன்றும். 'ஹர்ஜ்' பெருகிவிடும்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன (ஹர்ஜ்)?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'கொலை, கொலை'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 7061 அபூஹுரைரா (ரலி).

1712. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கி விட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''.

புஹாரி : 100 அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி).

Thursday, October 16, 2008

அநீதி இழைப்பவனுக்கும் உதவி புரி.

1669. நாங்கள் 'ஒரு போரில்' அல்லது 'ஒரு படையில்' இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி 'அன்சாரிகளே! (உதவுங்கள்.)'' என்று கூறினார். அந்த முஹாஜிர் 'முஹாஜிர்களே! உதவுங்கள்!'' என்று கூறினார். இந்தப் பேச்சை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செவியேற்று, 'இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இறைத்தூதர் அவர்களே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார்'' என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை'' என்று கூறினார்கள்.அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இதைக் கேட்டுவிட்டு 'இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்'' என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர் (ரலி) எழுந்து, 'என்னை விடுங்கள் இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவரை விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது'' என்று கூறினார்கள். மக்காவாசிக(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளை விட அதிகமானார்கள்.

புஹாரி :4905 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

Thursday, August 28, 2008

நபி யூஸூஃப் (அலை)அவர்களின் சிறப்பு.

1538. (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், 'மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்'' என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், 'நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை'' என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!'' என்று பதிலளித்தார்கள் அதற்கு மக்கள், நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை'' என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், 'அரபுகளின் (பரம்பரையான) கரங்களைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3353 அபூ ஹுரைரா(ரலி).

Saturday, March 22, 2008

குழப்ப காலத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல்.

1211. மக்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ் (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'ஆம் (இருக்கிறது)'' என்று பதிலளித்தார்கள். நான், 'இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், 'அந்தக் கலங்கலான நிலை என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்'' என்று பதிலளித்தார்கள். நான், 'அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். நான், 'நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்'' என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3606 ஹூதைஃபா அல் யமான் (ரலி).

1212. எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், ஆட்சியாள(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' .

புஹாரி : 7053 இப்னு அப்பாஸ் (ரலி)