Showing posts with label அநீதி. Show all posts
Showing posts with label அநீதி. Show all posts

Thursday, October 16, 2008

அநீதி இழைப்பவனுக்கும் உதவி புரி.

1669. நாங்கள் 'ஒரு போரில்' அல்லது 'ஒரு படையில்' இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி 'அன்சாரிகளே! (உதவுங்கள்.)'' என்று கூறினார். அந்த முஹாஜிர் 'முஹாஜிர்களே! உதவுங்கள்!'' என்று கூறினார். இந்தப் பேச்சை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செவியேற்று, 'இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இறைத்தூதர் அவர்களே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார்'' என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை'' என்று கூறினார்கள்.அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இதைக் கேட்டுவிட்டு 'இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்'' என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர் (ரலி) எழுந்து, 'என்னை விடுங்கள் இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவரை விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது'' என்று கூறினார்கள். மக்காவாசிக(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளை விட அதிகமானார்கள்.

புஹாரி :4905 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

Wednesday, October 15, 2008

அநீதி தவிர்.

1666. அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2447 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1667. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2442 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1668. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்'' என்று கூறிவிட்டு, பிறகு, 'மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 11:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

புஹாரி :4686 அபூமூஸா (ரலி).