Showing posts with label துன்பம். Show all posts
Showing posts with label துன்பம். Show all posts

Tuesday, December 09, 2008

புகை.

1783. (குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தபோது நபி (ஸல்) அவர்கள், 'யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படட்டும்' எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவிற்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் ஒருவர் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து) களைப்படைந்து தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அப்போது அல்லாஹ், '(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். அது மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அது துன்புறுத்தும் வேதனை ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 44:10, 11ஆகிய) வசனங்களை அருளினான். அப்போது ஒருவர் (அபூசுஃப்யான்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! முளர் குலத்தாருக்கு மழை வேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் அழிவுக்குள்ளாகி விட்டார்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'முளர் குலத்தினருக்கா? நீங்கள் துணிவு மிக்கவர் தாம்'' என்று கூறிவிட்டு, (அவர்களுக்காக) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே, அவர்களுக்கு வானம் பொழிந்தது. அப்போது, 'மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 44:15 வது) வசனம் அருளப்பட்டது. (பிறகு அவர்களுக்குப் பஞ்சம் விலகி,) வளமான வாழ்வு ஏற்பட்டபோது, பழைய (இணைவைக்கும்) நிலைக்கே திரும்பிச் சென்றனர். அப்போது வல்லவனும் மாண்பாளனுமாகிய அல்லாஹ், 'மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்'' எனும் (திருக்குர்ஆன்44:16 வது) வசனத்தை அருளினான். அந்நாள் பத்ருப்போர் நாளாகும்.

புஹாரி : 4821 இப்னு மஸ்ஊத் (ரலி).

Monday, December 08, 2008

நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்கும் போது வேதனை இறங்காது.

1782. (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் 'இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!'' என்று சொன்னான். அப்போது '(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆகமுடியும்! அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்'' எனும் வசனங்கள் (திருக்குர்ஆன் 08:33, 34) அருளப்பெற்றன.

புஹாரி : 4648 அனஸ் (ரலி).

Tuesday, November 25, 2008

குகை வாசிகள் மூவர் கதை.

1745. ''(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், 'நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றனர். அவர்களில் ஒருவர், 'இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது. மற்றொருவர், 'இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை விட்டு நீக்கு' எனக் கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான். மற்றொருவர், 'இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு' எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2215 இப்னு உமர் (ரலி).

Wednesday, November 12, 2008

நேர்ந்த துன்பத்துக்காக மரணத்தை ஆசிக்காதே.

1717. உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால், 'இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!'' என்று கேட்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6351 அனஸ் (ரலி).

1718. நான் கப்பாப் இப்னு அரத் (ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றேன். அவர்கள் (கடும் வயிற்று வலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத்) தம் வயிற்றில் ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது 'மரணத்தை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால் நான் மரணத்தை வேண்டிப் பிரார்த்தித்திருப்பேன்'' என்று அவர்கள் கூறியதைச் செவியேற்றேன்.

புஹாரி : கைஸ் (ரலி).

Sunday, October 26, 2008

தமக்குத் துன்பம் தராத விலங்குகளைத் துன்புறுத்துதல்.

1683. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை. அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை. அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :3482 இப்னு உமர் (ரலி).

Wednesday, October 15, 2008

அநீதி தவிர்.

1666. அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி தரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2447 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1667. ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :2442 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

1668. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அக்கிரமக்காரனுக்கு விட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்'' என்று கூறிவிட்டு, பிறகு, 'மேலும் அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 11:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

புஹாரி :4686 அபூமூஸா (ரலி).

Tuesday, October 14, 2008

விசுவாசியின் பிணி பாவ பரிகாரமே.

1661. இறைத்தூதர் (ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை.

புஹாரி :5646 ஆயிஷா (ரலி).

1662. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்'' என்று கூறினார்கள். நான், '(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணம்?' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் (உதிரச் செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை'' என்று கூறினார்கள்.

புஹாரி : 5648 இப்னு மஸ்ஊது (ரலி).

1663. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5640 ஆயிஷா (ரலி) .

1664. ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5641 அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அபூஹுரைரா (ரலி) .

1665. இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்'' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

புஹாரி :5652.அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்).

Monday, September 01, 2008

உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்

1554. நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். அப்போது ஒருவர் வந்து (வாயில் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்காகத் திறவுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் அவருக்காக (வாயிற் கதவைத்) திறந்தேன். அவர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நற்செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், 'அவருக்குத் திறந்து விடுங்கள்; அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று கூறினார்கள். அவருக்கு நான் கதவைத் திறந்து விட்டேன். அம்மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியைத் தெரிவித்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு ஒருவர் கதவைத் திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். (நானும் சென்று கதவைத் திறக்க) அம்மனிதர் உஸ்மான் (ரலி) அவர்களாக இருந்தார். அவர்களிடம் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, '(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (ஆற்றலைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3693 அபூமூஸா (ரலி).

1555. நான் என் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்பட்டேன். (அப்போது எனக்குள்), 'நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே என்னுடைய இந்த நாள் (முழுவதும்) இருப்பேன்'' என்று சொல்லிக் கொண்டேன். நான் பள்ளி வாசலுக்கு வந்து நபி (ஸல்) அவர்களைக் குறித்துக் கேட்டேன். அப்போது மக்கள், 'நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு இந்தப் பக்கம் போனார்கள்'' என்று கூறினர். நான் (நபி (ஸல்) - அவர்கள் சென்ற திசையில்) அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களைப் பற்றி (இந்த வழியாகச் சென்றார்களா என்று) விசாரித்தபடி சென்றேன். இறுதியில் (குபாவுக்கு அருகிலுள்ள ஒரு தோட்டமான) பிஃரு அரீஸுக்குள் சென்று அதன் வாசலில் அமர்ந்தேன். அதன் வாசல் பேரீச்ச மட்டையால் தயாரிக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் (இயற்கைக்) கடனை நிறைவேற்றிக் கொண்டு உளூச் செய்தார்கள். உடனே, நான் அவர்களிடம் எழுந்து சென்றேன். அவர்கள் (பிஃரு) அரீஸ் (என்னும் அத்தோட்டத்தில் உள்ள) கிணற்றின் மீது அதன் சுற்றுச் சுவருக்கு நடுவே தம் கால்கள் இரண்டையும் திறந்து கிணற்றுக்குள் தொங்க விட்டப்படி அமர்ந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டுத் திரும்பிச்சென்று வாசலருகே அமர்ந்து கொண்டேன். நான் (எனக்குள்), 'இன்று நான் அல்லாஹ்வின் தூதருடைய வாயில் காவலனாக இருப்பேன்'' என்று சொல்லிக் கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) வந்து கதவைத் தள்ளினார்கள். நான், 'யார் அது?' என்று கேட்டேன். அவர்கள், '(நானே) அபூபக்ர் (வந்துள்ளேன்)'' என்று பதிலளித்தார்கள். உடனே நான், 'சற்றுப் பொறுங்கள்'' என்று சொல்லிவிட்டு (நபி - ஸல் - அவர்களிடம்) சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இதோ அபூபக்ர் அவர்கள் (வந்து) தங்களிடம் உள்ளே வர அனுமதி கேட்கிறார்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவர் சொர்க்கவாசி என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் அபூபக்ர் அவர்களை நோக்கிச் சென்ற அவர்களிடம், 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று நற்செய்தி அறிவித்தார்கள்'' என்று சொன்னேன். உடனே, அபூபக்ர் அவர்கள் உள்ளே வந்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வலப்பக்கத்தில் அவர்களுடன் (கிணற்றின்) சுற்றுச் சுவரில் அமர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் செய்தது போன்றே தம் கால்கள் இரண்டையும் கிணற்றில் தொங்கவிட்டுக் கொண்டு கால்களைத் திறந்து வைத்தார்கள். பிறகு, நான் திரும்பிச் சென்று (வாசலில்) அமர்ந்து கொண்டேன். நான் (முன்பே) என் சகோதர(ர் ஒருவ)ரை உளூச் செய்து என்னுடன் சேர்ந்து கொள்ளும்படி சொல்லி, விட்டு வந்திருந்தேன். எனவே (எனக்குள்), 'அல்லாஹ் இன்னாருக்கு நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு), வரச் செய்வான்'' என்று சொல்லிக் கொண்டேன்.'' இன்னார்' என்று அபூ மூஸா அல் அஷ் அரீ (ரலி) கூறியது. தம் சகோதரரைக் கருத்தில் கொண்டே'' என்று அறிவிப்பாளர் ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) கூறினார்: அப்போது ஒருவர் கதவை அசைத்தார். நான், 'யார் அது?' என்று கேட்டேன். வந்தவர், '(நானே) உமர் இப்னு கத்தாப் (வந்துள்ளேன்) என்று சொன்னார். நான், 'கொஞ்சம் பொறுங்கள்'' என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் கூறி, 'இதோ, உமர் இப்னு கத்தாப் அவர்கள் வந்து தங்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள்'' என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவர் சொர்க்கவாசி என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் சென்று, 'உள்ளே வாருங்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சொர்க்கவாசி என்று உங்களுக்கு நற்செய்தி கூறுகிறார்கள்'' என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து கிணற்றின் சுற்றுச் சுவரில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இடப்பக்கம் அமர்ந்து தம் இரண்டு கால்களையும் கிணற்றுக்குள் தொங்கவிட்டார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று (வாசலருகே) அமர்ந்து கொண்டேன். 'அல்லாஹ் இன்னாருக்கு (என்சகோதரருக்கு) நன்மையை நாடியிருந்தால் அவரை (இங்கு) வரச்செய்வான் என்று (முன்போன்றே எனக்குள்) கூறிக் கொண்டேன். அப்போது ஒருவர் வந்து கதவை ஆட்டினார். நான்,'யார் அது?' என்று கேட்டேன். அவர், '(நானே) உஸ்மான் இப்னு அஃப்பான் (வந்திருக்கிறேன்)'' என்று பதிலளித்தார். உடனே, 'கொஞ்சம் பொறுங்கள்'' என்று சொல்லிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு உஸ்மான் அவர்கள் வந்திருக்கும் செய்தியை அறிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், 'அவருக்கு அனுமதி கொடுங்கள்.அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து அவருக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் உஸ்மான் அவர்களிடம் சென்று அவரிடம், 'உள்ளே வாருங்கள். உங்களுக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நற்செய்தி கூறினார்கள்'' என்று சொன்னேன். அவர்கள் உள்ளே வந்து (பார்த்த போது) சுற்றுச் சுவர் (ஒரு பக்கம்) நிரம்பி விட்டிருப்பதைக் கண்டார்கள். எனவே, மற்றொரு பக்கம் நபி (ஸல்)அவர்களுக்கு எதிரே அமர்ந்தார்கள். அறிவிப்பாளர் ஷரீக் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்:

ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்), 'நான் (நபி - ஸல் அவர்களும், அபூபக்ர் (ரலி ) அவர்களும், உமர் (ரலி) அவர்களும்) அடுத்தடுத்து அமர்ந்திருந்த இந்த நிலையும் (தற்போது) அவர்களின் கப்ருகள் (மண்ணறைகள்) அமைந்திருக்கும் நிலையைக் குறிப்பதாக விளக்கம் கண்டேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3674பூமூஸா அல் அஷ்அரி (ரலி).

Wednesday, June 11, 2008

சாலையில் தடை ஏற்படுத்தாதே.

1374. ''நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 2465 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

Saturday, March 08, 2008

கைபர் போர்.

1180. 'நபி (ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி (ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி (ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது 'அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாகி விடும்' என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி (ஸல்) அவர்களைப் பார்த்ததும், 'முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்' என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம்.

புஹாரி :371 அனஸ் (ரலி).

1181. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் இப்னு அக்வஃ (ரலி) அவர்களிடம், 'ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலதை(ப் பாடி) எங்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்களா?' என்று கூறினார். ஆமிர் (ரலி) கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள். 'இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம். (உன் கட்டளைகளில்) எதனை நாங்கள் கைவிட்டு விட்டோமோ அதற்காக எங்களை மன்னிப்பாயாக! நாங்கள் (போர்க் களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! (அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்து விடுவோம். எங்களிடம் மக்கள் அபயக்குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)'' என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடத் தொடங்கின.) அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'யார் இந்த ஒட்டகவோட்டி?' என்று கேட்டார்கள். 'ஆமிர் இப்னு அக்வஃ' என்று மக்கள் பதிலளித்தார்கள். அப்போது, 'அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள். அந்த மக்களில் ஒருவர், 'இறைத்தூதரே! (அவருக்கு வீர மரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக்கூடாதா? என்று கேட்டார்.

பிறகு நாங்கள் கைபருக்கு வந்து, கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசியேற்பட்டது. பிறகு உயர்ந்தோனான அல்லாஹ் அவர்களுக்கு எதிராக (எங்களுக்கு) வெற்றியளித்தான். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். 'இறைச்சி சமைப்பதற்காக'' என்று மக்கள் கூறினர். 'எந்த இறைச்சி?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நாட்டுக் கழுதைகளின் இறைச்சி' என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களை உடைத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை கழுவிக் கொள்ளலாமா?' என்று கேட்டார். 'அப்படியே ஆகட்டும்'' என்று கூறினார்கள். (அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனின் காலை வெட்டப் போனபோது அன்னாரின் வாளின் மேற்பகுதி, அன்னாரின் முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (கைபர் வெற்றிக்குப் பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பியபோது - ஸலமா (ரலி) கூறினார். 'என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் (அமல்கள்) அழிந்துவிட்டன. (அவர் தம் வாளினால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்தார்)'' என்று மக்கள் எண்ணுகிறார்கள்.'' என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இதைக் கூறியவர் தவறிழைத்துவிட்டவர். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர் புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு'' என்று கூறியவாறு, தம் இரண்டு விரல்களையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து)'' அவர் துன்பங்களைத் தாங்கினார்;. (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபுகள் மிகவும் குறைவானவர்களே'' என்று கூறினார்கள்.

புஹாரி :4196 ஸலமா பின் அக்வஹ் (ரலி).

Friday, February 01, 2008

அளவுக்கதிகமான கேள்விகளைத் தவிர்.

1117. (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2408 முகீரா இப்னு ஷுஅபா (ரலி).