Showing posts with label குறைஷிகள். Show all posts
Showing posts with label குறைஷிகள். Show all posts

Tuesday, December 09, 2008

புகை.

1783. (குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தபோது நபி (ஸல்) அவர்கள், 'யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படட்டும்' எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவிற்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் ஒருவர் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து) களைப்படைந்து தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அப்போது அல்லாஹ், '(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். அது மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அது துன்புறுத்தும் வேதனை ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 44:10, 11ஆகிய) வசனங்களை அருளினான். அப்போது ஒருவர் (அபூசுஃப்யான்) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! முளர் குலத்தாருக்கு மழை வேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் அழிவுக்குள்ளாகி விட்டார்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'முளர் குலத்தினருக்கா? நீங்கள் துணிவு மிக்கவர் தாம்'' என்று கூறிவிட்டு, (அவர்களுக்காக) மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே, அவர்களுக்கு வானம் பொழிந்தது. அப்போது, 'மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 44:15 வது) வசனம் அருளப்பட்டது. (பிறகு அவர்களுக்குப் பஞ்சம் விலகி,) வளமான வாழ்வு ஏற்பட்டபோது, பழைய (இணைவைக்கும்) நிலைக்கே திரும்பிச் சென்றனர். அப்போது வல்லவனும் மாண்பாளனுமாகிய அல்லாஹ், 'மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்'' எனும் (திருக்குர்ஆன்44:16 வது) வசனத்தை அருளினான். அந்நாள் பத்ருப்போர் நாளாகும்.

புஹாரி : 4821 இப்னு மஸ்ஊத் (ரலி).

Monday, December 08, 2008

நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்கும் போது வேதனை இறங்காது.

1782. (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் 'இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!'' என்று சொன்னான். அப்போது '(நபியே!) நீர் அவர்களுக்கிடையே இருக்கும்போது அல்லாஹ் அவர்களின் மீது வேதனையை இறக்குபவன் அல்லன். மேலும், மக்கள் பாவமன்னிப்பை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களை அல்லாஹ் வேதனை செய்யப் போவதில்லை. அவர்கள் (கஅபா உள்ளிட்ட) மஸ்ஜிதுல் ஹராமுக்கு (முறையான) நிர்வாகிகளாக இல்லாத நிலையில் (மக்களை) அங்கு செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனைக்குள்ளாக்காமல் இருப்பதற்கு அவர்களிடம் என்ன காரணம் உள்ளது? இறையச்சமுடையவர்கள் மட்டுமே அதன் (முறையான) நிர்வாகிகளாக ஆகமுடியும்! அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்'' எனும் வசனங்கள் (திருக்குர்ஆன் 08:33, 34) அருளப்பெற்றன.

புஹாரி : 4648 அனஸ் (ரலி).

Saturday, October 04, 2008

குறைஷிப் பெண்களின் சிறப்பு.

1643. குறைஷிப் பெண்கள் தாம் ஒட்டகத்தில் சவாரி செய்த பெண்களிலேயே சிறந்தவர்கள் (தம்) குழந்தைகளின் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிப் பாதுகாக்கக் கூடியவர்கள் .இதை அபூஹுரைரா (ரலி) அறிவித்துவிட்டு பின்பு, 'இம்ரானின் மகள் மர்யம் ஒட்டகம் எதிலும் சவாரி செய்ததேயில்லை'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3434 அபூஹூரைரா (ரலி).

1644. ''இஸ்லாத்தில் (மனிதர்களாக) ஏற்படுத்திக் கொள்கிற உறவுமுறை இல்லை!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உங்களுக்குச் செய்தி கிடைத்ததா?' என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள், 'என்னுடைய வீட்டில் வைத்து முஹாஜிர்களுக்கும் அன்ஸாரிகளுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் உறவுமுறைகளை ஏற்படுத்தினார்களே!'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 2294 ஆஸிம் (ரலி).

Sunday, March 09, 2008

அகழ்ப் போர் பற்றி...

1182. அகழ்ப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள். (இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்'' தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.

புஹாரி : 2837 அல் பராஉ பின் ஆஸிப் (ரலி).

1183. நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துக் சென்று கொண்டும் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், 'இறைவா! மறுமை வாழ்க்கையத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை. எனவே, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!'' என்று (பாடியபடி) கூறினார்கள்.

புஹாரி : 3797 ஸஹ்ல் பின் ஸஅது(ரலி).

1184. ''மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை. அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக'' என்று (பாடியபடி) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

புஹாரி 3795 அனஸ் இப்னு மாலிக் (ரலி)

1185. அகழ்ப் போரின்போது (மதீனா வாசிகளான) அன்சாரிகள், 'நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) 'நாங்கள் உயிராயிருக்கும் வரை (தொடர்ந்து) அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்திருக்கிறோம்'' என்று பாடிய வண்ணம் (அகழ்தோண்டிக் கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர (நிரந்தரமான பெரு) வாழ்க்கை வேறெதுவுமில்லை. எனவே, (அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்ள உழைக்கிற மதீனாவாசிகளான) அன்சாரிகளையும் (மக்காவாசிகளான) முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!'' என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.

புஹாரி : 2961 அனஸ் (ரலி).

Tuesday, March 04, 2008

நபி (ஸல்) அவர்களுக்கு முஷ்ரிக்குகள் செய்த கொடுமை.

1172. 'நபி (ஸல்) அவர்கள் கஅபதுல்லாஹ்வில் தொழுது கொண்டிருந்தபோது அபூ ஜஹ்லும் அவனுடைய தோழர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிலரைப் பார்த்து 'இன்ன குடும்பத்தினரின் அறுக்கப்பட்ட ஒட்டகத்தின் கர்ப்பப்பையைக் கொண்டு வந்து முஹம்மத் ஸஜ்தாச் செய்யும்போது அவருடைய முதுகின் மீது போடுவதற்கு உங்களில் யார் தயார்?' என்று கேட்டனர். அப்போது அக்கூட்டத்தில் மிக இழிந்த ஒருவன் அதைக் கொண்டு வந்தான். நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்வதைப் பார்த்ததும் அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் போட்டுவிட்டான். அதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன். ஆனால், அதைத் தடுத்து நிறுத்த எனக்கு அன்று சக்தி இருக்கவில்லை. இந்நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு அமர்ந்திருந்த இறைமறுப்பாளர்கள் ஒருவரின் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். நபி (ஸல்) அவர்களோ தலையை உயர்த்த முடியாதவர்களாக ஸஜ்தாவிலேயே இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அங்கே வந்து, நபி (ஸல்) அவர்களின் முதுகின் மீது போடப்பட்டிருந்ததை எடுத்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் தலையை உயர்த்தி 'யா அல்லாஹ்! குறைஷிகளை நீ கவனித்துக் கொள்வாயாக' என்று மூன்று முறை கூறினார்கள். அவர்களுக்குக் கேடாக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது குறைஷிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், 'அந்நகரில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும்' என அவர்களும் நம்பியிருந்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்தோரின்) பெயர்களைக் குறிப்பிட்டு, 'யா அல்லாஹ்! அபூ ஜஹ்ல், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!' என்று கூறினார்கள். ஏழாவது ஒரு நபரின் பெயரை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நான் மறந்துவிட்டேன். என்னுடைய உயிர் எவன் கையிலிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க்களத்தில் 'கலீப்' என்ற பாழ் கிணற்றில் செத்து வீழ்ந்து கிடந்ததை பார்த்தேன்''.

புஹாரி : 240 இப்னு மஸ்ஊத் (ரலி)

1173. (ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், '(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது 'அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். 'கர்னுஸ் ஸஆலிப்' என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, 'உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, 'முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)'' என்று கூறினார். உடனே, '(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)'' என்று சொன்னேன்.

புஹாரி : 3231 ஆயிஷா (ரலி).

1174. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், 'நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!'' என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.

புஹாரி : 2802 ஜூன்துப் பின் ஸூஃப்யான் (ரலி).

1175. (ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது 'இரண்டு இரவுகள்' அல்லது 'மூன்று இரவுகள்' (இரவுத் தொழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, 'முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) 'இரண்டு இரவுகளாக' அல்லது 'மூன்று இரவுகளாக' உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை'' என்று கூறினாள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், 'முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை கோபங்கொள்ளவும் இல்லை'' எனும் (திருக்குர்ஆன் 93:1-3) வசனங்களை அருளினான்.

புஹாரி : 4950 ஜூன்துப் பின் ஸூ.ப்யான் (ரலி).