Showing posts with label எதிரிகள். Show all posts
Showing posts with label எதிரிகள். Show all posts

Tuesday, January 27, 2009

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து....

1892. அபூபக்ர் (ரலி) என் தந்தை (ஆஸிப் இப்னு ஹாரிஸ் (ரலி)யிடம் அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்களிடமிருந்து ஒர் ஒட்டகச் சேணத்தை அபூபக்ர் (ரலி) விலைக்கு வாங்கினார்கள். அப்போது அவர்கள் என் தந்தை ஆஸிப் (ரலி) அவர்களிடம், 'இதை என்னுடன் சுமந்துவர உங்கள் மகனை அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே, நான் அவர்களுடன் அதைச் சுமந்து சொன்றேன். என் தந்தையார் அதன் விலையைப் பெற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, 'அபூபக்ரே! நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவைத் துறந்து ஹிஜ்ரத் செய்து) சென்றபோது இருவரும் எப்படி (எதிரிகளின் கண்களில் படாமல் சமாளித்துச்) செயல்பட்டீர்கள் என எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) கூறினார்: ஆம்! நாங்கள் (மூன்று நாள் குகையில் தங்கியிருந்து விட்டு அங்கிருந்து வெளியேறி) எங்களுடைய (அந்த) இரவிலும் அடுத்த நாளின் சிறிது நேரத்திலும் பயணம் செய்து கொள்வோம். இறுதியில் நண்பகல் நேரம் வந்துவிட்டது. பாதையில் (வெப்பம் அதிகரித்து) எவரும் நடமாட முடியாதபடி அது காலியாகி விட்டது. அப்போது இதுவரை சூரிய வெளிச்சம் படாத, நிழல் படர்ந்த நீண்ட பாறை ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. எனவே, நாங்கள் அதனிடத்தில் தங்கினோம். நான் நபி (ஸல்) அவர்களுக்கு என் கையால் ஓரிடத்தை, அதன் மீது அவர்கள் உறங்குவதற்காகச் சமன்படுத்தித் தந்தேன். மேலும், அதன் மீது ஒரு தோலை விரித்தேன். அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நான் உங்களைச் சுற்றிலுமுள்ள சூழலை உங்களுக்காகக் கண்காணித்து வருகிறேன்; நீங்கள் (கவலையில்லாமல்) உறங்குங்கள்'' என்று சொன்னேன். அவ்வாறே அவர்கள் உறங்கினார்கள். அவர்களைச் சுற்றிலுமுள்ள சூழலைக் கண்காணித்தபடி நான் புறப்பட்டேன். அப்போது ஆட்டிடையன் ஒருவன் தன் ஆடுகளுடன் (நாங்கள் தங்கியுள்ள அந்தப்) பாறையை நோக்கி நாங்கள் (ஓய்வெடுக்க) விரும்பியது போன்றே அவனும் (ஓய்வெடுக்க) விரும்பியபடி வந்து கொண்டிருப்பதைக் கண்டேன். உடனே, 'நீ யாருடைய பணியாள்? இளைஞனே!'' என்று கேட்டேன். அவன், 'மதீனாவாசிகளில் ஒரு மனிதரின் (பணியாள்)'' என்று அல்லது மக்காவாசிகளில் ஒருவரின் (பணியாள்) என்று பதிலளித்தான். நான், 'உன் ஆடுகளிடம் பால் ஏதும் இருக்கிறதா?'என்று கேட்டேன். அவன், 'ஆம் (இருக்கிறது)'' என்று சொன்னான். நான், 'நீ (எங்களுக்காகப்) பால் கறப்பாயா?' என்று கேட்டேன். அவன், 'சரி (கறக்கிறேன்)'' என்று சொல்லிவிட்டு, ஆடு ஒன்றைப் பிடித்தான். நான், '(ஆட்டின்) மடியை (அதில் படிந்துள்ள) மண்ணையும் முடியையும் தூசுகளையும் நீக்கி உதறிக் கொள்'' என்று சொன்னேன். -அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்: தம் இரண்டு கைகளில் ஒன்றை மற்றொன்றின் மீது அடித்து உதறிக் காட்டுபவர்களாக பராஉ (ரலி) அவர்களை கண்டேன். அவன், உட்பக்கம் கடையப்பட்ட ஒரு மரப் பாத்திரத்தில் சிறிதளவு பாலைக் கறந்தான். என்னுடன் தண்ணீருள்ள ஒரு தோல் பாத்திரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து நீரருந்தி, தாகத்தை தணித்துக் கொண்டு, உளூச் செய்து கொள்வதற்காக நான் அதை அவர்களுடன் சுமந்து வந்திருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது) சென்றேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நான் விரும்பவில்லை. (எனினும்) அவர்களிடம் நான் சென்ற நேரமும், ஒன்றாக அமைந்து விட்டது. நான் (தோல் பாத்திரத்தில் இருந்த) தண்ணீரை (மரப் பாத்திரத்திலிருந்த) பாலில் ஊற்றினேன். அதன் அடிப்பகுதி குளிர்ந்து போகும்வரை இவ்வாறு ஊற்றினேன். பிறகு நான், 'பருகுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அவர்கள் நான் திருப்தியடையும் வரை பருகினார்கள். பிறகு, '(நாம்) புறப்படுவதற்கான நேரம் வரவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம் (வந்துவிட்டது)'' என்று சொன்னேன். சூரியன் உச்சி சாய்ந்த பிறகு நாங்கள் பயணமானோம். எங்களை சுராக்கா இப்னுமாலிக் தொடர்ந்து வந்தார். (அப்போது அவர் முஸ்லிமாகியிருக்கவில்லை.) நான், '(எதிரிகள்) நம்மிடம் வந்து சேர்ந்து விட்டார்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'கவலைப்படாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் சுராகாவுக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். உடனே, சுராகாவுடன் அவரின் குதிரை தன் வயிறு வரை பூமியில் புதைந்து விட்டது. அறிவிப்பாளர் ஸுஹைர் இப்னு முஆவியா (ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்: 'பூமியின் ஓர் இறுகிய பகுதியில்'' என்று (அபூ இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்கள் என) கருதுகிறேன். உடனே சுராகா, 'நீங்கள் இருவரும் எனக்கு எதிராகப் பிரார்த்தித்திருப்பதாக கருதுகிறேன். எனவே, எனக்காக (இந்த வேதனையிலிருந்து என்னை விடுவிக்கும்படி) நீங்கள் இருவரும் பிரார்த்தியுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிவான். நான் உங்களைத் தேடி வருபவர்களை உங்களை விட்டுத் திசைதிருப்பி விடுவேன்'' என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள் சுராக்காவுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். உடனே அவர் (அந்த வேதனையிலிருந்து) தப்பித்தார். அப்போதிருந்து அவர் தன்னைச் சந்திப்பவர் எவராயினும் அவரிடம், 'உங்களுக்கு நானே போதுமானவன். நீங்கள் தேடி வந்தவர் இங்கில்லை'' என்று கூறலானார். மேலும், (எங்களைத் தேடி வந்ததாகச் சொல்லும்) எவரைச் சந்தித்தாலும் திருப்பியனுப்பிக் கொண்டேயிருந்தார். அவர் எங்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டார்.

புஹாரி :3615 அல்பராவு பின் ஆஸிஃப் (ரலி).

Friday, September 26, 2008

ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1616. மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலி) பள்ளிவாசலில் கவி பாடுவதை உமர் (ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான் (ரலி), 'நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இருக்கும்போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்'' என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா (ரலி) பக்கம் திரும்பி, 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!'' என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி), 'ஆம் (செவியுற்றிருக்கிறேன்)'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3212 ஸயீத் பின் அல் முஸய்யப் (ரலி).

1617. நபி (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களிடம், 'எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3213 அல்பராஉ (ரலி).

1618. (ஒரு முறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக் கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி (ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்'' என்று கூறினார்கள்.

புஹாரி :3531 உர்வா (ரலி).

1619. (ஒருமுறை) நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவை) பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (தம் பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, '(அவர்கள்) கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம் சாட்டப்பட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள்'' என்று பாடினார்கள். அப்போது ஹஸ்ஸான் அவர்களைப் பார்த்து ஆயிஷா (ரலி), 'ஆனாலும், நீங்கள் அப்படியல்ல (என்னைப் பற்றி அவதூறு பேசுபவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்'') என்று கூறினார்கள்.(தொடர்ந்து) அறிவிப்பாளர் மஸ்ரூக் (ரஹ்) கூறினார்: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், 'ஹஸ்ஸான் அவர்களைத் தங்களிடம் வர ஏன் அனுமதிக்கிறீர்கள்? அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில்), 'அவர்களில் (அவதூறு பரப்புவதில்) பெரும் பங்கு வகித்தவருக்கு கடினமான வேதனையுண்டு'' என்று (திருக்குர்ஆன் 24:11ல்) கூறுகிறானே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'குருடாவதை விடக் கொடிய வேதனை ஏது?' என்று கூறிவிட்டு, 'அவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சார்பில் பதிலளிப்பவராக அல்லது இறைத்தூதர் சார்பில் (எதிரிகளுக்கு பதிலடியாக) வசைக் கவிபாடுபவராக இருந்தார் என்று கூறினார்கள்.

புஹாரி : 4146 மஸ்ரூக் (ரலி).

1620. (முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பவர்கள் வசைபாடிய போது) இணைவைப்பவர்களுக்கெதிராக வசைக் கவிதை பாடுவதற்கு நபி (ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களுடன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது; எப்படி?' என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி), 'மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி) விடுவேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3531 ஆயிஷா (ரலி).

Tuesday, March 11, 2008

ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் போரிடுதல்.

1187. உஹுதுப் போரின்போது நபி (ஸல்) அவர்களை(த் தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூ தல்ஹா (ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள். மேலும், அபூதல்ஹா (ரலி) வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விட்டார்கள். எவரேனும் ஒருவர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், 'அதை அபூ தல்ஹாவிடம் போடு'' என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்க, அபூ தல்ஹா அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்'' என்று கூறினார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

புஹாரி :3811 அனஸ் (ரலி).

Sunday, March 09, 2008

அகழ்ப் போர் பற்றி...

1182. அகழ்ப் போரின்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை பார்த்தேன். மண் அவர்களின் வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டிருந்தார்கள். (இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்'' தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்களின் மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.

புஹாரி : 2837 அல் பராஉ பின் ஆஸிப் (ரலி).

1183. நாங்கள் அகழ் தோண்டிக் கொண்டும் எங்கள் தோள்களின் மீது மண்ணைச் சுமந்து எடுத்துக் சென்று கொண்டும் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், 'இறைவா! மறுமை வாழ்க்கையத் தவிர வேறு வாழ்க்கை எதுவுமில்லை. எனவே, முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக!'' என்று (பாடியபடி) கூறினார்கள்.

புஹாரி : 3797 ஸஹ்ல் பின் ஸஅது(ரலி).

1184. ''மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை. அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக'' என்று (பாடியபடி) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

புஹாரி 3795 அனஸ் இப்னு மாலிக் (ரலி)

1185. அகழ்ப் போரின்போது (மதீனா வாசிகளான) அன்சாரிகள், 'நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) 'நாங்கள் உயிராயிருக்கும் வரை (தொடர்ந்து) அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்திருக்கிறோம்'' என்று பாடிய வண்ணம் (அகழ்தோண்டிக் கொண்டு) இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர (நிரந்தரமான பெரு) வாழ்க்கை வேறெதுவுமில்லை. எனவே, (அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கிக் கொள்ள உழைக்கிற மதீனாவாசிகளான) அன்சாரிகளையும் (மக்காவாசிகளான) முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!'' என்று (பாடலிலேயே) பதிலளித்தார்கள்.

புஹாரி : 2961 அனஸ் (ரலி).

Wednesday, February 27, 2008

ஹூனைன் போர் பற்றி....

1163. பராஉ (ரலி) அவர்களிடம் ஒருவர், 'அபூ உமாராவே! நீங்கள் ஹுனைன் போரின்போது பின்வாங்கி ஓடினீர்களா?' என்று கேட்க, அதற்கு அவர்கள், 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை. ஆயினும், அவர்களின் தோழர்களில் வாலிபர்களும் ஆயுதபலமில்லாதவர்களும் களைத்துப் போய் நிராயுதபாணிகளாக வெளியேறினர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் வில் வீரர்களைக் கடந்து சென்றனர். அவர்களின் எந்த அம்பும் இலக்கு தவறி விழுவதில்லை. அவர்கள் குறி தவறாமல் அம்புகளை எய்தார்கள். எனவே, முஸ்லிம்கள் மீண்டும் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகன் அபூ சுஃப்யான் இப்னு ஹாரிஸ் இப்னி அப்தில் முத்தலிப் (ரலி) ஓட்டிக் கொண்டு வர, அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (செய்தியறிந்ததும் அதைவிட்டு) இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோரிப் பிரார்த்தித்தார்கள். பிறகு, 'நான் இறைத்தூதர் தான். இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன்'' என்று கூறினார்கள். பிறகு தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.

புஹாரி 2930 அபூ இஸ்ஹாக் (ரலி).

1164. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்களிடம், 'நீங்கள் ஹுனைன் போரின்போது நபி (ஸல்) அவர்களுடன் தோற்றுப் பின்வாங்கிச் சென்றீர்களா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், '(எங்களில் சிலர் பின் வாங்கிச் சென்றது உண்மையே. ஆயினும்,) நபி (ஸல்) அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. (எதிரிகளான) ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், 'நான் இறைத்தூதர் தாம்; இது பொய்யல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனுடைய) மகன் ஆவேன்' என்று (பாடிய படிக்) கூறிக் கொண்டிருந்தார்கள்.

புஹாரி :4316 அபூ இஸ்ஹாக் (ரலி).

Tuesday, February 19, 2008

போரின்றி கிடைக்கும் வெற்றிப் பொருட்கள்.

1146. பனூ நளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்கள்) குதிரைகளையோ, ஒட்டகங்களையோ செலுத்திப் போரிட்டிருக்கவில்லை. எனவே, அவை அல்லாஹ்வின் தூதருக்கு மட்டுமே உரியவையாக இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் தங்களின் ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.

புஹாரி : 2904 உமர் (ரலி).

1147. உமர் இப்னு கத்தாப் (ரலி) என்னைக் கூப்பிட்(டு ஆளனுப்பி விட்டார்கள். (நான் அவர்களிடம் சென்று அமர்ந்து கொண்டிருந்த போது) அவர்களிடம் அவர்களின் மெய்க்காவலர் 'யர்ஃபஉ' என்பவர் வந்து, 'உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) ஆகியோர் தங்களைச் சந்திக்க அனுமதி கேட்கிறார்கள். தங்களுக்கு (அவர்களைச் சந்திப்பதில்) இசைவு உண்டா? என்று கேட்டார். உமர் (ரலி), 'ஆம் (இசைவு உண்டு); அவர்களை உள்ளே வரச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு 'யர்ஃபஉ' சற்று நேரம் தாமதித்து வந்து, 'அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் (உள்ளே வர) அனுமதி கேட்கிறார்கள். தங்களுக்கு இசைவு உண்டா?' என்று கேட்டார் அதற்கு உமர் (ரலி) 'ஆம் (இசைவு உண்டு)'' என்று கூற, அவ்விருவரும் உள்ளே நுழைந்தபோது அப்பாஸ் (ரலி), 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார்கள். அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூ நளீர் குலத்தாரின் செல்வத்திலிருந்து ('ஃபய்உ' நிதியாக) ஒதுக்கிக் கொடுத்த சொத்துகள் தொடர்பாக இருவரும் சச்சரவிட்டு வந்தனர்.

அப்போது அலீ (ரலி) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் ஒருவரையொருவர் குறைகூறிக் கொண்டனர். அப்போது (உஸ்மான் - ரலி - அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்களின்) குழு, 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இவர்களுக்கிடையே தீர்ப்பளித்து, ஒருவரை மற்றவரின் பிடியிலிருந்து விடுவித்து விடுங்கள்'' என்று கூறியது. உமர் (ரலி), 'பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் கேட்கிறேன்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(நபிமார்களான) எங்களுக்கு எவரும் வாரிசாக மாட்டார். நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே'' என்று தம்மைக் குறித்துக் கூறியதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தக் குழுவினர், 'அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்'' என்று பதிலளித்தனர். உடனே, உமர் (ரலி), அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அவ்விருவரும், 'ஆம், (அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்)'' என்று பதிலளித்தனர். உமர் (ரலி), 'அவ்வாறெனில், உங்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இச்செல்வத்திலிருந்து சிறியதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதைக் கொடுக்கவில்லை.''. (என்று கூறிவிட்டு), 'அல்லாஹ், எச்செல்வத்தை எதிரிகளின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பிக் கொடுத்தானோ அச்செல்வம் உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஒட்டிச் சென்றதால் கிடைத்தல்ல. மாறாக அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்'' என்னும் (திருக்குர்ஆன் 59:6-வது) இறைவசனத்தை ஓதினார்கள். தொடர்ந்து,

'எனவே, இது இறைத் தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட்டுவிட்டு அதை அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை. அதை உங்களை விடப் பெரிதாகக் கருதவுமில்லை. உங்களுக்கு அதைக் கொடுத்தார்கள்; உங்களிடையே அதைப் (பரவலாகப்) பங்கிட்டார்கள். இறுதியில், அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் ஆண்டுச் செலவை அவர்களுக்குக் கொடுத்து வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் செலவிடுவார்கள். இவ்வாறே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டு வந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது அபூபக்ர் (ரலி), 'நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன் என்று கூறி, அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்தார்கள். அ(ந்தச் சொத்)து விஷயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செயல்பட்ட விதத்தில் தாமும் செயல்பட்டார்கள்'' என்று உமர் (ரலி) கூறினார்.


பிறகு அலீ (ரலி) அவர்களையும் அப்பாஸ் (ரலி) அவர்களையும் நோக்கி, 'நீங்களும் அப்போது இருந்தீர்கள்; இந்நிலையில் (இப்போது வந்து) நீங்கள் கூறுவது போன்று அபூபக்ர் (ரலி) செயல்பட்டார்கள் என்று கூறுகிறீர்களே!'' என்று கேட்டார்கள். பிறகு, 'அபூபக்ர் அவர்கள் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டார்கள்; நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்; நேரான முறையில் நடந்து, உண்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு அபூபக்ர் அவர்களையும் அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அப்போது நான் 'அல்லாஹ்வின் தூதருடையவும் அபூபக்ர் அவர்களின் பிரதிநிதியாவேன்'' என்று கூறி, அதை என் ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக் கொண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதில் நடந்து கொண்ட முறைப்படியும் அபூபக்ர் (ரலி) நடந்து கொண்ட முறைப்படியும் நானும் செயல்பட்டு வந்தேன். நான் அது விஷயத்தில் வாய்மையாகச் செயல்பட்டேன்; நல்ல விதமாக நடந்து கொண்டேன்; நேரான முறையில் நடந்து கொண்டேன்; உண்மையையே பின்பற்றினேன் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு, நீங்கள் இருவருமே என்னிடம் வந்து பேசினீர்கள்; உங்கள் இருவரின் கோரிக்கையும் ஒன்றாகவே இருந்தது. அப்பாஸே! நீங்கள் என்னிடம் (உங்கள் சகோதரர் மகனிடமிருந்து உங்களுக்குச் சேரவேண்டிய வாரிசுப் பங்கைக் கேட்டபடி) வந்தீர்கள். நான் உங்கள் இருவரிடமும், 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(நபிமார்களான நாங்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களில்) எங்களுக்கு எவரும் வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே' என்று கூறினார்கள்' என்றேன். எனினும், 'அதை உங்கள் இருவரிடமே கொடுத்து விடுவது (தான் பொறுத்தமானது)' என்று எனக்குத் தோன்றியபோது நான், 'நீங்கள் இருவரும் விரும்பினால் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதி மொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, அபூபக்ர் (ரலி) எப்படி அதன் விஷயத்தில் செயல்பட்டார்களோ, நான் (ஆட்சிப்) பொறுப்பேற்றதிலிருந்து அதன் விஷயத்தில் எப்படிச் செயல்பட்டேனோ அதன்படியே நீங்கள் இருவரும் செயல்படுவீர்கள் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் கொடுத்து விடுகிறேன். அதன் அடிப்படையில் என்னிடம் பேசுவதாயிருந்தால் பேசுங்கள் என்று கூறினேன். அதற்கு நீங்கள் இருவரும், 'எங்களிடம் இதே அடிப்படையில் அதைக் கொடுத்து விடுங்கள்' என்று சொன்னீர்கள். அதன்படியே அதை உங்கள் இருவரிடமும் கொடுத்து விட்டேன்'' (என்று சொல்லிவிட்டு) '(தற்போது) இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடமிருந்து கோருகிறீர்களா? எவனுடைய அனுமதியுடன் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! மறுமை நாள் வரை, நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்தத் தீர்ப்பையும் தர மாட்டேன். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியவில்லை என்றால் என்னிடம் அதைக் கொடுத்து விடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்'' என்று கூறினார்கள்.

புஹாரி :4033 மாலிக் பின் அவ்ஸ் அல் அன்சாரி (ரலி).

1148. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது அவர்களின் துணைவியர் உஸ்மான் (ரலி) அவர்களை (என் தந்தை கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்து, (அல்லாஹ்வின் தூதரிடமிருந்து) தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்க விரும்பினர். அப்போது நான் (அவர்களைப் பார்த்து), '(இறைத்தூதர்களான) எங்களுக்கு எவரும் (சொத்தில்) வாரிசாக முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமே' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லவில்லையா?' என்று கேட்டேன்.

புஹாரி :6730 ஆயிஷா (ரலி).

1149. நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் மீதியிருந்ததிலிருந்து தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ('நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இச்செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்' என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்ய மாட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அச்சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அச்சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன்'' என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூ பக்ர் (ரலி) மறுத்துவிட்டார்கள். இதனால் அபூ பக்ர் (ரலி) மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) பேசவில்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாதகாலம் ஃபாத்திமா (ரலி) உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) இறந்தபோது, அவர்களின் கணவர் அலீ (ரலி), (இறப்படைவதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததற்கிணங்க) இரவிலேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுகை நடத்தினார்கள்.
ஃபாத்திமா (ரலி) வாழ்ந்தவரையில் அலீ (ரலி) மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா (ரலி) இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) கண்டார்கள். எனவே, (ஆட்சித் தலைவர்) அபூ பக்ரிடம் சமரசம் பேசவும் பைஅத் - விசுவாசப் பிரமாணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. எனவே, 'தாங்கள் (மட்டும்) எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வரவேண்டாம்'' என்று கூறி அலீ (ரலி) அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூ பக்ர்- ரலி - அவர்களுடன்) உமர் (ரலி) வருவதை அலீ (ரலி) விரும்பாததே (அலீ-ரலி அவர்கள் இவ்வாறு கூறக்) காரணமாகும். அப்போது உமர் (ரலி) (அபூ பக்ர் - ரலி - அவர்களிடம்), 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள் (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்)'' என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர் (ரலி), என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களிடம் நான் செல்லத்தான் செய்வேன்'' என்று கூறிவிட்டு, அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ (ரலி), ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு, (அபூ பக்ர் - ரலி- அவர்களை நோக்கி) 'தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறமைப்படவில்லை. ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் எங்களுக்குள் உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம்'' என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன.


அபூ பக்ர் (ரலி) பேசத் துவங்கியபோது, 'என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பானவர்கள். இச்செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல் விட்டு விடவுமில்லை'' என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி), 'தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும'' என்று கூறினார்கள். பிறகு அபூ பக்ர் (ரலி) லுஹர்த் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ (ரலி) குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ (ரலி) தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ (ரலி) (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் அபூ பக்ர் (ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூ பக்ர் (ரலி) மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்தோ அல்ல மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என (நபி - ஸல் - அவர்களின் குடும்பத்தினராகிய) நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூ பக்ர் (ரலி) (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது'' என்று கூறினார்கள். இதைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து) 'நீங்கள் சரியாகவே சொன்னீர்கள்'' என்று கூறினர். தம் போக்கை அலீ (ரலி) திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்துவிட்டபோது முஸ்லிம்கள் அலீ (ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.

புஹாரி : 4240 ஆயிஷா (ரலி).

1150. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட பிறகு, நபியவர்களின் மகள் ஃபாத்திமா அவர்கள் தமக்குச் சேர வேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தரும்படி அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அது இறைத்தூதர் (ஸல்), அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த, (எதிரி நாட்டிலிருந்து கிடைத்த) செல்வங்களில் நபியவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும். ஃபாத்திமாவுக்கு அபூ பக்ர் (ரலி), 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள், '(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார்கள்'' என்று பதிலளித்தார்கள். ஆனால், இதனால் ஃபாத்திமா கோபமுற்று அபூ பக்ர் (ரலி) அவர்களுடன் பேசுவதை விட்டுவிட்டார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அபூ பக்ர் (ரலி) அவர்களுடன் பேசாமலேயே இருந்துவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் தனி நிதியாக) விட்டுச் சென்ற கைபர், ஃபதக் ஆகிய பகுதிகளின் சொத்துக்களிலிருந்தும் மதீனாவில் இருந்த அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற சொத்திலிருந்தும் தமக்குப் பங்கு தரும்படியே அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கேட்டுக் கொண்டிருந்தார். அபூ பக்ர் (ரலி) ஃபாத்திமாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து, 'இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்து கொண்டிருந்த எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன். ஏனெனில், அவர்களின் செயல்களில் எதனையாவது நான் விட்டுவிட்டால் நான் வழிதவறி விடுவேனோ என்று அஞ்சுகிறேன்'' என்றார்கள். (அபூ பக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் தருமமாக விட்டுச் சென்ற சொத்தை உமர் அவர்கள், அலீ அவர்களுக்கும் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் (அதன் வருமானத்திலிருந்து தம் பங்கின் அளவிற்கு எடுத்துக் கொள்ளும் படி) கொடுத்துவிட்டார்கள். கைபர் மற்றும் ஃபதக்கில் இருந்த சொத்துக்களை உமர் அவர்கள் (யாருக்கும் கொடுக்காமல்) நிறுத்தி வைத்துக் கொண்டு, 'அவ்விரண்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தருமமாக விட்டுச் சென்றவை. அவை நபி (ஸல்) அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுவதற்காகவும் அவர்களுக்கு ஏற்படும் (திடீர் பொருளதாரப்) பிரச்சினை(கள் மற்றும் செலவினங்)களுக்காகவும் (ஒதுக்கப்பட்டு) இருந்தன. அவ்விரண்டின் அதிகாரமும் ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்'' என்றார்கள். இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) (இந்த ஹதீஸை அறிவித்த போது), 'அந்த (கைபர், ஃபதக் பகுதியிலிருந்த) இரண்டு சொத்துக்களும் இன்று வரை அவ்வாறே (ஆட்சியாளரின் பொறுப்பிலேயே) இருந்து வருகின்றன'' என்றார்கள்.

புஹாரி : 3092-3093 ஆயிஷா (ரலி).

1151. என் வாரிசுகள் பொற்கசையோ, வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூலியையும் தவிர, நான்விட்டுச் செல்வதெல்லாம் தருமமேயாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 2776 அபூ ஹுரைரா (ரலி).

Monday, February 18, 2008

போரில் கொல்லப்பட்டவனின் உடமை கொன்றவனைச் சாரும்.

1144. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போர் நடந்த ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க்களத்தில்) நாங்கள் சந்தித்தபோது (ஆரம்பத்தில்) முஸ்லிம்களுக்குள் பதற்றம் நிலவியது. (அவர்கள் தோல்வியுற்றனர்.) நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்லிமின் மீது ஏறி உட்கார்ந்து அவரைக் கொல்ல முயன்றான். நான் சென்று அவனைச் வாளால் அவனுடைய (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டினேன். உடனே அவன் (அந்த முஸ்லிமை விட்டுவிட்டு) என்னை இறுக அணைத்தான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்கலானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டுவிட்டான். உடனே நான் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்து, 'மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே)'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், '(இது) அல்லாஹ் விதித்த விதி'' என்று பதிலளித்தார்கள்.

பிறகு, மக்கள் (அப்பாஸ் (ரலி) அழைத்ததால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து, 'போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை'' என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, 'எனக்கு சாட்சி சொல்வார் யார்?' என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து கொண்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், 'போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் உடலிலிருந்து எடுத்த பொருள்கள் உரியவை'' என்று கூறினார்கள். உடனே, நான் எழுந்து நின்று, 'எனக்கு சாட்சி சொல்வார் யார்?' என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு, மூன்றவாது முறையாக அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே, நான் எழுந்தேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அபூ கதாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள்.

நடந்த நிகழ்ச்சியை நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். ஒருவர், 'இவர் உண்மையே சொன்னார், இறைத்தூதர் அவர்களே! இவரால் கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவரை (ஏதாவது கொடுத்துத்) திருப்திப்படுத்தி விடுங்கள்'' என்றார். அப்போது அபூ பக்ர் சித்திக் (ரலி), 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் போரிட்டு (தன்னால்) கொல்லப்பட்டவரின் உடலிலிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுக்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்'' என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், '(அபூ பக்ர்) உண்மை சொன்னார்'' என்று கூறிவிட்டு அதை எனக்கே கொடுத்துவிட்டார்கள். நான் அந்தப் போர்க் கவசத்தை விற்றுவிட்டு பனூ ஸலமா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன். அதுதான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் சேகரித்த முதல் சொத்தாகும்.

புஹாரி :3142 அபூகதாதா (ரலி).

1145. பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இள வயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, 'அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா' என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, 'என் பெரிய தந்தையே! நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா?' என்று கேட்டார். நான், 'ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை? என் சகோதரர் மகனே!'' என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், 'அவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)'' என்று கூறினார். இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, 'இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி!'' என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். பிறகு, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், 'உங்களில் யார் அவனைக் கொன்றது?' என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், 'நானே (அவனைக் கொன்றேன்)'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், 'உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா?' என்று கேட்டார்கள். இருவரும், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, 'நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் இப்னு அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) 'அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹுக்கு உரியவை'' .அவர்கள் இருவர் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹ் (ரலி) முஆத் இப்னு அஃப்ரா (ரலி) அவர்களும் ஆவர்.

புஹாரி :3141 அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி).

Saturday, February 16, 2008

நிராகரிப்போரின் உடமைகளை தீயிட்டுக் கொளுத்துதல்.

1140. (கொடுஞ்செயலாளர்களுமான) பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை (போர்க் கால நடவடிக்கையாக) புவைரா தோட்டத்தை எரித்துவிட்டார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டிவிட்டார்கள். எனவேதான் 'நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதும், அல்லது அவற்றின் வேர்களில் நிற்கும்படிவிட்டுவிட்டதும் எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்தி விடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)'' என்னும் (திருக்குர்ஆன் 59:05) இறைவசனம் அருளப்பட்டது.

புஹாரி :4031 இப்னு உமர் (ரலி).

Friday, February 15, 2008

போரில் பெண்கள் குழந்தைகளை கொல்லத் தடை.

1138. நபி (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

புஹாரி : 3014 இப்னு உமர் (ரலி).

1139. 'அப்வா' என்னுமிடத்தில் அல்லது 'வத்தான்' என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, 'இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்களின் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :3012 அஸ்ஸப்பின் ஜத்தாமா (ரலி).

Thursday, February 14, 2008

போர்க்களத்தில் பொறுமை.

1136. எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3026 அபூஹுரைரா (ரலி).

1137. நான் உமர் இப்னு உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) ஹரூரிய்யாவுக்குப் புறப்பட்டபோது கடிதம் எழுதியிருந்தார்கள். அதை நான் படித்துக் காட்டினேன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:


இறைத்தூதர் (ஸல்) அவர்கள், எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாள்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை போர்க்களத்தில் இறங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.


பிறகு, நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, 'எதிரிகளைப் (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாக்கும்படி கேளுங்கள். (வேறு வழியின்றி போர்க்களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். மேலும், 'சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது' என்பதை அறிந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு, 'இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! (குலங்கள் அனைத்தும் சேர்ந்து திரட்டி வந்துள்ள) படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே! இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!'' என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

புஹாரி :3024-3025 ஸாலிம் அபூநள்ர் (ரலி).