Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Monday, November 24, 2008

நரகில் பெண்கள் அதிகம்.

1743. நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5196 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

1744. (பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5096 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

Tuesday, September 09, 2008

கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்.

1573. இம்ரானின் மகள் மர்யம் தான் (அப்போது) உலகின் பெண்களிலேயே சிறந்தவராவார். (தற்போது) உலகப் பெண்களிலேயே சிறந்தவர் கதீஜா ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 3432 அலீ (ரலி).

1574. ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லா வகை உணவுகளை விடவும் 'ஸரீத்' உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.''என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3411 அபூ மூஸா (ரலி).

1575. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3820 அபூஹூரைரா (ரலி).

1576. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், 'நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களுக்கு நற்செய்தி எதுவும் கூறினார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம்! (சொர்க்கத்தில்) கூச்சல் குழப்பமோ, களைப்போ இல்லாத, துளையுள்ள முத்து மாளிகை ஒன்றை (இறைவன் அவர்களுக்கு அளிக்க இருப்பது) கொண்டு (நற்செய்தி கூறினார்கள்)'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 3819 இஸ்மாயீல் (ரலி).

1577. கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் வேறெந்த மனைவியின் மீதும் ரோஷப்பட்டதில்லை. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அவரைப் பார்த்ததில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (புகழ்ந்து பேசி) வந்தார்கள். அவர்கள் சில வேளைகளில் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து, பிறகு அதை கதீஜாவின் தோழிகளிடையே (பங்கிட) அனுப்பி விடுவார்கள். சில வேளைகளில் நான் நபி (ஸல்) அவர்களிடம், 'உலகில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லாததைப் போல் நடந்து கொள்கிறீர்களே'' என்று கேட்டதுண்டு. அப்போது அவர்கள், 'அவர் (புத்திசாலியாக) இருந்தார்; (சிறந்த குணமுடையவராக) இருந்தார். (இப்படி, இப்படியெல்லாம் இருந்தார்.) மேலும், எனக்கு அவர் வாயிலாகத்தான் பிள்ளைச் செல்வம் கிடைத்தது'' என்று பதில் கூறினார்கள்.

புஹாரி : 3818 ஆயிஷா (ரலி).

1578. ஹாலா பின்த்து குவைலித் - கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி - இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வருவதற்கு அனுமதி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் (கதீஜா - ரலி - அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து கவனம் மாறி, 'இறைவா! இவர் ஹாலாவாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள். உடனே நான் ரோஷமடைந்து விட, தாடைகள் சிவந்த ஒரு குறைஷிக் கிழவியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்கு பதிலாக அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டானே (அப்படியிருக்க, இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.)'' என்று கேட்டேன்.

புஹாரி: 3821 ஆயிஷா (ரலி).

Monday, June 30, 2008

சிரமத்திலிருக்கும் அந்நியப் பெண்ணுக்கு உதவுதல்.

1408. என்னை ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து - நானே பேரீச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது. (ஒரு நாள்) நான் என் தலை மீது பேரீச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். எனக்குத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக 'இஃக், இஃக்' என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன். அவர் மக்களில் மிகவும் ரோஷக்காரராக இருந்தார். நான் வெட்கப்படுவதைப் புரிந்துகொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சென்றார்கள். நான் (என் கணவர்) ஸுபைரிடம் வந்து '(வழியில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தலையில் பேரீச்சங்கொட்டைகளிருக்க என்னைச் சந்தித்தார்கள். அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். நான் ஏறிக்கொள்வதற்காக(த் தம் ஒட்டகத்தை) மண்டியிடச் செய்தார்கள். நான் அவர்களைக் கண்டு வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிட பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்தது தான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது'' என்று கூறினார். (இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும் பகுதியை நானே மேற்கொண்டு வந்தேன்.) அதற்குப் பிறகு (என் தந்தை) அபூபக்ர் (ரலி) எனக்கு ஓர் அடிமையை (உதவிக்காக) அனுப்பி வைத்தார்கள். அந்த அடிமை குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.

புஹாரி : 5224 அஸ்மாபின்த் அபூபக்கர் (ரலி).

Sunday, June 29, 2008

ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி....

1407. என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) 'அலி' ஒருவர் அமர்ந்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த 'அலி', (என் சகோதரர்) அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம், 'அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணந்துகொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும், பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று சொல்வதை செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், 'இந்த அலிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒருபோதும் வர (அனுமதிக்க)க் கூடாது'' என்று கூறினார்கள். இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அலியின் பெயர் 'ஹீத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புஹாரி :4324 உம்முஸலமா (ரலி).

Wednesday, June 25, 2008

தங்களின் தேவையை நிறைவேற்ற பெண்கள் வெளியே செல்தல்.

1402. பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி(ஸல்) அவர்களின் துணைவியரான) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் இப்னு கத்தாப் (ரலி) பார்த்துவிட்டு 'சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!'' என்று கூறினார்கள். சவ்தா (ரலி) உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா (ரலி) வீட்டினுள் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) என்னிடம் இவ்வாறெல்லாம் கூறினார்கள்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு 'வஹீ' (வேத வெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது. அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் 'நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள்.

புஹாரி : 4795 ஆயிஷா (ரலி).

Tuesday, March 25, 2008

பெண்கள் எவ்வாறு பைஅத் வழங்கினர்.?

1221. ''நம்பிக்கையாளர்களே! (இறைமறுப்பாளர்களிலுள்ள) பெண்கள் நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்து) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 60:10 வது) வசனம் முழுமையாக அருளப்பெற்ற காரணத்தினால் தம்மிடம் ஹிஜ்ரத் செய்துவரும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் (இணைவைக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்' என்று) இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கிறவர் சோதனை செய்யப்பட்டுவிட்டார் என்று முடிவு செய்யப்பட்டது இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டபோது அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'உங்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிவிட்டேன். நீங்கள் செல்லலாம்'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (உறுதிப் பிரமாணம் வாங்கியபோது) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிடமிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெறவில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் 'உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக் கொண்டேன்' என்று வார்த்தை மட்டுமே கூறினார்கள். (பொதுவாக ஆண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது கரம் பற்றியதைப் போன்று பெண்களிடம் செய்யவில்லை'')

புஹாரி : 5288 ஆயிஷா (ரலி).

Friday, February 15, 2008

போரில் பெண்கள் குழந்தைகளை கொல்லத் தடை.

1138. நபி (ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

புஹாரி : 3014 இப்னு உமர் (ரலி).

1139. 'அப்வா' என்னுமிடத்தில் அல்லது 'வத்தான்' என்னுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது, 'இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்களின் மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே'' என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :3012 அஸ்ஸப்பின் ஜத்தாமா (ரலி).