Showing posts with label நரகம். Show all posts
Showing posts with label நரகம். Show all posts

Monday, January 19, 2009

நாவினைப் பேணுதல்.

1881. ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6477 அபூஹுரைரா (ரலி).

Friday, January 09, 2009

இறையச்சம் மற்றும் இதயசுத்தி

1865. உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். (அது) ஒன்று நரகமாயிருக்கும்; அல்லது சொர்க்கமாயிருக்கும். அப்போது 'இதுதான் உன் இருப்பிடம். இறுதியில் இங்குதான் நீ அனுப்பப்படுவாய்'' என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6515 இப்னு உமர் (ரலி).

1866. 'பனூ ஆமிர் இப்னு லுஅய்' குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப் அல் அன்சாரீ (ரலி) எனக்குக் கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலித்து வரும்படி அனுப்பினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மஜூஸிகளான) பஹ்ரைன் வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு அலா இப்னு ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா (ரலி) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி) வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, 'அபூ உபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார்' என்று நீங்கள் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்'' என்று கூற, அன்சாரிகள், 'ஆமாம், இறைத் தூதர் அவர்களே!'' என்று பதிலளித்தார்கள். 'எனவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3158 அம்ர் பின் அல் அவ்ஃப் (ரலி).

1867. செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6490 அபூஹுரைரா (ரலி).

Wednesday, December 31, 2008

இரு முஸ்லீம்கள் வாளால் போரிட்டால்....

1834. இவருக்கு (அலீ (ரலி)க்கு) உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) என்னைச் சந்தித்து 'எங்கே செல்கிறீர்?' எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் 'நீர் திரும்பிச் செல்லும்; ஏனெனில், 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, 'அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்'

புஹாரி : அஹ்னஃப் இப்னு கைஸ் (ரலி).

1835. ஒரே வாதத்தை முன் வைக்கிற இரண்டு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாதவரை இறுதி நாள் வராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3608 அபூஹுரைரா (ரலி).

1836. (ஒரு முறை) எங்களிடையே நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விடவில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்து கொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்து விட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன். தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று.

புஹாரி : 6604 ஹூதைஃபா (ரலி).

Thursday, December 25, 2008

மறுமை நாளில் மனிதர்களின் நிலை.

1817. ''நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் 'இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்)அவர்கள் 'அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 6527 ஆயிஷா (ரலி).

1818. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்றபடி உரையாற்றினார்கள். அப்போது (பின் வருமாறு) கூறினார்கள்: (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள். அல்லாஹ் கூறினான்: முதன் முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம் மீது (பொறுப்பாகி விட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம். (திருக்குர்ஆன் 21:104). மறுமை நாளில் படைப்பினங்களிலேயே முதன் முதலாக ஆடையணிவிக்கப்படுவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். மேலும், என் சமுதாயத்தாரில் சில பேர் இடப்பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான் 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்'' என்பேன். அப்போது அல்லாஹ் 'இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்பான். அப்போது நான், நல்லடியார் (நபி ஈஸா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று 'நான் அவர்களுடன் இருந்தவரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்'' (திருக்குர்ஆன் 05:117) என்று சொல்வேன். அப்போது 'இவர்கள் தம் குதிகால்(சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக் கொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும்.

புஹாரி : 6526 இப்னு அப்பாஸ் (ரலி).

1819. (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையினால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் போராகச் செல்வார்கள்.அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்று திரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும், இரவில் ஓய்வெடுக்கும் போதும், காலை நேரத்தை அடையும் போதும், மாலை நேரத்தை அடையும் போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீஅவர்களுடனேயே இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6522 அபூஹூரைரா (ரலி).

Wednesday, December 24, 2008

அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்.

1809. சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்'' என்று சொன்னது. சொர்க்கம், 'எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்'' என்று கூறியது. அல்லாஹ் சொர்க்கத்திடம், 'நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்'' என்று கூறினான். நரகத்திடம் 'நீ வேதனை(க்காகத்)தான். உன்மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்'' என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் 'போதும்! போதும்!'' என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை. மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

புஹாரி : 4850 அபூஹூரைரா (ரலி).

1810. (நரகவாசிகள் நரகத்தின் போடப்படுவார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால்) 'இன்னும் அதிகம் இருக்கிறதா? 'என்று கேட்டுக் கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தம் பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது 'போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!'' என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6661 அனஸ் இப்னு மாலிக் (ரலி).

1811. (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்'' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே! 'என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம்'' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டு விடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை'' என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன்19:39வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்'' என்றும் கூறினார்கள்.

புஹாரி : 4730 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1812. சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு 'மரணம்' (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் 'சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது. நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது'' என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்குமேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6548 இப்னு உமர் (ரலி).

1813. (நரகத்தில்) இறை மறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ளதூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6551 அபூஹுரைரா (ரலி).

1814. நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள், பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றி வைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

1815. (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றியதை செவியுற்றேன். அப்போது அவர்கள், '(இறைத்தூதர் ஸாலிஹ் (அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'அவர்களிலுள்ள துர்பாக்கியசாலி ஒருவன் முன்வந்தபோது...'' எனும் (திருக்குர்ஆன் 91:12 வது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, 'அபூ ஸம்ஆவைப் போன்று ஸாலிஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத் (தைக் கொல்வ)துக்காக முன் வந்தான்'' என்று கூறினார்கள். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு, (உடலிலிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, '(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?' என்று கேட்டபடி உபதேசித்தார்கள்.

புஹாரி : 4942 அப்துல்லாஹ் பின் ஸமா (ரலி).

1816. நபி (ஸல்) அவர்கள், 'குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு ஆமிர் இப்னிலுஹை என்பவரை, நரகத்தில் தன் குடலை இழுத்துச் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தான் முதன் முதலில் 'சாயிபா' ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்து கொண்டிருக்கும்படி) விட்டவர்'' என்று கூறினார்கள்.

புஹாரி : 3521 அபூ ஹுரைரா(ரலி).

Tuesday, December 23, 2008

நரக வேதனையின் கடுமை.

1808. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்'' என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப் படுத்தப்) போதுமானதாயிற்றே'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அப்படியல்ல) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்'' என்றார்கள்.

புஹாரி : 3265 அபூஹூரைரா (ரலி).

Tuesday, December 16, 2008

சுவனத்தின் சிறப்புகளும் சுவனவாசிகளும்.

1797. மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6487 அபூஹுரைரா (ரலி).

1798. ''எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன்'' என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், 'மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்' என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3244 அபூஹுரைரா (ரலி).

Monday, November 24, 2008

நரகில் பெண்கள் அதிகம்.

1743. நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வர்கள், (சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். எனினும், (அவர்களில்) நரகவாசிகள் (எனத் தீர்மானிக்கப்பட்டோர்) ஏற்கெனவே) நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டனர். நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5196 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

1744. (பெண்களைத் திருப்திப்படுத்துவதற்காக எதையும் செய்யத் துணிகின்ற) ஆண்களுக்கு (அந்த)ப் பெண்களை விட அதிகமாக இடரளிக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5096 உஸாமா இப்னு ஸைத் (ரலி).

Friday, October 31, 2008

குழந்தைகளின் மரணத்தில் பொறுமை காத்தவர் நிலை.

1689. ''ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :1251 அபூஹூரைரா (ரலி).

1690.இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்று விடுகின்றனர். எனவே, நாங்கள் தங்களிடம் வந்து, அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்து விடுங்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், 'இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்று, அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகு, 'உங்களில், தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாக, தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்து விடுகிற பெண்ணுக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறி விடுவார்கள்'' என்றார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலுமா?' என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க, 'ஆம்; இரண்டு குழந்தைகளை இழந்து விட்டாலும் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள்.

புஹாரி : 7310 அபூஸயீத் அல் குத்ரி (ரலி).

1691. 'பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்''

புஹாரி : 102 அபூ ஹுரைரா(ரலி) .

Friday, October 24, 2008

கூரான ஆயுதங்களை எடுத்துச் செல்லும் போது....

1679. ஒருவர் அம்பை எடுத்துக் கொண்டு பள்ளியில் நடந்ததைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் 'அதன் (கூரான) முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்வீராக!'' என்று கூறினார்கள்.

புஹாரி :451 ஜாபிர் (ரலி).

1680. உங்களில் ஒருவர் தம்முடன் அம்பை எடுத்துக்கொண்டு நம்முடைய பள்ளிவாசலில் அல்லது நம்முடைய கடைவீதியில் நடந்து சென்றால், அவர் 'அவற்றின் முனைகளை (மறைத்து)ப் பிடித்துக்கொள்ளட்டும்' அல்லது 'தம் கைக்குள் (அதன் முனையை) மூடி வைத்துக் கொள்ளட்டும்'. அவற்றில் எதுவும் முஸ்லிம்களில் யாரையும் கீறி விடக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7075 அபூ மூஸா (ரலி) .

1681. நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :7072 அபூஹுரைரா (ரலி).

Tuesday, September 23, 2008

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிள் சிறப்புகள்

1611. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாகவும் இருந்தேன். இரண்டு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகளும் இருந்தன. அதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு வானவர் என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூற 'அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலே மிகவும் நல்லவர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

புஹாரி : 1121 இப்னு உமர்(ரலி).

Tuesday, July 22, 2008

பூனைகளைக் கொல்லத் தடை.

1446. ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 3482 இப்னு உமர்(ரலி) .